india

img

உ.பி.யில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அறிக்கை.... தேசிய மகளிர் ஆணைய தலைவியை பதவியிலிருந்து நீக்குக....

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்பு ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டதைப் போலவே இப்போது பதுவான் என்னுமிடத்தில் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கொடூரமாக ஒரு கும்பலால் பாலியல் வன்கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்குக் காரணமான கோவில் பூசாரியை  உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும்  பாதிக்கப்பட்டு பலியான பெண்ணுக்கு எதிராக அறிக்கை அளித்துள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி சந்திரமுகியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அனைத்து மாதர் அமைப்புகளும்  வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து மகளிர் அமைப்புகளான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மகளிர் தேசிய சம்மேளனம், அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கம், பிரகதிஷீல் மஹிலா சங்காதன் மற்றும் அகில இந்திய மஹிலா சன்ஸ்கிரிதிக் சங்காதன் ஆகிய அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உத்தரப்பிரதேச மாநிலம், பதுவான் என்னுமிடத்தில், ஜனவரி 3 அன்று, அங்கன்வாடி ஊழியர் ஒருவர், கோவில் பூசாரி மற்றும் அவருடைய அடியாட்களால் பாலியல் கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு மாதர் அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றன. இந்தப் பெண்மணி அவ்வப்போது அந்தக் கோவிலுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று கோவிலுக்குச் சென்ற பெண் திரும்பிவராததை அடுத்து, அவருடைய குடும்பத்தார் அவரைத் தேடத் தொடங்கினர். ஒரு காரில் மிகவும் காயங்களுடன் அவருடைய சடலம் அவருடைய வீட்டின் முன் கொண்டுவரப்பட்டு, கீழே தூக்கி எறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தபோதிலும், ஹத்ராஸ் சம்பவத்தில் காவல்துறையினர் நடந்துகொண்டதைப் போன்றே இதிலும் குடும்பத்தாரின் புகாரை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவும் இல்லை. அடுத்த நாள் அப்பெண்ணின் சடலக் கூராய்வு சான்றிதழ் வரப்பெற்று, அதில் அப்பெண்ணுடைய பிறப்புறுப்பு உட்பட பல இடங்களில் கொடுங்காயங்கள் இருந்தது தெரியவந்த பின்னர், வழக்குப் பதிவு  செய்யப்பட்டிருக்கிறது. இதன்பின்னர் பெண்ணைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய பிரதான கயவன் தலைமறைவாகிவிட்டான். அவனுடைய அடியாட்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சி 4-ஆம் பக்கம்...  

;