india

img

கோவிட் 3வது அலையைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துக... ஒன்றிய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்....

புதுதில்லி:
நாட்டில் கொரோனா மூன்றாவது அலை எனும் பேரழிவு ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் மோடி அரசு உடனடியாக நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்துவதை மிகத் தீவிரமாக அமலாக்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் ஜூலை 31 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா பெருந்தொற்று
நாட்டில் கோவிட் தொற்று பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதை அதிகாரப்பூர்வ விவகாரங்களே கூட மிகத் தெளிவாக காட்டுகின்றன. மூன்றாவது பேரலை எனும் பேரழிவுமிக்க கட்டத்தை எட்டுவதை தடுக்க வேண்டுமானால் தடுப்பூசி செலுத்தும் விகிதம் பெரிய அளவிற்கு அதிகரிக்க வேண்டியது மிக மிக அவசியமானதாகும். ஏற்கெனவே 18 வயதிற்கு மேற்பட்ட மக்களில் வெறும் 10.83 சதவீதம் பேருக்கு மட்டும்தான் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசும் தடுப்பூசி பற்றாக்குறை என்று கூறி வருகின்றன. ஒன்றிய அரசு தடுப்பூசி கொள்முதல் செய்வதை மிகவும் மோசமான முறையில் மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்றத்தில், தடுப்பூசி இருப்பு தொடர்பாக ஒரே நாளில் மூன்று வெவ்வேறு விதமான - முரண்பட்ட விபரங்களை அரசு அளிக்கிறது.

மோடி அரசு உலகளாவிய முறையில் உடனடியாக கட்டாயமாக தடுப்பூசி கொள்முதல் செய்திட வேண்டும். நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தும் பணியினை துவக்கிட வேண்டும்.தொடரும் பெருந்தொற்று மற்றும் அதற்காக பல்வேறு விதங்களில் அமலாக்கப்படும் ஊரடங்குகள் ஆகியவை ஒன்றிய அரசால் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது தொடரும் தாக்குதலுக்கு இட்டுச் சென்றுள்ளது. வேலையின்மை மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் எரிபொருள் விலை உயர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இது ஒட்டுமொத்த பணவீக்கத்தை சுழல் முறையில் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது. இது மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்துக் கொண்டிருக்கின்றது. இது மக்களிடையே பசியையும் பட்டினியையும் ஊட்டச்சத்தின்மையையும் தீவிரப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் மோடி அரசு கட்டாயமாக, உடனடியாக நாட்டில் வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.7500 நேரடி பணப்பட்டுவாடா செய்திட வேண்டும். தேவைப்படும் அனைவருக்கும் இலவச உணவு தானிய தொகுப்புகளை விநியோகித்திட வேண்டும்.

பெகாசஸ்: நாடாளுமன்றத்தை சீர்குலைக்கும் பாஜக அரசு
பெகாசஸ் வேவு மென்பொருள் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிடிவாதமான முறையில் விவாதம் மேற்கொள்ள மோடி அரசு மறுத்து வருகிறது; நாடாளுமன்ற நடவடிக்கைகளையே சீர்குலைத்து வருகிறது. மிகவும் முக்கியமாக, இந்த அரசு மேற்கண்ட பிரச்சனையில் உண்மையை கூறுவதற்கு விரும்பவில்லை என்பது தெளிவாகிறது; நமது அரசியலமைப்புச் சட்டம் வரையறை செய்துள்ளபடி நாடாளுமன்றத்திற்கு பொறுப்புடன் பதில் சொல்வதற்கு இந்த அரசு தயாராக இல்லை என்பதும் தெளிவாகிறது. அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதித்துறை அதிகாரிகள், சிபிஐ அமைப்பின் முன்னாள் தலைவர், முன்னாள் தேர்தல் ஆணையர் உள்பட தனிநபர்களை வேவு பார்ப்பதற்காக இஸ்ரேலிய என்எஸ்ஓ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஆயுத வகையிலான பெகாசஸ் வேவு மென்பொருளை தமது அரசாங்கமோ அல்லது அரசாங்கத்தின் பல்வேறு விசாரணை முகமைகளோ பயன்படுத்தினார்களா என்பது தொடர்பாக பதிலளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மறுத்து வருகிறார். இது மிகப்பெரும் ஆபத்து வர இருப்பதை முன்னறிவிக்கிறது. இந்தத் தாக்குதலானது, அந்தரங்க உரிமை எனும் அடிப்படை உரிமையை மீறுவது மட்டுமல்ல; ஜனநாயக செயல்பாடுகளின் உயிர்ப்புமிக்க அமைப்புகளாகவும், அரசியலமைப்புச் சட்டக் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள அமைப்புகளாகவும் இருக்கிற நிறுவனங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலும் ஆகும். இந்த வேவு மென்பொருளை பயன்படுத்தியிருப்பது என்பது ஜனநாயகத்தையும் அதன் நிறுவனங்களையும் ஈவிரக்கமின்றி அழிப்பதாகும்.

எனவே இப்பிரச்சனையில் உண்மையை நிறுவவும், குற்றமிழைத்தோரை தண்டிக்கவும் உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுகிற அதிகாரமிக்க குழுவின் நீதித்துறை விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

அசாம் - மிசோரம் மோதல்
இரண்டு அண்டை மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் ஆகியவை மிக மோசமான முறையில் ஆயுத மோதலில் ஈடுபட்டதும் பகைமையை பரஸ்பரம் தூண்டிவிட்டுக் கொண்டதும் இதுவரை இல்லாததாகும். இச்சம்பவங்கள், ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அப்பட்டமான, முழுமையான தோல்வியே ஆகும்.  ஒன்றிய உள்துறை அமைச்சர் அந்தப் பகுதிக்குச் சென்று அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளது கூட்டத்தை நடத்திய பின்னர்தான் இத்தகைய ஒரு மோசமான சூழ்நிலைமை எழுந்திருக்கிறது. இப்பிரதேசத்தில் இத்தகைய பகைமை உணர்வுகள் தணிவதையும், அமைதி நிலைநாட்டப்படுவதையும் ஒன்றிய அரசு அவசியம் உறுதி செய்ய வேண்டும். 
அசாம் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கங்களைத்தான் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது பாஜகவால் தலைமை தாங்கப்படுகின்றது. இந்த நிலையில் ஆளுங்கட்சி அங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றது என்ற கேள்வி எழுகிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.     (ஐஎன்என்)

 

;