india

img

அதிகாரக் குவிப்பின் பேரழிவை நாடு இன்று சந்திக்கிறது.... கொரோனா 2-ஆவது அலை தீவிரத்திற்கு பிரதமர் மோடியே முழுப் பொறுப்பு... ‘பிரசார் பாரதி’ முன்னாள் இயக்குநர் ஜவஹர் சிர்கார் கடும் விமர்சனம்....

புதுதில்லி:
கொரோனா பேரழிவைக் கட்டுப் படுத்த முடியாமல் நாடு திணறிக் கொண்டிருப்பதற்கு, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, அதிகாரம் முழுவதையும் மத்தியில் குவித்ததே காரணம்என்று ‘பிரசார் பாரதி’ முன்னாள் இயக்குநர் ஜவஹர் சிர்கார் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவலை மோடி அரசு கையாண்டுவரும் விதம் குறித்து, ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில், விரிவான கட்டுரை ஒன்றை ஜவஹர் சிர்கார் எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழுள்ள ‘பிரசார் பாரதி’ தலைவர் என்ற வகையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகபிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்திறமையைக் கவனிக்க எனக்கு ஒருதனித்துவமான வாய்ப்பு கிடைத்தது. அப்போதே, இந்திய அரசு இயந்திரங்கள் ஒரு வீழ்ச்சியை நோக்கிச் செல்வதை என்னால் நன்றாக உணர முடிந்தது.தனது அமைச்சரவை முடிவுக்கோ, தனது அமைச்சரவை சகாக்களின் கருத்துக்கோ முக்கியத்துவம் அளிக்காமல், தன்னிச்சையாக அரசுத் துறைசெயலாளர்களை வைத்து மோடிசெயல்பட்டார். இது அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் பாகுபாட்டை ஏற்படுத்தியதோடு, முழுமனதுடன் அவர்கள் செயலாற்றுவதற்கும் தடையாக அமைந்தது. தகுதிவாய்ந்த அல்லது திறமையான அதிகாரிகளை மனச்சோர்வடையச் செய்தது.

ஆர்எஸ்எஸ் தலையீடு இருந்தாலும், மூத்த பதவிகளுக்கும், வாரியங்கள் மற்றும் குழுக்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நியமனங் களை பிரதமர் அலுவலகமே கட்டுப் படுத்தியது. இதனால், அதிகாரிகள் ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கு ‘பிரதான் மந்திரி’ என்று பெயர் மாற்றுவது ஒன்றையே கொள்கையாக ஏற்றுச் செய்து வந்தனர். கவர்ச்சியான முழக்கங்கள் அதிக ஊதியம் பெறும் தொழில் முறை விளம்பர நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டன. பிரதமர் மோடியும், வியத்தகு அறிவிப்புகளால் நாட்டை திகைக்க வைப்பதிலேயே காலத்தை ஓட்டினார்.

சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய அனைத்து குறியீடுகளிலும் இந்தியாவின் செயல்திறன் தரவரிசை வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஆனால், அதிலும் மோசடி செய்யப்பட்டு புள்ளிவிவரங்கள் மறைக்கப்பட்டன. இந்தியா போன்ற ஒரு பரந்துபட்ட மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கான வேறுபாடுகளைக் கொண்ட ஒரு நாடு, ‘கூட்டாட்சி சமநிலை’மூலமாக மட்டுமே செயல்பட முடியும் என்பதை உணர மிக உயர்ந்த அறிவு தேவையில்லை. ஆனால், மோடி அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. அதிகாரங்களை மத்தியில் குவிப்பதிலேயே ஆர்வம் காட்டினார். எந்தவொரு பிரதமரும் இத்தகைய மைக்ரோ நிர்வாகத்தை முயற்சிக்கவில்லை.

கொரோனா பரவலைச் சமாளிக்க மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முகக் கவசம் மற்றும் தனிமனிதப் பாதுகாப்பு கவசம் வாங்குவது பற்றி முடிவெடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சருக்கே கூட உரிமைவழங்கப்படவில்லை. அனைத்து முடிவுகளும், பிரதமர் மோடிக்கு நம்பகமான, அமித்ஷா வசமுள்ள உள்துறை அமைச்சகத்தின் மூலமாகவே எடுக்கப்பட்டன. நிபுணர்களின் ஆலோசனைகள் குறைந்த முன்னுரிமையைப் பெற்றன. அதனால்தான், மக்களின் நலன்மீது அக்கறை உள்ள உலக நாடுகள் பல, தடுப்பூசி, ஆக்சிஜன் உற்பத்தி, அவைகளுக்கான விலை நிர்ணயம்உள்ளிட்டவற்றை பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு செயலாற்றி வந்தநேரத்தில், விலைமதிப்பற்ற தடுப்பூசி களையும், ஆக்சிஜனையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் மோடி அரசு கவனம் செலுத்தி வந்தது. நாங்கள்கொரோனாவை வென்று விட்டோம் என்று இந்திய பிரதமர் மோடி, கைகொட்டி ஆரவாரம் செய்தார்.சொந்த நாட்டின் தேவை மற்றும் விநியோகம் குறித்த ஒரு அடிப்படை கணக்கு கூட போடத்தெரியாத அரசாக இருந்து விட்டு, ‘உலகநாடுகளின் மருந்துப் பெட்டகமாக இந்தியா விளங்குகிறது’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதிலேயே கவனத்தைச் செலுத்தினார்.மேலும், கொரோனா 2-ஆவது அலை மக்களைத் தீவிரமாக தாக்க ஆரம்பித்த நேரத்தில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தேர்தல் பேரணிகளில் மும்முரமாக இருந்தனர். இதற்கு முன்பு இல்லாத ஒரு குழப்பம் நிலவிய நிலையில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் களிடமா, அல்லது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமா, யாரிடம் ஆலோசனை பெறுவது? என்று முடிவெடுக்க முடியாத நிலைக்கு அதிகாரிகள் சென்றனர். கொரோனா விஷயத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி அப்போதுதான் மத்திய அரசாங்கம் சரிந்தது. 

இன்று கொரோனா இரண்டாம் அலையால் நாடே அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது; மோடியோ கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அரசுக்குப் பொறுப்பானவர்கள் (அமைச்சர் கள்) தலைமறைவாகி விட்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பெரும்பாலும் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறையை மையமாக கொண்டது. அதை அமெரிக்காவின் ஒற்றை அதிகார முறையை தழுவி அனைத்து கட்டுப்பாட்டையும் மத்திய அரசிடம் கொண்டு சென்றகோமாளித்தனமான நடவடிக்கையால்தான் நாடு இன்று பேரழிவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, அனைத்து அதிகாரத்தையும் மத்தியில் குவித்ததன் பலனை கொரோனா பேரழிவின் மூலம் மத்தியபாஜக அரசு இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில்அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றதையடுத்து மக்கள் தங்களுக்கு முழு அதிகாரம் வழங்கி விட்டதாக நினைத்து,எந்த பிரயோஜனமும் இல்லாத பல்வேறு மாற்றங்களை மோடி அரசுசெய்தது. ஆனால் அவை தவறாகப்போகிறது என்று தெரியும் பட்சத்திலாவது திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். ஆனால், மோடி அரசு அவ்வாறு செய்வதாக இல்லை.இப்போதும்கூட நாட்டின் தேவை, கொரோனா தீயை அணைக்க வேண்டியது மட்டுமே. மாறாக கற்பனையான பதிலோ, பழிவாங்கல் நடவடிக்கைகளோ அல்ல!இவ்வாறு ஜவஹர் சிர்கார் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

;