india

img

பாஜக-வை முற்றிலுமாக துடைத்தெறிந்த பஞ்சாப் மக்கள்.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 4-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது; 3 மாநகராட்சிகளில் ஒரு வார்டு கூட இல்லை...

சண்டிகர்:
பஞ்சாப்பில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜக படுதோல்வியைச் சந்தித்துஉள்ளது. 

மொத்தமுள்ள 8 மாநகராட்சிகளில் 7-ஐ ஆளும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், பாஜக, அகாலிதளம் கட்சிகளுக்கு ஒரு மாநகராட்சிகூட கிடைக்கவில்லை.அபோஹர், கபூர்தலா, பதிண்டா ஆகிய 3 மாநகராட்சிகளில், பாஜகவை மக்கள் முழுவதுமாக துடைந்தெறிந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில், 8 மாநகராட்சிகளுக்கும், 109 நகராட்சிகளுக்கும் கடந்த பிப்ரவரி 14 அன்று தேர்தல் நடைபெற்றது. 2 ஆயிரத்து 832 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 9 ஆயிரத்து 222 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.இதில், மொகாலி மாநகராட்சி தவிர ஏனைய 7 மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சி தேர்தலுக்கான வாக்குகள் புதனன்று எண்ணப்பட்ட நிலையில், பதிண்டா, கபூர்தலா, ஹோசியார்பூர், பதான்கோட், படாலா, மோகா, அபோஹர் ஆகிய 7 மாநகராட்சிகளிலும் பெரும்பான்மையான வார்டுகளைக் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 

மோகா மாநகராட்சியில் மட்டும் பெரும்பான்மைக்கு 6 இடங்கள் குறைவாக காங்கிரஸ் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 50 வார்டுகளில், காங்கிரஸ் 20 இடங்களையும் சிரோமணி அகாலிதளம் 15 இடங்களையும் சுயேச்சை 10 இடங்களையும் வென்றுள்ளனர்.இவைதவிர, ஏனைய மாநகராட்சிகள் ஒன்றில் கூட பாஜக மற்றும் அதன் பழைய கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தால் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியவில்லை.50 வார்டுகளைக் கொண்ட அபோஹர் மாநகராட்சியில் 49 இடங்களை காங்கிரஸ் வென்றது. பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. கபூர்தலா, பதிண்டா மாநகராட்சிகளிலும் ஒரு இடம்கூட பாஜக-வுக்கு கிடைக்கவில்லை.படாலா மாநகராட்சியிலும் மொத்தமுள்ள 50 வார்டுகளில் 36-ஐயும், கபூர்தலாவில் 45 இடங்களையும், பதிண்டாவில் 43 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஹோஷியார்பூரில் 41 இடங்களையும், பதான்கோட் மாநகராட்சியில் 37 இடங்களையும் காங்கிரஸ் வென்றுஉள்ளது. பதான்கோட்டில் மட்டும் இரட்டை இலக்கத்தில்- அதாவது 11 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, இதற்கு அடுத்ததாக படாலா, ஹோஷியார்பூர் மாநகராட்சிகளில் தலா 4 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக 350 மாநகராட்சி வார்டுகளில் 281 வார்டுகளையும், 1,815 நகராட்சி வார்டுகளில் 1,199 வார்டுகளையும் காங்கிரஸ் வாரிச் சுருட்டியுள்ளது. பெரோஸிபூர் நகராட்சியின் 33வார்டுகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 

அகாலிதளம் 33 மாநகராட்சி வார்டுகளையும், 289 நகராட்சி வார்டுகளையும் வெல்ல, பாஜக-வோ 20 மாநகராட்சி வார்டுகளிலும், 38 நகராட்சி வார்டுகளிலும் மட்டுமே தப்பிப்பிழைத்துள்ளது.கடந்த 2015-ஆம் ஆண்டின்போது, மொத்தமிருந்த 2044 மாநகராட்சி - நகராட்சி வார்டுகளில் சிரோமணி அகாலிதளம் 813 வார்டுகள், பாஜக 348 வார்டுகள் என மொத்தம் 1161 வார்டுகளை வென்றிருந்தனர்.

அடுத்த இடத்தில் சுயேச்சைகள் 624 இடங்களைப் பிடித்தனர். காங்கிரஸ் வெறும் 253-இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை பாஜக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, கொதித்து எழுந்திருக்கும் பஞ்சாப் மக்கள் பாஜக-வையும், அக்கட்சிக்கு இவ்வளவு காலமும் வால்பிடித்துக் கொண்டிருந்த சிரோமணி அகாலிதளத்தையும் சிதறடித்துள்ளனர். அகாலிதளத்தின் கோட்டை எனப்படும் பதிண்டா மாநகராட்சியிலேயே அகாலிதளத்தை அங்குள்ள மக்கள் படுதோல்வி அடையச் செய்துள்ளனர். இந்த மாநகராட்சி உள்ளடங்கிய மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றுத்தான் அகாலிதளத்தின் மூத்தத் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், பாஜக-விடம் மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது அமைச்சர் பதவியை அண்மையில் ராஜினாமாவும் செய்தார். எனினும் பதிண்டா மக்கள் அகாலிதளத்தை நம்பத் தயாரில்லை என்பதை தேர்தல் முடிவு காட்டியுள்ளது. 53 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கு காங்கிரசை மக்கள் வெற்றிபெற வைத்துள்ளனர். 

இதனிடையே மொகாலி மாநகராட்சிக்கு வியாழனன்று நடந்த வாக்கு எண்ணிக்கையிலும் 37 வார்டுகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.அண்மையில் ஹரியானா, ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, ஹரியானாவில் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்ததற்காக, துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியையும் மக்கள் தோற்கடித்தனர். தற்போது பஞ்சாப்பிலும் அதுவே எதிரொலித்துள்ளது.

;