india

img

பத்திரிகை சுதந்திரம்: 142-ஆவது இடத்தில் இந்தியா.... அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை, மியான்மரை விட மோசம்....

புதுதில்லி:
உலக அளவிலான பத்திரிகை சுதந்திர குறியீட்டு அட்டவணையில் (WorldPress Freedom index), இந்தியா மிகமோசமான வகையில் 142-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்தாண்டும், இதே 142-ஆவது இடத்தில்தான் இந்தியா இருந்தது. அதிலிருந்து ஓரிடம் கூட இந்தியா முன்னேறவில்லை.மொத்தம் 180 நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில், நேபாளம், இலங்கை ஆகிய அண்டை நாடுகள் கூட இந்தியாவைக் காட்டிலும் நல்ல நிலையில் உள்ளன. நேபாளம் 106-ஆவது இடத்திலும், இலங்கை 127-ஆவது இடத்திலும், ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் 140-ஆவது இடத்திலும் உள்ளன.பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவைக் காட்
டிலும் மோசமான நிலையில் உள்ளன.பாகிஸ்தான் 145-ஆவது இடத்திலும், வங்கதேசம் 152 இடத்திலும் வந்துள்ளன. இதே பட்டியலில், 2016-ஆம்ஆண்டில் இந்தியா 133-ஆவது இடத் தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அட்டவணையில், நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்துபின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3-ஆம் இடங்களில் உள் ளன. கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியா பட்டியலில் கடைசி இடத்தில்(180) உள்ளது.இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ (Reporters Without Borders - RSF) அமைப்பானது, இந்தியா பத்திரிகை சுதந்திரத்தில் பிரேசில், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவுடன் மோசமான வகைப்பாட்டை பகிர்ந்துகொள்வதாகவும், எந்த ஒரு பத்திரிகையாளரும், இந்தியாவில் விமர்சனங்களை வைத்தால், அவர்கள் ஆளும் பாஜக ஆதரவாளர்களால் தேச விரோதிகள் மற்றும் அரசுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டுமிரட்டப்படுகின்றனர். பாஜக செயற் பாட்டாளர்களால் உடல் ரீதியாக தாக்கப்படுகிறார்கள் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது. 

‘தீவிர வலதுசாரி இந்து தேசியவாதத்திற்கு வழிவகுத்த சித்தாந்தமான இந்துத்துவத்தை ஆதரிக்கும்இந்தியர்கள், பொது விவாதத்திலிருந்து ‘தேச விரோத’ சிந்தனையின் அனைத்து வெளிப்பாடுகளையும் தூய்மைப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களைப் பற்றி பேசவோ எழுதவோதுணிந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக வெளிப்படையான தாக்குதலுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். இந்தியப் பிரதமர் மோடியும் ஊடகங்கள் மீதான தனது பிடியை இறுக்கி வருகிறார். 2020-ஆம் ஆண்டில் நான்கு பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகள் தொடர்பாக கொல்லப்பட்ட நிலையில், பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முயற்சிக்கும் உலகின் மிக ஆபத்தான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது’ என்று எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.

;