india

img

7ஆம் கட்ட பேச்சும் தோல்வி.... 40 நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் உறுதியுடன் தொடர்கிறது...

புதுதில்லி:
போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு திங்களன்று நடத்திய 7ஆம்கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து ஜனவரி 8 அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவுவேளாண் சட்டங்களையும் மின்சார திருத்தச் சட்டத்தையும் ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய விவசாயிகள் நடத்தி வரும் பேரெழுச்சிமிக்க போராட்டம் ஜனவரி 4 திங்களன்று 40வது நாளை எட்டியது. போராட்டக்களத்தில் 60 விவசாயிகளின் உயிர் பறிபோன நிலையிலும் கூட, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மோடி அரசின் கொடிய சட்டங்களை எதிர்த்து, தில்லி செல்லும் அனைத்துச் சாலையையும் முற்றுகையிட்டு கோடிக்கணக்கில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைமையில் சுமார் 500 விவசாயிகள் அமைப்புகள் இணைந்து சம்யுக்த கிஷான் மோர்ச்சா (ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) என்ற பதாகையின்கீழ் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தை தடுக்கவும், சீர்குலைக்கவும், இழிவுபடுத்தவும், நீர்த்துப்போகச் செய்யவும் பல்வேறு முயற்சிகளை நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ளது. ஆனால் அத்தனையையும் முறியடித்து போராட்டம் எழுச்சியுடன் தொடர்கிறது. 

இந்த நிலையில், ஏற்கெனவே டிசம்பர் 30 அன்று 6வது கட்டப் பேச்சுவார்த்தை அரசுக்கும் விவசாயி களுக்குமிடையே எவ்வித முடிவும் எட்டப்படாமல் தோல்வியடைந்த நிலையில், ஜனவரி 4 திங்களன்று 7ஆம்கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது.இப்பேச்சுவார்த்தையில் சம்யுக்த கிஷான் மோர்ச்சா சார்பில் 41 விவசாயிகள் சங்கங்களின் முதன்மைத் தலைவர்கள் பங்கேற்றனர். அரசுத் தரப்பில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தகம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

விவசாயிகள் தரப்பில், மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சாரச் சட்டம் ஆகிய நான்கு சட்டங்களை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கை திட்டவட்டமாக முன்வைக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் அமைச்சர்கள் சமாதானங்களையும், விளக்கங்களையும் அளிக்க முயன்றார்கள். எனினும், விவசாயிகளின் தலைவர்கள் சட்டங்களை ரத்து செய்தால் பேசுவோம், இல்லையென்றால் பேச்சு இல்லை என திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். இதன்பின்னர் உணவுக்காக கலைந்து மீண்டும் பேசுவோம் என்று அமைச்சர்கள் எழுந்து சென்றனர்.

விவசாயிகளின் தலைவர்கள் வழக்கம்போல போராட்டக்களத்தி லிருந்து தாங்கள் எடுத்து வந்திருந்த உணவை அங்கே அமர்ந்து அருந்தினர்.  நீண்டநேரம் அரசுத்தரப்பில் மாறி மாறி ஆலோசனை நடந்தவண்ணம் இருந்தது. பின்னர் மாலை 5.15 மணியளவில் மீண்டும் விவசாயிகள் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அமைச்சர்கள் அழைத்தனர். அப்போதும் விவசாயிகள் மேற்கண்ட கோரிக்கையை மட்டுமே வலியுறுத்தினர். இந்தப்பேச்சுவார்த்தையில், கடந்த பேச்சுக்களின்போது அமைச்சர்கள் கூறிய குறைந்தபட்ச ஆதாரவிலைக்காக சட்டப்பூர்வ உத்தரவாதம் தருகிறோம்என்ற விசயத்தைக் கூட முன்வைக்கவில்லை. எப்படியேனும் விவசாயி களை சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். ஆனால்அதை நிராகரித்து விவசாயிகளின்தலைவர்கள் பேச்சுவார்த்தையி லிருந்து எழுந்தனர்.பின்னர் ஜனவரி 8 அன்று மீண்டும்பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டது. விவசாயிகள் சங்கங்களுடன் பேசிவிட்டு வருவதாக பிரதிநிதிகள் எழுந்து வந்துவிட்டனர்.(பிடிஐ)

;