india

img

ஒன்றுபட்டு நிற்போம்.... 17 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ராகுல் பேச்சு...

புதுதில்லி:
நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் துணைத் தலைவர்  ராகுல் காந்தியின் இல்லத்தில் காலை சிற்றுண்டி அருந்திவிட்டு அங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு சைக்கிளிலும் நடந்தும் வந்த நிகழ்வு, செவ்வாயன்று நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் டிரெண்டிங் செய்தியாக மாறியிருந்தது. 

கொடிய வேளாண் சட்டங்கள், பெகாசஸ் வேவு மென்பொருள், ஈவிரக்கமற்ற பெட்ரோலியவிலை உயர்வு, கொரோனா பேரழிவை தடுக்காத மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகள்- என்பன உள்ளிட்ட இந்திய மக்களின் அடிப்படையான - எரிந்து கொண்டிருக்கிற பிரச்சனை தொடர்பாக எந்தவொரு சிறு விவாதத்தையும் நடத்துவதற்கு மறுத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்துக்கொண்டிருக்கிற; எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எந்தக் கருத்தையும் கேட்காமல் தானடித்த மூப்பாக மக்கள்விரோத மசோதாக்களை, பெரும்பான்மை எனும் மிருகப் பலத்தைக்கொண்டு கண்மூடித்தனமாக நிறைவேற்றி வருகிற, நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டம் தொடர்ந்து வலுப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே செவ்வாயன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் சந்திப்பும் போராட்ட வியூகமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஆர்ஜேடி, சமாஜ்வாதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆர்எஸ்பி,கேரள காங்கிரஸ் (மானி), லோக் ஜனதா தள்உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாயன்று காலை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனையில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, “உங்கள் அனைவரையும் அழைத்ததற்கான ஒரே நோக்கம், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே. மேலும் மேலும் நமதுஒன்றுபட்ட குரல்கள், மேலும் மேலும் சக்தி வாய்ந்ததாக மாற வேண்டியுள்ளது; நமது குரல்களையெல்லாம் ஒடுக்குவதற்காக ஆர்எஸ்எஸ் - பாஜக முயற்சித்துக் கொண்டிருக்கின்றது; அவர்களது முயற்சிகள் மேலும் மேலும் கடினமானதாக மாறிக் கொண்டிருக்கின்றது” என்று குறிப்பிட்டார்.“நமது ஒற்றுமையின் அடித்தளம் வலுவடைவதற்கான கோட்பாடுகளை நாம் அடையாளம் கண்டிருக்கிறோம்; அந்த அடிப்படையில் தொடர்ந்து ஒன்றுபட்ட போராட்டத்தை வலிமையாக முன்னெடுத்துச் செல்வோம்” என்றும் அவர்வேண்டுகோள் விடுத்தார்.இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால், ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எளமரம் கரீம், மக்களவை குழுதலைவர் பி.ஆர்.நடராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். திமுக சார்பில் கனிமொழி, ஆர்ஜேடி சார்பில்மனோஜ் ஜா, சிவசேனா சார்பில் பிரியங்கா சதுர்வேதி மற்றும் சஞ்சய் ரவுத், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், சவுகதா ராய், கல்யாண் பானர்ஜி, மவுகா  மொய்த்ரா, சமாஜ்வாதி கட்சி சார்பில் ராம்கோபால் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில்  பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டும் பகுஜன் சமாஜ் கட்சியும், ஆம்ஆத்மி கட்சியும் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தைத்தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் சைக்கிளில்நாடாளுமன்றம் சென்றனர். பல  உறுப்பினர்கள் நடைபயணமாகவே நாடாளுமன்றத்தை அடைந்தனர்.(பிடிஐ) 

படக்குறிப்பு : ராகுல் காந்தியுடன் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன்

;