india

img

செங்கோட்டை கலவரம் : யார் இந்த தீப் சித்து?

40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான ’சம்யுக்த கிஸான் மோர்ச்சா’ (SKM) தலைநகர் தில்லியில் நடத்தும்டிராக்டர் பேரணிக்கு காவல்துறையின் அனுமதி கோரியபோதே, ‘சில சமூக விரோத சக்திகள்’ பேரணியில் ஊடுருவி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக தங்களுக்கு நம்பகமான செய்திகள் கிடைத்துள்ளன என்று காவல்துறைக்கு தெரிவித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டது. காவல்துறையின் 42 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு டிராக்டர் பேரணியை காவல்துறை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடங்களிலேயே நடத்தவும் இசைவளித்தது. தங்கள் அணிகளையும் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைப்பிடித்து அமைதியாக பேரணியில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டது. 

செங்கோட்டை கலவரம்
அதன்படி, பேரெழுச்சியுடன் டிராக்டர் பேரணி  நடைபெற்ற நிலையில், பஞ்சாபி நடிகரும், பாடகருமான தீப்சித்து, பேரணிக்கு வந்த இளைஞர்களைத் தூண்டிவிட்டு போராட்டத்துக்கு வேறுவிதமான வண்ணம் பூசியுள்ளார். வெள்ளைத்தலைப்பாகை அணிந்த தீப்சித்து செங்கோட்டைக்கு வரும் வழியில் சம்பு எல்லையில் பாதுகாப்பு காவலர்களோடு வாக்குவாதம் செய்துள்ளார். செங்கோட்டைக்கு வந்த அவர்  கால்சா கொடியைத்தனது கரங்களில் ஏந்தி,  ‘கிஸான் மஸ்தூர் ஏக்தா’மற்றும் கால்சா முழக்கங்களை செங்கோட்டை யில் எழுப்பியுள்ளார். தீப்சித்து, சில இளைஞர்களுடன் காவல்துறையினரிடம் பேசியுள்ளார்.  செங்கோட்டையில் சில இளைஞர்கள் கொடிக்கம்பங்களில் ஏறவும், கொடிகளை ஏற்றவும்  செய்ய வைத்துள்ளார். அவ்வாறு செய்த வீடியோ காட்சிகளை அவரே வெளியிட்டும் உள்ளார். இவையனைத்தையும் காவல்துறையினர் மௌன சாட்சிகளாக பார்த்துள்ளார்கள். 

யார் இந்த தீப்சித்து? 
 36 வயது இளைஞரான தீப்சித்து 2019ல் பஞ்சாப்பின் குர்தாஸ்பூரில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, சன்னி தியோல் படத்துடன் தனது படத்தையும் இணைத்து பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தவர். பாஜகவின் ஆதரவாளர். பாஜகவுக்கு ஆதரவாக ஊடகங்களிலும் இந்தப் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டவர்.  

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா செங்கோட்டையில் இந்த வெளியாட்கள் செய்த அராஜகங்களைக் கண்டனம் செய்துள்ளார். “எங்களது அமைதியான போராட்டத்தை கேவலப்படுத்த சில சமூகவிரோத சக்திகள் சில இடங்களில் வன்முறையை ஏவிவிட்டுகாவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார். பாரதிய கிசான் யூனியன் பஞ்சாப் (ராஜேவால் குழு) தலைவர்பல்பீர்சிங் ராஜேவால் “இந்த வன்முறைக் கும்பலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, பஞ்சாபிலிருந்து வந்த 32 சங்கங்களும் பேரணியின் வழித்தடங்களையும், விதிகளையும் முழுமையாக பின்பற்றியுள்ளன’’ என்று தெரிவித்துள் ளார்.

இந்த உண்மைகளைப் பற்றி கவலை கொள்ளாத பாஜகவின் குரலாக ஊடக விவாதங்களில் பங்கேற்கும் நாராயணன், வழக்கறிஞர் குருமூர்த்தி போன்றவர்கள் செங்கோட்டையில் மூவண்ணக்கொடி கீழே இறக்கப்பட்டு வேறு நாட்டின் கொடி ஏற்றப்பட்டதாகவும், இந்திய நாட்டுக்கே கௌரவக் குறைவு ஏற்பட்டுவிட்டதாகவும் முழுப்பொய்களை கூச்ச நாச்சமின்றி வாந்தி எடுக்கிறார்கள். ஆனால், செங்கோட்டை நிகழ்வுகள் பற்றி பிரதமர் நரேந்திரமோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, பாஜகவின் உயர்மட்டத்தலைவர்களோ வாயே திறக்காதது ஏன்? விவசாயிகளின் போராட்டத்தையும், தில்லி டிராக்டர் பேரணியையும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழக்க வைக்க பாஜகவின் எடுபிடி தீப் சித்து மூலம் அரங்கேற்றிய நாடகம் தங்களுக்கு ஆதரவான அதானி, அம்பானிகளின் ஊடகங்களையும் மீறி முழுமையான ஆதாரங்களுடனும், வீடியோ காட்சிகளின் மூலமும் அம்பலப்பட்டுப்போனதில் நிலைகுலைந்து போயிருக்கிறார்களோ?

செ. நடேசன் 

;