india

img

பத்திரிகையாளர் வினோத் துவா மீதான வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்... 'அரசை விமர்சிப்பது தேசத்துரோகம் ஆகாது’ என தீர்ப்பு....

புதுதில்லி:
மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேசதுரோக வழக்கை (124A) ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூத்த பத்திரிகையாளரான வினோத் துவா கடந்த ஆண்டு, யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல் பாடுகள் குறித்த விமர்சனங்களை முன்வைத்திருந்தார். பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மரணங்களைக் கூட பிரதமர் மோடி வாக்குவங்கி அரசியலுக்குப் பயன்படுத்துகிறார் என்று அவர் கூறியிருந்தார். இதற்காக, பாஜக பிரமுகரான அஜய் ஷ்யாம் அளித்த புகாரின்பேரில்,இமாசல பிரதேச பாஜக அரசின் காவல்துறை வினோத் துவா மீது தேசத் துரோக (124A) பிரிவு உட்பட மொத்தம்4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய் தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிவினோத் துவா உச்சநீதிமன்றத்திற்கு சென்றதுடன், தன்னைக் கைது செய்வதற்கும் அவர் தடை கோரியிருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு, வினோத் துவாவை கைது செய்ய, கடந்த 2020அக்டோபரில் இடைக்காலத் தடைவிதித்திருந்த யு.யு. லலித், வினீத் சரண்அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, வியாழனன்று இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில், வினோத் துவா மீதான தேசதுரோக வழக்கை அதிரடியாக உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தேசத்துக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலான விமர்சனங்கள், வன்முறைக்கு ஆதரவுதெரிவிக்கும் கருத்துகள் ஆகியவைதான் தேசதுரோக சட்டத்தின் கீழ் வரும்.அப்படி எதுவும் இல்லாதவை தேசத்துரோக சட்டத்தின் கீழ் வராது என்று கூறியுள்ள நீதிபதிகள், அரசுகள் மீதான விமர்சனங்களே தேசவிரோத குற்றங் கள் ஆகாது என்ற 1962-ம் ஆண்டின் கேதார்நாத் சிங் வழக்கின் தீர்ப்பு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

;