india

img

உன்னாவோ தலித் சிறுமிகள் கொலைக்கு கண்டனம்.... தில்லியில் மாணவர்கள் போராட்டம்...

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதைக் கண்டித்தும், உன்னாவோ கிராமத்தில் தலித் சிறுமிகள் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தும்  வெள்ளியன்று தில்லியில் உத்தரப்பிரதேச பவனுக்கு முன்னால் போராடிய மாணவர்களை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவில் 16,13,17வயதைச் சேர்ந்த தலித் சிறுமிகள் புதன்கிழமையன்று, தங்கள் வயல்களிலிருந்து தங்கள் கால்நடைகளுக்காகத் தீவனங்கள் சேகரித்து வரச் சென்றனர். ஆயினும் இரவு ஆகியும் அவர்கள் வராததால் அவர்களுடைய குடும்பத்தினர் அவர்களைச் தேடிச் சென்றனர். அந்த சிறுமிகள் சுயநினைவின்றி வயலில் கிடந்திருக்கின்றனர். 

144 தடை உத்தரவு 
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு பல அமைப்புகள் உத்தரப்பிரதேச பவன் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. பூலான் சேனை, அகில இந்திய மாணவர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள்  ஆர்ப்பாட்டம் மேற்கொண்டன.போராடியவர்களை, தில்லி காவல்துறையினர் சுற்றி வளைத்து, நின்று கொண்டனர். போராடுபவர் களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக தண்ணீர் கேனன்களைத் தயாராக வைத்திருந்தனர். மேலும்இந்தப் பகுதியில் 114 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.சுமார் ஒரு மணியளவில் மாணவர்கள் கிளர்ச்சிப்போராட்டத்தை தொடங்கினர்.  மாணவர்கள் போராட் டத்தைத் தொடங்கிவுடனேயே காவல்துறையினர் அவர்களை இழுத்துச்சென்று பேருந்துகளில் ஏற்றி, மந்திர் மார்க் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

காவல் நிலையத்திலும் முழக்கம்
காவல்துறையினர் போராடும் மாணவர்களின் பெயர்களையும், தொலைபேசி எண்களையும் கேட்டுப் பதிவு செய்துள்ளனர், முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய இருப்பதாகவும் மிரட்டிக்கொண்டிருக்கின்றனர் என்று போராடும் மாணவர்களின் தலைவர்களான ஜேஎன்யு மாணவர் சங்கத்தைச் சேர்ந்த  டோலான், நியூஸ்கிளிக் செய்தியாளரிடம் கூறினார்.எனினும் தில்லி காவல்துறையினரின் மிரட்டலுக்குமாணவர்கள் பணிந்துவிடவில்லை. அவர்களின் ஆவேச முழக்கங்கள் தொடர்ந்தன. காவல் நிலையத்திற்குள் கைது செய்து வைக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் தங்கள் முழக்கங்களைக் கைவிடவில்லை.உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைக் கொடுமைகளுக்கு எதிராக நாங்கள்போராடிக் கொண்டிருக்கிறோம். ஆயினும் போராட்டம்தொடகிய பத்து நிமிடங்களுக்குள்ளேயே காவல்துறையினர் எங்களைக் கைது செய்துவிட்டனர். மக்கள் போராடும்போதெல்லாம், போலீஸ் விரைந்துவந்து மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதலைத் தொடுக்கிறது, அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்கிறது, போராட்டத்தை நிறுத்துவதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. இந்த அரசாங்கம் தான் ஜனநாயகப்பூர்வமாக இருப்பதாகக் கூறிக்கொள்கிறது, ஆனால் செயல்களோ வேறுவிதமாக இருக்கின்றன என்று அம்பேத்கர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முதுநிலை மாணவரும், இந்திய மாணவர் சங்க முன்னணி ஊழியருமான பிரியன்ஸ் கூறினார்.  

முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்
“2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபின், பெண்கள்,தலித்துகள், முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், வன்புணர்வை மேற்கொண்டவர்களுக்கு ஆதரவாகப் பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் ஆட்சியில் பெண்கள் கண்ணியமாக நடத்தப்படவில்லை. இத்தகைய பெண்கள் விரோதஅரசாங்கம் ஆட்சியில் தொடரக்கூடாது. முதல்வர் ராஜினாமா செய்திட வேண்டும். அதுவரை நாங்கள் போராட்டங்களைத் தொடர்வோம்.” என்று டோலான் கூறினார்.“பாலியல் வன்புணர்வுக்கு எதிராக போராடுகிற மாணவர்களை நிர்வாகம் சிறையில் அடைக்கிறது. இதன்மூலம் பெண்கள் குறித்துத் தாங்கள் கவலைப்படவில்லை என்று இந்த அரசாங்கம் உலகுக்குத் தெரிவிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து இந்த அரசாங்கம் கவலைப்படவில்லை. ஆனால்,  பொறுப்புள்ள மாணவர்களாகிய நாங்கள், பொறுப்புள்ள இந்த நாட்டின் குடிமக்களாகிய நாங்கள், அக்கிரமங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழாமல் அமைதியாக இருந்துவிட முடியாது,” என்று இந்திய மாணவர் சங்க முன்னணி ஊழியரான பரிபாஷா என்பவர் கூறினார்.

2 பேர் கைது
இதற்கிடையில் சிறுமிகள் கொலை தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக உ.பி.காவல்துறை தெரிவித்துள்ளது.                                   (ந.நி.)

;