india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

மசூதியை இடித்த பிறகு விசாரிக்கக் குழு!

உ.பி. மாநிலத்திலுள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த கரீப் நவாஸ் மசூதியை, ஆக்கிரமிப்பு கட்டடம் என்று கூறி, மாநில பாஜக அரசு கடந்த மே 17 அன்று இடித்துத் தரைமட்டமாக்கியது. மசூதியை இடிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மே 31 வரை தடை விதித்தும், அதனை அரசு மதிக்கவில்லை. இதுதொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஷிவாகாந்த் துவேதி தலைமையில் 3 பேர் விசாரணைக்குழுவை ஆதித்யநாத் அரசு அமைத்துள்ளது.

                                 **************

உத்தரகண்ட்டிலும் தடுப்பூசிசெலுத்துவது நிறுத்தம்!

பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் நகரத்தில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ‘எங்களிடம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு 7500 தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே உள்ளன. ஆனால் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்த தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை’ என்று மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

                                 **************

கொரோனாவுக்கு மத்தியில் ‘யாஸ்’ புயல் பெரும் சவால்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘யாஸ்’ புயல், ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், ‘யாஸ்’ புயல் பெரும் சவாலாக உள்ளது’ என்று  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துஉள்ளார். எனினும், மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                 **************

திருநங்கையர்க்குரூ.1,500 உதவித் தொகை!

கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்த நிவாரண உதவியையும் அறிவிக்காத மத்திய அரசு, முதன்முறையாக திருநங்கையருக்கு ரூ. 1,500 உதவித்தொகை அறிவித்துள்ளது.தற்போதைய சூழலில் தங்களுக்கு உதவ வேண்டும் என திருநங்கையரிடமிருந்து வந்த கோரிக்கைகளின் பேரில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                                 **************

அயோத்தி மசூதிக்கான  திட்ட வரைபடம் தாக்கல்!

இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாக, வேறொரு இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் இடம் வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் அயோத்திக்கு வெளியே தானிபூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதற்கான திட்ட வரைபடத்தை இந்திய - இ்ஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை உறுப்பினர் அப்சல் அகமதுகான் தாக்கல் செய்துள்ளார். ரூ. 89 ஆயிரம் பரிசீலனை கட்டணமும் செலுத்தியுள்ளார்.

;