india

img

உத்தரப்பிரதேச மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டமுன்வடிவை தடுத்து நிறுத்துக... மாதர் சங்கம் உட்பட 139 அமைப்புகள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்....

புதுதில்லி:
உத்தரப்பிரதேச அரசு கொண்டுவந்துள்ள உத்தரப்பிரதேச மக்கள்தொகைக் கட்டுப்பாடு சட்டமுன்வடிவுக்கு எதிராக மாதர் சங்கங்களின் சார்பில் குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானதும் பெண்களுக்கு எதிரானதுமான இந்த சட்டமுன்வடிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டமுன்வடிவானது, இரு குழந்தைக்கு மேல் உள்ளவர்கள் நகர்மன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட முடியாது என்றும், அவர்கள் அரசாங்க வேலைக்குத் தகுதியற்றவர்கள் என்றும், கல்வி, சுகாதாரம் மற்றும் இதர சமூகப் பாதுகாப்பு உதவிகளைப் பெறவும் முடியாது என்றும் கூறுகிறது.இந்தச் சட்டமுன்வடிவிற்கு கீழே கையொப்பமிட்டுள்ள பெண்கள், மாதர் அமைப்புகள், தனிநபர்கள், எங்கள்  எதிர்ப்பினைப் பதிவு செய்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவானது பெண்களின் பிள்ளைபெறும் உரிமையை, மனித உரிமையை  மீறும் ஒன்றாகும். இந்த உரிமையானது சர்வதேச அளவில் மனித உரிமைகள் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இதில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது.

மேலும் இந்தியா 179 நாடுகளுடன் சேர்ந்து கெய்ரோவில் நடைபெற்ற 1994 சர்வதேச மக்கள்தொகை மற்றும் வளர்ச்சித் திட்ட நடவடிக்கை மாநாட்டில் வரையறுக்கப்பட்ட பிள்ளைபெறும் உரிமைகளுக்கு எதிரான ஒன்றாகும்.  இந்தச் சட்டத்தின் 7.1ஆவது பிரிவின் கீழ் பிள்ளை பெறும் உரிமை என்பதும், தனக்குக் குழந்தை வேண்டுமா என்பதும், எப்போது வேண்டும் என்பதும் எப்படி வேண்டும் என்பதும் ஒரு பெண்ணால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயமேயொழிய அதனை எந்த அரசும் தடை விதித்திட முடியாது.  இந்த அணுகுமுறையானது அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிமுகப்படுத்தி நிறைவேற்றிய நம்முடைய 2000 தேசிய மக்கள்தொகைக் கொள்கையிலும் பிரதிபலிக்கிறது.இவை எதைப்பற்றியுமே கவலைப்படாது உத்தரப்பிரதேச அரசு இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்திருக்கிறது.

வளர்ச்சிக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான, வலுக்கட்டாயமான அணுகுமுறை அளித்திடும் இந்தச்சட்டமுன்வடிவு நிராகரிக்கப்பட வேண்டும்.இது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான ஒன்று. ஏனெனில் இது அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற அரசமைப்புச்சட்டத்தின் 14ஆவது பிரிவை மீறுகிறது.இதனைத் தடுத்து நிறுத்திட தாங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உட்பட 139 அமைப்புகளும், தனிநபர்களும் கையொப்பமிட்டிருக்கிறார்கள். (ந.நி.)

;