india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

                                 ******************

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் பால்கொள்முதல் மற்றும்விற்பனை அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் மாநில பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

                                 ******************

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

                                 ******************

மேட்டூர் அணை யின்  நீர்மட்டம்96.330 அடி, நீர்இருப்பு :  60.188 டிஎம்சி, நீர்வரத்து: வினாடிக்கு 764 கன அடியாக உள்ளது.

                                 ******************

முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்படும் 28 யானைகளுக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என்று பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

                                 ******************

கோவில்பட்டியைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மாரிஸ்வரன் ஜுனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                                 ******************

சென்னையை தலைமையகமாக கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில், என்சிசி-கடற்படைப் பிரிவு மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வில் சலுகை மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

                                 ******************

சமக்ரா சிக்சா திட்டத்தின்கீழ், கல்வித் துறையில் பல்வேறு தொடர்  செயல்பாடுகளுக்காக மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.7 ஆயிரத்து 622 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய கல்வி அமைச்சர்ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.

                                 ******************

நாட்டில் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் அடுத்த ஆண்டுக்குள் ஆயுஷ்மான் பாரத் நல மையங்களாகமாற்றப்பட்டு, மக்களுக்கு விரிவான மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

                                 ******************

சுயசார்பு இந்தியா இயக்கத்தின்படி, பெங்களுரூவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்கல்ஸ் நிறுவனத்தால்உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உயர்தர எம்கே-3 இலகுரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது.

                                 ******************

நாடு முழுவதும் இதுவரை 30 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன், ரயில்கள் மூலம் மாநிலங்கள் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 4 ஆயிரத்து 941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

                                 ******************

பாதுகாப்புத் துறையில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்திற்காக ரூ.498 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

                                 ******************

கொரோனா பரவல் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4.25 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

                                 ******************

கொரோனா பாதிப்புச் சூழல் காரணமாக இந்த ஆண்டு உள்நாட்டில் வசிக்கும் 60 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது.

                                 ******************

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். ரஷ்யாவின் அனஸ்தேசியா புவ்லியுசென்கோவாவை 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் பார்போரா கிரெஜ்கோவா வீழ்த்தினார்.

;