india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்..

மோடி போல தலைவரை பார்ப்பது அரிது!

“எனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு தலைவர்களை பார்த்துள்ளேன். சில தலைவர்கள் ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்களில் மட்டுமே பங்கேற்பார்கள். சில தலைவர்கள் தங்களது பதவிக் காலத்தில், ஆட்சிக் காலத்தில் மட்டும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால், எல்லாக் காலத்திலும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைசிறந்த தலைவர்களைப் பார்ப்பது அரிது” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழ்ந்துள்ளார்.

                                             *****************

ஜவுளித் துறையினர் மானியத்தை நம்பக் கூடாது!

“ஜவுளித் துறையினர், ஆராய்ச்சி நிறுவனங்கள் அரசு மானியங்களைச் சார்ந்திராமல் தன்னிறைவு அடைய வேண்டும்!” என மத்திய ஜவுளி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். “தொழிலுக்கு ஆதரவளிக்க மானியம் சாராத நிதி உபகரணங்களை உருவாக்குங்கள். அத்தகைய உத்தரவாதத்தின் மூலம் வங்கிகளிடம் இருந்து நிலையான கடன் வழங்கலை உறுதிப்படுத்துங்கள்” என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

                                             *****************

சபாநாயகர் பதவி  காங்கிரசுக்குத்தான்..

“மகாராஷ்டிர மாநில கூட்டணியின் ஒப்பந்தப்படி “காங்கிரஸ்  கட்சியை சேர்ந்தவரே புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார். காங்கிரஸ் தேர்வு செய்யும் நபரை மற்ற கூட்டணிக் கட்சிகள் ஏற்கும்” என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். இதற்கு முன்பும் காங்கிரசைச் சேர்ந்த நானா படோல்தான் சபாநாயகராக இருந்தார். ஆனால், காங்கிரஸ் மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதால், அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                             *****************

உயிரிழப்புகளை  மறைக்கிறது உ.பி. அரசு!

உ.பி.யில் கொரோனா உயிரிழப்புகளை மறைத்து யோகி ஆதித்யநாத் அரசு நாடகமாடுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றம்சாட்டியுள்ளார். “மாநில அரசு தரும் தகவல்கள் உண்மையில்லை. உயிரிழப்புகளும் குறைவாகவே காட்டப்படுகின்றன. இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றும் கூறியுள்ளார்.

                                             *****************

பசுப் பாதுகாப்பு, குடும்ப கட்டுப்பாட்டுக்கு சட்டம்!

“முதலில் பசு பாதுகாப்புச் சட்டத்தையும், குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டுமே என்ற சட்டத்தையும் கொண்டு வரவுள்ளோம். அதைத்தொடர்ந்து மதம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து திருமணம் செய்வதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவோம்” என்று அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். “இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை, அதே மதத்தை சேர்ந்தவர் ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதும் லவ் ஜிகாத்-துதான்” 
என்றும் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

;