india

img

பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்.... தலைமை நீதிபதிக்கு விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள் 500 பேர் கடிதம்....

புதுதில்லி:
இஸ்ரேல் நாட்டு ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

‘பெகாசஸ் ஸ்பைவேர்’ மென்பொருளைஅரசாங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு மட்டுமே நாங்கள் விற்போம் என்று இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம் கூறுவதால், இந்தியாவில் ஒன்றிய பாஜகஅரசுதான் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் சந்தேகமாக உள்ளது.எனவே, இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால்,  நாடாளுமன்றம் எத்தனை நாள் முடங்கினாலும் பரவாயில்லை... விளக்கம் மட்டும் அளிக்க மாட்டோம் என்று ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது.இந்நிலையில், பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் வியாழனன்று தனியாகவும், குழுவாகவும் கடிதங்களை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது:“பெண்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை வேவு பார்ப்பதற்கு ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ வேவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது என்று ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது குடிமக்களின் அடிப்படை உரிமை, வாழ்க்கை மற்றும் சுதந்திரம் மீதான கடுமையான தாக்குதல் ஆகும்.

மனித உரிமை ஆர்வலர்களும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களும் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில், அரசு உதவியுடனான இந்த சைபா் குற்ற நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பது என்பதுடிஜிட்டல் பயங்கரவாதத்துக்கு இணையான தாகும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறிய உச்சநீதிமன்ற பெண் ஊழியரின் போனும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறுஅனைத்து தரப்பு மக்களையும் பழிவாங்குவதற்கு இந்த உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.பெகாசஸ் விவகாரம் பெண்களுக்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. ஏனென்றால் அரசுக்கு எதிராகவும், அரசு அதிகார பதவிகளில் உள்ள ஆண்களுக்கு எதிராகவும் பேசும் பெண்கள் வேவு பார்க்கப்படுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை நிரந்தரமாக சிதைக்கப்படும் ஆபத்து உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. இதன்மூலம் அதிகாரமுள்ளவர்களுக்கு எதிராக பாலியல் புகார் கூற தயங்கும் நிலை ஏற்பட்டு விடும். பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் பாலின நடுநிலையையும் தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கொள்கையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.மனித உரிமை ஆர்வலர்கள் இதுபோன்ற ஹேக்கிங் மற்றும் பிற வகையான அலுவலக துஷ்பிரயோகங்களின் விளைவாக தீங்கிழைக்கும் வழக்கு, தவறான சிறைவாசம், காவல் சித்திரவதையை அனுபவித்து வருவதுடன் சிலர் மரணமும் அடைந்துள்ளனர்.பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கவலைகள் தனியுரிமைக் கான உரிமை மற்றும் அவர்களை உளவு பார்ப்பதிலிருந்து பாதுகாப்பது ஆகியவற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.எனவே, பெகாசஸ் விவகாரத்தில் தலையிட்டு, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இதுபோன்ற உளவு மென்பொருளை வாங்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான கேள்விகளை எழுப்ப உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமும் கடமையும்

உள்ளது. உச்சநீதிமன்றம் குடிமக்களுக் காகப் பேச வேண்டும். ஜூலை நடுப்பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் (என்.வி. ரமணா) பேசும்போது எங்களுக்கு உறுதியளித்ததைப் போல, ‘நீதித்துறை மூலம் நிவாரணமும் நீதியும் கிடைக்கும்’ என்று மக்கள் நம்புகிறார்கள். விஷயங்கள் தவறாக நடக்கும்போது, நீதித்துறை அவர்களுக்கு துணை நிற்கும் என்று மக்கள் கருதுகிறார்கள். இந்திய உச்சநீதிமன்றம் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பாதுகாவலர். பெகாசஸ் விவகாரத்தை கவனிப்பதால் நீதிமன்றம் எந்த நேரத்தையும் இழக்காது என்று நாங்கள் நம்புகிறோம். சட்டத்தின் ஆட்சி, நீதி, சம உரிமைகள் ஆகியவை தொடர்பான அர்த்தமுள்ள உத்தரவாதங்களை உச்சநீதிமன்றத்திடம் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே நீதிமன்றத்தை முறையிடுகிறோம். இது மக்களை இதுபோன்ற இணையப் போரிலிருந்து பாதுகாக்கும் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும்.” 

இவ்வாறு கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.ரொமிலா தாப்பார், அருந்ததி ராய், அருணா ராய், அஞ்சலி பரத்வாஜ், தீஸ்தா செதல்வாட்,பிருந்தா குரோவர், ஜூமா சென், ஜெயதி கோஷ், வி. கீதா, டி.எம். கிருஷ்ணா, மனோஜ்ஜா, அனுராதா பாசின், சோயா ஹசன், நிராஜா கோபால் ஜெயல் உள்பட நாட்டின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆளுமைகள் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

;