india

img

திரிகோணமலை எண்ணெய் கிடங்குகளை திரும்பப் பெறுகிறது இலங்கை? மோடி ஆட்சியில் இந்தியாவுக்கு தொடரும் பின்னடைவு....

புதுதில்லி:
திரிகோணமலை எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவிடம் இருந்து திரும்பப் பெறுவதென இலங்கை அரசு திடீர் முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்திலும் இதேபோல இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை நிறுவ, இந்தியா-இலங்கை-ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், திடீரென அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான அரசு தெரிவித்தது. இந்தியாவும் ஜப்பானும் கடும் அதிருப்தியை வெளியிட்டும், தனது முடிவை மாற்றிக்கொள்ள இலங்கை தயாரில்லை. 

இந்நிலையிலேயே, இந்தியா வசம் இருக்கும் திரிகோணமலை எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் திரும்பப் பெறுவதென இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. திரிகோணமலை யார் வசம் இருக்கிறதோ அவர்களே தெற்காசியாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிற அளவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் திரிகோணமலை. இந்த திரிகோணமலையில் 2-ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் ஏராளம் உள்ளன. இதில் ஒரு பகுதியை இவ்வளவு காலமும், இந்தியாதான் பயன்படுத்தி வந்தது. ஆனால், இனிமேல் அவற்றை தாங்களே வைத்துக் கொள்வோம் என்று இலங்கை கூறியிருக்கிறது.இது தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் ராஜதந்திரநடவடிக்கைக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபின், அண்டை நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து வந்த இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளைக் கூட தொடர்ந்து நட்புறவில் தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;