india

img

பாஜக அரசும் காவல்துறையும் விடையளிக்க வேண்டிய வினாக்கள்....

புதுதில்லி:
குடியரசு தினத்தன்று டிராக்டர்கள்-விவசாயிகள் அணிவகுப்பை சீர்குலைத்திட பாஜக அரசாங்கம் மேற்கொண்ட இழிநடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே மற்றும்பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஓர் அறிக்கைவெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:குடியரசு தினத்தன்று டிராக்டர்கள்-விவசாயிகள் பேரணியை சீர்குலைத்திட, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கமும் அதன் காவல்துறையும் மேற்கொண்ட இழிநடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவர்கள் விடையளித்தாக வேண்டும்.

(1) அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பில் (சம்யுக்த கிசான் மோர்ச்சாவில்), கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஓர் அங்கம் கிடையாது. ஆனால் அந்த அமைப்புக்கு மட்டும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவிற்கு அனுமதி அளிக்காத இடங்களுக்கும் சென்றிட அனுமதி அளிக்கப்பட்டது ஏன்? சம்யுக்த கிசான் மோர்ச்சா செல்லும் பாதைகளில் கடுமையாக காவல் அரண்கள் வைக்கப்பட்ட அதே சமயத்தில், அது செல்லும் பாதைகளில் போலீசாரின் காவல் அரண்கள் வைக்கப்படாதது ஏன்? அந்த அமைப்புக்கும், காவல்துறைக்கும், பாஜக அரசாங்கத்திற்கும் இடையே உள்ள (கள்ள) உறவு என்ன?  

செங்கோட்டை செல்ல அனுமதித்தது ஏன்?

(2)சக்யுக்த கிசான் மோர்ச்சாவிற்கு அனுமதி அளிக்கப்பட்ட பாதையில் செல்வதற்கு விவசாய சங்கத்தலைவர்களுக்கு  காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தது ஏன்?  மாற்றுப் பாதையில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி செல்வதற்கும், அது செங்கோட்டையைச் சென்றடைவதற்கும் காவல்துறையினர் அனுமதி அளித்ததும் ஏன்?(3) தீப் சித்து (Deep Sidhu)வுடன் பிரதமர் மோடிக்கும், பாஜக-விற்கும் உள்ள தொடர்பு என்ன? தீப் சித்துதலைமையில் உள்ளவர்கள் செங்கோட்டையில் கொடியேற்ற அனுமதித்தது யார்? அவர்கள் ஏன் இதுவரை கைதுசெய்யப்படவில்லை?

கலைச் சின்னங்களை அழித்தவனுக்கும் பாஜக எம்.பி.க்கும் என்ன தொடர்பு

(4)செங்கோட்டையில் கலைச்சின்னங்களை அழித்திட்ட அம்ரிக் மிக்கி என்பவனுக்கும் பாஜகவிற்கும் உள்ள உறவு என்ன? அவனுக்கும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பர்வேஷ் சாகிப் சிங் வர்மாமற்றும் மனோஜ் திவாரிக்கும் உள்ள உறவு என்ன?(5) அரசு அனுமதி அளித்த 45 கிலோ மீட்டர் பாதையில் பல்வாலிலிருந்து சிகாரி வரை அமைதியாக வந்த விவசாயிகள் மீது 15 கிலோ மீட்டர் தூரம் வந்தபின் ஆத்திரமூட்டும் விதத்தில் கொடூரமான முறையில் போலீசார் தாக்குதல் தொடுத்தது, ஏன்?(6) அதே சமயத்தில் செங்கோட்டைக்குச் சென்ற அமைப்பினர்மீது அவர்களைத் தடுத்துநிறுத்த போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, ஏன்?(7) விவசாய சங்கத் தலைவர்களைச் சுட்டுக்கொல்லமுயன்ற சமூகவிரோத சக்திகளை, போராடுபவர்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். இதேபோன்று ஆத்திரமூட்டும் ஏவலாட்கள் (agent provocateurs) பலரையும் போராடுபவர்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். (இந்த நபர்களைப் போலீசாரே அனுப்பி வைத்ததாகத் தகவல்கள் வந்துள்ளன.) இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

சமூக விரோதிகளை  தடுக்காத காவல்துறை

பல்வால் காவல் கண்காணிப்பாளர் 5,6 டிராக்டர்களின் டயர்களின் காற்றைப் பிடுங்கிவிட்டுள்ளார். மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் விவசாயிகளை அடித்து நொறுக்கியிருக்கிறார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ருப்ரம் தேவதியா, வாலிபர் சங்கத் தலைவர்கள் ஜதின்மொகந்தி மற்றும் ஒடிசாவின் ராஜேஷ் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். போலீசாரின் பக்கம் நின்றசமூக விரோத சக்திகள் விவசாயிகள் மீதும், டிராக்டர்கள் மீதும் கற்களை எறிந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்த காவல்துறையினர் கடுகளவும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.விவசாயிகள் மாலை 5.30 மணிவரை அமைதியாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கைது செய்த விவசாயிகளையும், பிடித்து வைத்துள்ளடிராக்டர்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரினார்கள். அவர்கள் எவ்விதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை.

மின்சாரம், தண்ணீர் நிறுத்தம்

ஜனவரி 27 அன்று காசிபூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடத்திற்கு காவல்துறையினர் மின்சாரத்தையும் தண்ணீர் விநியோகத்தையும் வெட்டியுள்ளனர். ஜனவரி 28க்குள் இடத்தைக் காலி செய்யவேண்டும் என்று  கட்டாயப்படுத்தியுள்ளனர். ஹரியானா போலீசும், சங் பரிவாரக் கும்பலும் இணைந்து இந்நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொண்டுள்ளனர். இவர்கள் காலத்தே தலையிட்டு, கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி மேற்கண்ட சூழ்ச்சித்திட்டங்களுக்கு விவசாயிகள் இரையாகாமல் தடுத்துவிட்டனர். இதனால் அவர்கள் வலுவானமுறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். அரசின் சூழ்ச்சித்திட்டம் புஷ்வாணமாகியது. இவற்றை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிட வேண்டும்.குடியரசு தினத்தன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் புனைவதும், அவர்களைக் கைது செய்வதும் போராட்டத்தை மேலும் உக்கிரப்படுத்திடவே இட்டுச் செல்லும் என்பதை அரசு உணர வேண்டும்.விவசாய விரோத வேளாண் சட்டங்கள் ரத்துசெய்யப்படும்வரை, சட்டப்பூர்வமாக குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அசோக் தாவ்லேயும் ஹன்னன் முல்லாவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

;