india

img

போராடும் விவசாயிகளுடன் பேசி தீர்வு காணுங்கள்... மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்.....

புதுதில்லி:
கவுரவம் பார்க்காமல் போராடும் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வுகாணுங்கள். வேளாண் சட்டங்களைத் திருத்தக்கூடாது என்பதற்கு அவை ஒன்றும் மதநூல்கள் அல்ல. விவசாயிகளுடன் பேசி ஒரு தீர்வுக்கு மத்திய அரசு வர வேண்டும். எதிர்க்கட்சி வரிசையில் பாஜகவும் ஒருநாள் அமரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி. தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மக்களவையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பேசியதாவது:

 மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திருத்தம் செய்யக்கூடாது என்பதற்கு அவை ஒன்றும் மதம் சார்ந்த வேதநூல்களோ புனித நூல்களோ அல்ல. நான் இரு கரம் கூப்பி உங்களிடம் கேட்கிறேன். விவசாயிகள் பிரச்சனையில் கவுரவம் பார்க்காதீர்கள். இது நம்முடைய தேசம். நாம் அனைவரும் இந்த தேசத்தை சார்ந்தவர்கள். நாம் இந்த தேசத்தை சார்ந்தவர்களாக இருந்தால்,நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். விரைவில் தீர்வோடுவாருங்கள்.வேளாண் சட்டங்களை விவசாயிகள் திரும்பப் பெறக் கோரினால் அவர்களுடன் நீங்கள் பேசி அவர்களுக்குத் தேவையானதை ஏன் செய்ய உங்களால் முடியவில்லை? தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பரம்பரை பற்றி கேள்வி எழுப்பியது வேதனையாக இருக்கிறது.பாஜகவும் எதிர்க்கட்சி வரிசையில் ஒருநாள் அமரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த நேரத்தில் நீங்கள் எங்களுக்கு மதிப்பளித்ததை விட அதிகமாக நாங்கள் உங்களுக்கு மதிப்பளிப்போம். கடவுள் அனைவரையும் ஒரே மாதிரியான ரத்தம், சதையில்தான் படைத்துள்ளார். இது நம் நாடு, எங்களுக்கும் மதிப்பு கொடுங்கள். நாம் அனைவரும் அமர்ந்து பிரச்சனைக்குத் தீர்வு காண்போம். பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம்.மதரீதியான அடையாளங்களின் அடிப்படையில் காஷ்மீர் மக்களைப்பிரித்துப் பார்க்க வேண்டாம் எனமத்திய அரசைக் கேட்டுக்கொள் கிறேன். கடவுள் ராமர் உங்களுக்கு மட்டும் சொந்தமானவர் என நினைக்கிறீர்கள். ஆனால், ராமர் உலத்துக்கே சொந்தமானவர், நாம் அனைவருக்கும் சொந்தமானவர். இதன் அடிப்படையில்தான் முஸ்லிம்களும் புனித திருக்குர் ஆன் நூலையும் பாவிக்கிறார்கள். திருக்குர் ஆன் நூல் ஒவ்வொருவருக்கும் உரியது.இவ்வாறு அவர் பேசினார்.

;