india

img

புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் முழு விவாதம் நடத்துக.... பி.ஆர். நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்....

புதுதில்லி:
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு முன் நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி,நடைபெற்று வருகிறது.

புதன்கிழமையன்று நாடாளுமன்ற நடத்தை விதிகள் 377ஆவதுபிரிவின்கீழ் அவசரப் பொது முக்கி யத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:

புதிய கல்விக் கொள்கையை ஒருதலைப்பட்சமாகத் திணித்துள்ள மத்திய அமைச்சரவையின் முடிவைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். அதேபோல் மத்திய மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றியிருப்பதையும் கண்டிக்கிறேன்.கல்வி நம் அரசமைப்புச்சட்டத்தின் பொதுப் பட்டியலில் இருக்கிறது. இவ்வாறுள்ள நிலையில் மத்திய அரசுபல்வேறு மாநில அரசாங்கங்களின் எதிர்ப்புகளையும், ஆட்சேபணை களையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒரு தலைப்பட்சமாக புதிய கல்விக் கொள்கையைத் திணித்திருப்பது அரசமைப்புச்சட்டத்தின் விதிகளை ஒட்டுமொத்தமாக மீறிய செயலாகும். 

இத்தகைய புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு நாடாளுமன்றத்தில் விவாதித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசுத்தரப்பில் முன்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையும் திருத்தங்களையும் அளித்திடலாம் என்றும் கூறப்பட்டது. எனினும் நாடாளுமன்றம் முழுமையாக ஓரங்கட்டப்பட்டிருக்கிறது.புதிய கல்விக் கொள்கையின் வரைவு பொது வெளியில் வெளியிடப்பட்டு அதன்மீது கருத்துக்கள் கோரப்பட்டிருந்தன. குறிப்பாக கல்வியாளர்களிடமிருந்தும் மாணவர்களிட மிருந்தும் கருத்துக்கள் கோரப்பட்டிருந்தன. மேலும், இது தொடர்பாகஅறிவுஜீவிகள் பலர் தங்கள் கருத்துக்களை அரசுக்கு அனுப்பியிருந்தனர்.  இவை எதுவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இத்தகைய அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதியக் கல்விக் கொள்கையானது பெரிய அளவில் மத்தியத்துவம், வணிகமயம் மற்றும் தகவல் தொடர்பைக் கோருவதால் இது  நாட்டின் கல்வி அமைப்புமுறையையே அழித்துவிடும்.

எனவே  மத்திய அரசாங்கத்தின் இந்தநடவடிக்கைக்கு எதிராக என்னுடைய வலுவான எதிர்ப்பினைப் பதிவு செய்கிறேன். இப்புதியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடத்தப்பட வேண்டும்என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார். (ந.நி.)

;