india

img

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்....

புதுதில்லி:
2021 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார். 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 29 அன்றுதுவங்கி நடைபெற்று வருகிறது. துவக்க நாளில் ஜனாதிபதி உரையை 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்த புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. இந்நிலையில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

எந்த முன்னேற்பாடும் செய்யப்படாமல் மத்திய பாஜக அரசு அமல்படுத்திய கொரோனா பரவல் தடுப்புஊரடங்கால் ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள், சிறுதொழில்முனைவோர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இவர்களுக்கான நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.  கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் பல்வேறு துறையினரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் தொழில் துறையும் மக்களுக்கான உள்கட்டுமானத் திட்டங்களும் முற்றிலும் முடங்கிய நிலையில், அதனை மேம்படுத்தும் வகையில் பொது உள்கட்டுமானத் திட்டங்களில் அதிகம் செலவிடப்படும் என்றும், இதற்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு வட்டி மானியத்துடன் சிறப்புக் கடன் உதவி, தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி, மேம்பாட்டுக்குத் தேவையான நிதியுதவி, ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான சலுகைகள் போன்றவையும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மக்களின் கைகளில் பணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதே பொருளாதாரத்தையும் அவர்களது வாழ்க்கை நிலையையும் மீட்டெடுக்க ஒரே வழி என்று பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மத்திய பாஜக அரசோ, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது. ஏழை எளிய மக்கள், சிறுதொழில்முனை வோர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மத்திய பட்ஜெட் அமைய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். 
 

;