india

img

விலை உயர்வுக்கு எதிராக கிளர்ந்தெழுக.... சிபிஎம் மத்தியக்குழு அறைகூவல்

புதுதில்லி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் இணைய வழியில் ஜனவரி 30, 31 தேதிகளில் நடைபெற்றது. அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

விவசாயிகள் போராட்டம்
படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சட்ட உரிமையை உத்தரவாதம் செய்யும் விதத்தில் அனைத்து வேளாண் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும்வலியுறுத்தி மகத்தான முறையில் விவசாயிகள் போராட்டம்தொடர்ந்து கொண்டிருப்பதை மத்தியக் குழு வாழ்த்துகிறது. இப்போராட்டத்திற்கு மத்தியக்குழு தன் முழுமையான ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் உரித்தாக்கிக் கொள்கிறது.

மிகப்பெரிய அளவிலான குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பில் லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பல லட்சம் விவசாயிகள் பங்கேற்றதையும், அத்தனை டிராக்டர்களும் அரசால் அனுமதியளிக்கப்பட்ட பாதை
களின் வழியாக அமைதியான முறையில் சென்றதையும் பார்த்தோம். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதேபோன்று அணிவகுப்புகள்  மற்றும் ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளன.குடியரசு தினத்தன்று பாஜக-வுடன் தொடர்புள்ள, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரவுடிகளால் (agent provocateurs), போராட்டத்தின் கவனத்தைத் திசைதிருப்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், ஒட்டுமொத்தஇயக்கத்தாலும், தனிமைப்படுத்தப்பட்டு, முறியடிக்கப்பட்டது.ஒடுக்குமுறை: குடியுரிமைத் திருத்தச் சட்டம் முதலானவற்றிற்கு எதிராக மகத்தான முறையில் அமைதியாக நடைபெற்ற மக்கள் இயக்கங்களைச் சீர்குலைத்திட ஆர்எஸ்எஸ்-பாஜக என்னமாதிரியான உத்தியைக் கடைப்பிடித்ததோ அதேபோன்றே இப்போதும் தில்லி எல்லைகளிலும் மற்றும் பல பகுதிகளிலும்  அமைதியான முறையில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தைத் தாக்குவதற்காக, தில்லிக் காவல்துறையினரின் அரவணைப்புடன் ஆயுதந்தாங்கிய குண்டர்கள் ஏவிவிடப்பட்டனர். எனினும், இது விவசாயிகள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியது. பெரும் திரளாக வந்த அவர்கள், ஆயுதந்தாங்கிய குண்டர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சரின் கீழ் இயங்கிடும் தில்லிக் காவல்துறையினர், தங்களுடைய வழக்கப்படியே இத்தகைய வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட கயவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. மாறாகஇவர்களால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீது கிரிமினல்வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்த 30 விவசாய சங்கத் தலைவர்கள் மீது, கலகம் செய்ததாகவும், குற்றமுறு சதி செய்ததாகவும், கொலை முயற்சி மேற்கொண்டதாகவும், கொள்ளையடித்ததாகவும் 25 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பாஜக அரசாங்கம் மற்றும் தில்லிக் காவல்துறையின் இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கையை மத்தியக்குழு கண்டிக்கிறது. இந்தப் பொய்வழக்குகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.

இதழாளர்களைக் குறிவைத்து:
 பாஜக, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா ஆகிய தன்னுடைய மாநில அரசாங்கங்கள் மூலமாகவும், தில்லியில் மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தில்லிக் காவல்துறை மூலமாகவும்  விவசாயிகள் போராட்டங்களை உண்மையான முறையில் வெளியிட்டுவரும் இதழாளர்களுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தீவிரமாக்கி இருக்கிறது. இதழாளர்களை அச்சுறுத்திப் பணியவைத்திட மேற்கொண்டுள்ள இத்தகைய இழி முயற்சிகள் பாஜக-வின் நிர்வாகத்தால் சமீபத்தில் பல வழக்குகளில் சிறிது காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், ஜனவரி 28 அன்று ஒன்பது இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தேசத் துரோகக்குற்றப்பிரிவின் கீழும் மற்றும் மதப் பகைமையைத் தூண்டியதாகவும், மதவுணர்வுகளை அவமானப்படுத்தியதாகவும், தேச ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் நடந்துகொண்டதாகவும் ஒன்பது விதமான குற்றப் பிரிவுகளின்கீழும் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 
புகழ்பெற்ற மூத்த பத்திரிகையாளர்கள் பலர்மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் புனையப்பட்டிருக்கின்றன. அவர்கள் தங்கள் சொந்த ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக இவ்வாறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  இது கண்டிக்கத்தக்கதாகும். இவை ஊடகங்களை அச்சுறுத்தி, பணிய வைப்பதற்கான முயற்சிகளாகும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்தியக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இந்த முதல்தகவல் அறிக்கைகள் அனைத்தும் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கோருகிறது.

இத்தகைய ஒடுக்குமுறையைக் கண்டித்திடும் அதே சமயத்தில், வேளாண் சட்டங்கள் அனைத்தும் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே  ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற தன் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது. பின்னர், அரசாங்கம் விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பாக விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திட வேண்டும், புதிதாக முன்மொழிவுகள் ஏதேனுமிருப்பின், நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புகளின் மூலமாக பரிசீலனை செய்வதற்காகவும், விவாதித்து உரிய முடிவுகளை மேற்கொள்ளும் விதத்திலும் வடிவமைத்திட வேண்டும்.இந்தச் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக தங்கள் வேலைகளை வகுத்துக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியக் குழு கட்டளை பிறப்பித்திருக்கிறது.

அதிகரித்துக் கொண்டிருக்கும் மக்களின் துன்ப துயரங்கள்
பாய்ச்சல் வேகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம்: இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் மேலோட்டமான மதிப்பீடேகூட, நாட்டில் ஸ்தாபனரீதியான தொழில் துறையில் மட்டுமே,  சுமார் 150 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் காட்டுகின்றன. இவற்றில் சுமார் 100 லட்சம் பட்டதாரிகளும், முதுநிலைப் பட்டதாரிகளும் அடங்குவர். முறைசாராத் தொழில்களிலும் மிகப்பெரிய அளவில் நாசம் ஏற்பட்டு, கோடானுகோடி மக்கள் பெரிய அளவில் வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள்.

விண்ணை முட்டும் விலை உயர்வு
பொருளாதார மந்தம் மற்றும் பாய்ச்சல் வேகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலைமையாலும், அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளதாலும், குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைஉயர்வாலும்,  மக்களின் துன்ப துயரங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. எரிபொருள்களின் விலைகள் கண்மூடித்தனமான முறையில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.உலகிலேயே இந்தியாவில்தான் பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.இதற்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் மத்தியக்குழு அறைகூவல் விடுக்கிறது.

பொருளாதார ஆய்வறிக்கை
மிகவும் கனமான பொருளாதார ஆய்வறிக்கை, அதன் பொருத்தப்பாட்டையே சூறையாடி இருக்கிறது. இதற்கு அப்பட்டமான சான்று, நாட்டு மக்களை கொரோனா வைரஸ் தொற்று காலத்திலோ அல்லது பொருளாதார நிலைமைகள் சீர்கேடு அடைந்துவரும் சமயத்திலோ மக்களைப்பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டதை, பொருளாதார ஆய்வறிக்கை தன்னுடைய புள்ளிவிவர தந்திரோபாயங்கள் மூலமாக மறைத்திருக்கிறது. இவ்வாறு பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் நிலைமைகள் கையாளப்பட்டிருந்த போதிலும், அவை அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுவதாகவும், அவை நாட்டு மக்களையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றியிருப்பதாகவும் போற்றிப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறது. மக்களின் வாழ்வாதாரங்கள் மீது அரசாங்கத்தின் கொள்கைகள் நாசகர விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதை இத்தகைய பிரச்சாரம் மூடி மறைக்கிறது.

மிகவும் விநோதமான விதத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தஆண்டின் முதல் காலாண்டில் மைனஸ் 23.9 சதவீதத்திற்கு சுருங்கி இருக்கிறது. 2020-21இல் இரண்டாவது காலாண்டில் அது மைனஸ் 7.5 சதவீதத்திற்கு சுருங்கிஇருக்கிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின்படி, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி இருக்கிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாகிஇருக்கிறார்கள். இதனை ஆக்ஸ்ஃபார்ம் “சமத்துவமின்மை கிருமி” (“The inequality virus”) என்று குறிப்பிட்டிருக்கிறது. நாட்டிலுள்ள மிகப்பெரிய பணக்காரர்களான, பில்லியனர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில் பல லட்சக்கணக்கான ஏழைகள்தங்கள் வேலைகளை இழந்து, தற்போது பசி-பட்டினிக் கொடுமையாலும், ஊட்டச்சத்தின்மையாலும் கடும் துன்பத்திற்கு ஆளாகி அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனினும் இவை அனைத்தும் பொருளாதார ஆய்வறிக்கையில் மறைக்கப்பட்டிருக்கிறது மற்றும் திரித்துக் கூறப்பட்டிருக்கிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு

மத்தியக்குழு, கட்சியின் அகில இந்திய மாநாட்டுடன் நிறைவடையும் விதத்திலும் கட்சியின் அடிப்படைக் கிளைகளில் தொடங்கி, உயர்மட்ட அளவு வரைக்கும் உள்கட்சி நடவடிக்கைகளை விரிவான அளவில் எடுத்துச் செல்வதற்காக, நடைமுறைப் பணிகளைத் துவக்க முடிவு செய்திருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்தபின்னர், 2021 ஜூலை முதல் வாரத்திலிருந்து கிளை மாநாடுகள் தொடங்கும்.  2021 ஏப்ரலில் நடைபெறவேண்டிய 23ஆவது அகில இந்திய மாநாடு, கொரோனா வைரஸ்தொற்று/சமூக முடக்கம் போன்றவற்றாலும், கேரளா,மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் அஸ்ஸாம் ஆகியமாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதாலும் ஒத்திவைக்கப்பட வேண்டி இருக்கிறது. மத்தியக்குழு அநேகமாக வரும் 2022 முதல் காலாண்டில், அநேகமாக பிப்ரவரி இறுதியில், 23ஆவது அகில இந்திய மாநாட்டை நடத்திட இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

தமிழில் : ச. வீரமணி  

;