india

img

தீக்கதிர் உலகச் செய்திகள்....

ஈரான் மீதான பொருளாதார தடைகள் அனைத்தையும், 2015ஆம் ஆண்டு கையெழுத்தான அமெரிக்கா- ஈரான் இடையிலான அணுசக்தி உடன்பாட்டின் அடிப்படையில் முற்றாக விலக்கிக் கொள்வதாக புதிய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்க வேண்டுமென ஈரான் வலியுறுத்தியுள்ளது. மேற்கண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து 2018ல் டொனால்டு டிரம்ப் தன்னிச்சையாக வெளியேறினார். ஜோ பைடன் பதவியேற்றதும் உடன்பாட்டில் கையெழுத்திடலாம் என்று தெரிகிறது. எனினும் வெறும் கையெழுத்து மட்டும் தீர்வல்ல என ஈரான் கூறியுள்ளது.

                                                                    ********************

அமெரிக்காவால் சிதைக்கப்பட்ட லிபியாவில் ஒரு தேசிய இடைக்கால அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. அதை நடத்துவதற்கான ஒருஇடைக்கால பிரதமரை தேர்வு செய்வதற்கான ஐ.நா.சபையின் லிபிய அரசியல் பேச்சுவார்த்தைக்குழுவின் கூட்டம் துவங்கியுள்ளது.

                                                                    ********************

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், இந்தாண்டு செலுத்தவுள்ள டிராகன் எனும் விண்கலத்தில், விண்வெளிக்கு சுற்றுலா போல மனிதர்களை அழைத்துச் செல்ல நான்கு இருக்கைகளை ஒதுக்கியுள்ளது. இவை அனைத்தையும் அமெரிக்கபெரும் கோடீஸ்வரர் ஜார்டு ஐசக்மேன் விலை கொடுத்து வாங்கியுள்ளார். 

                                                                    ********************

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தின் டேவிஸ் நகரில் இந்தியாவால் பரிசளிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த 294 கிலோ எடையுள்ள மகாத்மா காந்தி சிலையைமர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

                                                                    ********************

துருக்கியில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி புதிய விதிகளை உருவாக்க வேண்டியதேவை ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரெசப் தயீப்எர்டோகன் கூறியுள்ளார். 2017ல் தான் துருக்கி அரசியலமைப்புச் சட்டம் சீர்திருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                    ********************

மியான்மரில் ராணுவ சர்வாதிகாரிகள் கலகம் நடத்தி ஆட்சியை கைப்பற்றியிருப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடத்தி விவாதித்தது. நவம்பரில் நடந்ததேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றதை அங்கு உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவரான பிரிட்டிஷ் தூதர் பார்பரா உட்வர்டு கூறினார்.

                                                                    ********************

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒருஇந்திய அமெரிக்கராவார்.  சென்னை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் அணுசக்தி பொறியியல் படித்த பவ்யா அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

                                                                    ********************

எகிப்தின் பழங்கால தொல்லியல் மையங்களில் ஒன்றான தபோசிரிஸ் மக்னா எனுமிடத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ‘மம்மி’கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உடலில் நாக்குமட்டும் தங்கத்தால் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இறந்தபிறகு அவர்கள் பேசுவார்கள் என்றுகருதி தங்கத்தால் நாக்கு செய்து வைக்கும் பழக்கம்இருந்திருக்கலாம் என கருதுவதாக எகிப்திய தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

                                                                    ********************

இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு முதல் கட்ட கோவிட் தடுப்பூசி மருந்துகள் பத்து லட்சம் புட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை ஜோகன்னஸ்பர்க் விமான நிலையத்தில் ஜனாதிபதி சிரில் ராம்போஷா நேரடியாக பெற்றுக் கொண்டார். சீரம் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் தடுப்பு மருந்து இது. இம் மாத இறுதியில் மேலும் 5 லட்சம் புட்டிகள் அனுப்பப்படவுள்ளன.

;