india

img

பல்வால் எழுச்சி... கிராம மக்கள் பங்கேற்புடன் முன்னிலும் பன்மடங்கு உத்வேகத்துடன் விவசாயிகள் போர்....

புதுதில்லி:
ஜனவரி 26 அன்று பல்வால் எல்லையில் டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குக் கண்டனம்தெரிவிக்கும் வகையில் பல்வாலைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களும் விவசாயிகளின் போராட்டத்தில் தங்களை முழுமையாக இணைத்துக்கொண்டிருப்பதால், இங்கே போராட்டம் முன்னிலும் பன்மடங்கு எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குடியரசு தினத்தன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து போலீசார் பல்வால் எல்லையில் போராடிவந்த விவசாயிகளை அப்புறப்படுத்தினார்கள். அரசாங்கம் அன்றையதினம் பல்வேறு எல்லைகளிலும் மேற்கொண்ட அடக்குமுறையால் விவசாயிகளின் போராட்ட உணர்வை நசுக்கிட முடியவில்லை. அதன்பின்னர் அது அனைத்துப் பகுதிகளிலும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

பல்வாலில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து
ஜனவரி 31 அன்று, பல்வாலைச் சுற்றியுள்ள 52 கிராமங்களின் பஞ்சாயத்துக்களும் ஒன்றிணைந்து ஒரு மகா பஞ்சாயத்தை நடத்தின. அதன் போராட்டத்தை முன்னிலும்பன்மடங்கு வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மகா பஞ்சாயத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டார்கள். விவசாய இயக்கத்தை, உள்ளூர் விவசாயிகளின் பங்கேற்புடனும் அண்டை மாநிலங்களிலிருந்து வந்துள்ள விவசாயிகளுடனும் இணைந்து மேலும் வலுவாக எடுத்துச்செல்வது என்றும்தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர். இங்கே மொத்தம் உள்ள 52 கிராமங்களில், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒவ்வொருநாளும் இளைஞர்கள் 10 பேரும், மற்றவர்கள் 10 பேரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் தீர்மானித்தனர்.

கடந்த இரு மாதங்களாக பல்வால் எல்லையில் போராட்டம் நடைபெற்றது. இப்போது பல்வாலைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வரும் விவசாயிகள் அதிக அளவில் போராட்டங்களில் பங்கேற்றுவருகின்றனர்.பிப்ரவரி 1 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றார்கள்.  போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருந்தநிலையிலும்கூட அதனால் விவசாயிகளிடம் எழுந்துள்ள போராட்டஉணர்வினை மழுங்கடிக்க முடியவில்லை. வரவிருக்கும் காலங்களில் இவ்வாறு பங்கேற்போர் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 6 அன்று நடைபெற்ற சாலை மறியல் போராட்டத் திலும் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றார்கள்.இதேபோன்றே ஷாஜஹான்பூரில் நடைபெற்றுவரும் போராட்டத்திலும் உள்ளூர் விவசாயிகள் தற்போது பங்கேற்கத் தொடங்கியிருக்கின்றனர்.

சிங்கூ எல்லையில் போலீசார் கம்பி வலைகளுடன் பாதுகாப்பு அரண்களை வலுப்படுத்தியிருந்தபோதிலும், அதனைத் துச்சமெனத் தூக்கிஎறிந்துவிட்டு விவசாயிகளும் மற்றும் பெண்களும் முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குமுன் தங்கள் நதிகளின் தண்ணீரைப்பகிர்ந்துகொள்வதில் சண்டையிட்டுக் கொண்டிருந்த பஞ்சாப் மற்றும் ஹரியானாவிவசாயிகள் தங்கள் சண்டைகளை யெல்லாம் மறந்துவிட்டு இப்போது ஒன்றுபட்டு நின்று போராடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இவ்வாறு சண்டையிட்டுவந்த விவசாயிகள் ஒன்றுபட்டு நிற்பதைப் பார்த்து உற்சாகமாகப் பெண்கள்முழக்கமிட்டதையும் பார்க்க முடிந்தது.

மக்களின் விருப்பத்தை அவமதிக்கும் பிரதமர்
விவசாய சங்கங்களில் ஒரு குழுவின்தலைவரான மோனிகா தாஹியா, கூறுகையில், “போலீசார் முள்கம்பிகள், ஆணிகள் பதித்தல் போன்றவற்றுடன் தடுப்பரண்களை ஏற்படுத்தியிருந்த போதிலும், அவற்றால் எல்லாம் விவசாயிகளின் போராட்ட உணர்வை நசுக்கிடமுடியவில்லை. மாறாக,நாளுக்குநாள் அது வளர்ந்துகொண்டிருக் கிறது,” என்றார்.“போலீசார், தடுப்பரண்களை அதிகப் படுத்தியிருப்பதற்கு, ஜனவரி 26 அன்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைக் காரணமாகக் கூறுகின்றனர். ஆனால் அவை, அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதென்கிற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது” என்றும் அவர் கூறினார்.  “கடந்த இரு மாதங்களாக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திவரும் நாங்கள், இவ்வாறு வன்முறையை மேற்கொண்டு ஏன் எங்கள் பெயரைக் கெடுத்துக்கொள்ளப் போகிறோம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“மோடி எங்களின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார். தன் சொந்த மக்களின் அபிலாசைகளை, தன் சொந்த மக்களின் விருப்பத்தை அவமதிக்கும் ஒரு பிரதமரை இதற்குமுன் நாங்கள் பார்த்ததே இல்லை. அவர் பிரிட்டிஷாரைப் போல் நடந்துகொண்டிருக்கிறார். முதலில் அவர் தானியங்களை விற்பனை செய்தார், பின்னர் அவர்எங்கள் சந்தைகளை (மண்டிகளை) விற்பனை செய்தார். இப்போது எங்கள் நிலங்களின் மீது அவர்கள் கண் வைத்திருக் கின்றனர்” என்று அவர் கூறினார்.

சிங்கூ எல்லையில் பெண் விவசாயிகள்
ஜனவரி 26 நிகழ்வுகளுக்குப்பின்பு, குறிப்பாக ஒரு நீதிபதி, பெண்கள் போராட்டத்தில் பங்கேற்பது குறித்து விமர்சனம் செய்தபின்பு, தற்போது போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்திருக்கிறது.தஹியா என்பவர் இது குறித்துக் கூறுகையில், “இத்தகைய நீண்டதொரு இயக்கத்தில் பங்கேற்பேன் என்று நான் எப்போதும் நினைத்தது கிடையாது. ஆனால், மோடி எங்களை இவ்வாறு வீதிகளில் இறங்கிப் போராட கட்டாயப்படுத்திவிட்டார்,” என்று கூறினார்.பித்லன் என்னுமிடத்திலிருந்து நாள்தோறும் டிராக்டரில் வந்துகொண்டிருக்கும் ராகேஷ், போராட்டக் களத்திற்கு ஒவ்வொரு நாளும் வருவதற்கு உறுதி பூண்டிருப்பதாகக் கூறினார். “போலீசார் சாலைகளில் ஆணிகளைப் பதிக்கலாம், எங்கள்மீது தண்ணீர் கேனன்களை பீய்ச்சிஅடிக்கலாம், ஆனாலும் எங்கள் கோரிக்கைகளை வெல்லும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை” என்றார்.

- தில்லியிலிருந்து ச.வீரமணி

;