india

img

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பட்டினிச்சாவிலிருந்து மீட்டிடுக.... உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுக..... ஒன்றிய அரசுக்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்....

புதுதில்லி:
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தஞ்சமடைந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர்களைப் பட்டினிச்சாவிலிருந்து மீட்டிட உச்சநீதிமன்றத் தீர்ப்பை காலதாமதமின்றி நிறைவேற்றிட வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

புலம்பெயர் தொழிலாளர்களின் உணவுப் பாதுகாப்பை ஒன்றிய பாஜக அரசு உறுதிப்படுத்துவது தொடர்பாக கடந்த 29.6.2021 அன்று உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பைஅகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வரவேற்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விபரத் தொகுப்பை இணையத்தில் பதிவேற்றாமல் தாமதப்படுத்துவது சரியானதல்ல. ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணவு பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்துவதுடன், உணவு தேவையானவர்களுக்கு கிடைக்கும் வகையில் சமுதாய சமையலறைகளை உருவாக்கி உணவு வழங்கிட வேண்டும். சுமார் 20 சதவீதம் குடும்பங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கிடைக்கும் நிலை உள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் பட்டினிச்சாவுகள் அதிகரிப்பது தொடர்பாக ஏற்கெனவே பல வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆகவே அவர்களின் உயிரைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பே தாமதமாக வந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக உறுதியுடன் நிறைவேற்றிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;