india

img

விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவும் பெண்களின் உரிமைகளை அங்கீகரித்திடுக.... மாதர் சங்கம் - விவசாய சங்கம் - விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிக்கை....

புதுதில்லி:
2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வேளாண்மைத்துறையில் பெண்களுக்கான வரைவு தேசியக் கொள்கையின்படி விவசாயிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் பெண்களின் உரிமைகளை அங்கீகரித்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து கோரியுள்ளன.

இம்மூன்று சங்கங்களின் சார்பிலும் வெள்ளிக்கிழமையன்று புதுதில்லி, பிரஸ் கிளப் ஆப் இந்தியா வளாகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஹன்னன்முல்லா, டாக்டர் அசோக் தாவ்லே, என்.கே.சுக்லா, விஜுகிருஷ்ணன், பாதல் சரோஜ், பி.கிருஷ்ணபிரசாத்  (அ.இ.வி.சங்கம்),மரியம் தாவ்லே, டாக்டர் அர்ச்சனா பிரசாத் (அ.இ.ஜனநாயக மாதர் சங்கம்), விக்ரம் சிங் (அ.இ.வி.தொ.சங்கம்) முதலானவர்கள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய நெருக்கடி கடுமையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 7 கோடியே 20 லட்சம் பெண்கள் வேலையிழந்து கடந்த ஐந்தாண்டுகளாக பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களை இழந்த விதவைப் பெண்கள் எவ்விதமான கடன் நிவாரணமோ அல்லது மறுவாழ்வு நிதித்தொகுப்போ எதுவும் பெறாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்தால் ‘பிஎம் கிசான் சம்மான் நிதி’ என்னும் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் அற்பத்தொகையான ஆறாயிரம் ரூபாய் கூட பெண்களுக்கு அளிக்கப்படுவதில்லை.2009 ஆம் ஆண்டில் விவசாயத்தில் பெண்களுக்காக வரைவு தேசியக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மீது உரிய பட்ஜெட் ஒதுக்கீடுகள் செய்து பெண்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும்.

அப்பரிந்துரைகள் வருமாறு:-
அனைத்து சட்டங்களிலும் பெண்களையும் இணைத்து நிலங்களில் கூட்டுப் பட்டா வழங்கிடசட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வன உரிமைகள் சட்டத்தின் கீழும் கூட்டுப் பட்டா அமல்படுத்தப்பட வேண்டும். விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களுக்கும் நிலஉரிமைகள் சட்டமாக்கப்பட வேண்டும்.நிலமற்ற விவசாயிகளுக்கு விவசாயத்திற்காக நிலம் அளிக்கும்போது பெண் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.விவசாயத்தில் ஈடுபடும் பெண்களை விவசாயிகளாகவும் விவசாயத் தொழிலாளர்களாகவும் அங்கீகரித்து, குழந்தைகள் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் வயது முதிர்ந்தோர்க்கான ஓய்வூதியம் போன்ற சமூகப்பாதுகாப்புப் பயன்கள் அளித்திட வேண்டும்.பெண் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுப் பண்ணைகள் அமைத்திட மத்திய - மாநிலஅரசுகள் மானியம் அளித்து உதவிட வேண்டும். கால்நடை வளர்ப்பு, வனவியல் பணிகள் போன்றவற்றிற்கும் மானியங்கள் அளித்து உதவிட வேண்டும்.மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை, 200 நாட்களுக்கு வேலை, குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்தல் என்ற முறையில் விரிவாக்கிட வேண்டும். இதில் மதம், சாதி, பாலினம் என பாகுபாடு காட்டக்கூடாது. குழந்தைகளுக்காக கிரீச் (Creche) வசதிகள் செய்துதரப்பட வேண்டும்.கால்நடைத் தீவனம், வன உற்பத்திப் பொருள்கள், மீன், கோழி மற்றும் கால்நடை சம்பந்தமான உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உரிய விலை ஆணையம் மற்றும் விலை ஸ்திரப்படுத்தும் நிதியம் போன்றவற்றின்மூலம் தீர்மானித்திட வேண்டும்.தற்கொலை செய்துகொண்டுள்ள விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த விதவைப் பெண்களுக்குக் கடன் தள்ளுபடி செய்திட வேண்டும். பெண்கள் குடும்பத் தலைவர்களாக உள்ள குடும்பங்களுக்கும் கைவிடப்பட்ட பெண்களுக்கும் வீடற்ற பெண்களுக்கும் சிறப்பு உதவிகள் அளித்திட வேண்டும்.

இவை அனைத்தும் அளிக்கப்பட வேண்டுமென்றால், அதற்கு இப்போது மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். சட்டப்பூர்வமாக அனைத்து விவசாயப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திட வேண்டும்.இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொண்டால்தான் பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றங்கள் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள். (ந.நி.) 
 

;