india

img

மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள்... மத்திய பாஜக அரசோ உணவுதானியங்களை ஏற்றுமதி செய்கிறது... அக்கறையற்றப்போக்கு என உணவு உரிமை பிரச்சாரக்குழு சாடல்....

புதுதில்லி:
மக்கள் பஞ்சம்-பட்டினியில் பரிதவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசோ உணவு தானியங்களை ஏற்றுமதிசெய்துகொண்டிருப்பது, மக்கள் மீதான அதன் அக்கறை யின்மையையே தோலுரித்துக்காட்டுகிறது என்று உணவு உரிமை பிரச்சாரக் குழு சாடியுள்ளது.

 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் உணவு தானியங்களை ஆறு மாதங்களுக்கு பொது விநியோக முறையின் கீழ் அளித்திட வேண்டும் என்று உணவு உரிமை பிரச்சாரக்குழு கோருகிறது. அரசாங்கம் ஏற்றுமதி செய்துள்ள உணவு தானியங்களை இவ்வாறு உபயோகப்படுத்தியிருந்தால் நாட்டிலுள்ள மக்களுக்கு ஓராண்டு காலத்திற்கு அளித்திருக்க முடியும் என்று அக்குழு கூறுகிறது.இதுதொடர்பாக  இக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 பெருந்தொற்று இப்போது கிராமப்பகுதிகளில் பரவியிருக்கிறது. இத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள சமூக முடக்கம் மக்கள் மத்தியில் குறிப்பாக முறைசாராத் தொழிலாளர்கள் மத்தியில் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதுள்ள நிலைமை 2020இல் இருந்ததைவிட மோசமாகும். காரணம் இப்போது ஏராளமானவர்கள் வேலையிழந்திருப்பதுடன், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு  மருத்துவ செலவுகளையும் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் (PMGKAY) ஏற்கனவே ரேசன் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் அளிக்கப்படும். ஆனால் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி முறைசாராத் தொழிலாளர்களை அதிகமாகப் பாதித்திருக்கிறது. இவர்களில் பலரிடம் ரேசன் அட்டைகள் கிடையாது.   இந்த ஆண்டு ஏராளமாக உணவுதானி யங்களை ஏற்றுமதி செய்திருப்பதிலிருந்து, பட்டினியால் வாடும் மக்கள் குறித்து அரசாங்கம் அக்கறையற்று இருப்பது முழுமையாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.2020-21ஆம் ஆண்டில் பாசுமதி அல்லாத அரிசி 13 மில்லியன் டன்களுக்கு அதிகமாகவும், கோதுமை 2 மில்லியன் டன்களுக்கு அதிகமாகவும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

இதனை பட்டினிகிடக்கும் மக்களுக்கு மாதத்திற்கு 5 கிலோகிராம் உணவு தானியம் என்ற முறையில் ஓராண்டுக்கு 25 கோடி மக்களுக்கு வழங்கியிருக்க முடியும். உண்மையில் இவ்வாறு அரிசி கிலோ கிராம் 27ரூபாய் என்ற விலையில்தான் ஏற்றுமதி செய்யப்பட்டிரு க்கிறது. இது இந்திய உணவுக் கார்ப்பரேசன் அரிசிக்கு நிர்ணயித்துள்ள விலையான கிலோவிற்கு 37 ரூபாய் என்பதைவிடக் குறைவாகும். இந்திய உணவுக் கார்ப்பரேசனின் கிடங்குகளில் 100 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் இருப்பு இருந்துவருகிறது.இவற்றிலிருந்து அரசாங்கம் பட்டினி கிடக்கும் மக்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பது நன்கு தெரிகிறது. மாறாக அது குறைந்த விலைக்காவது உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதிலேயே சந்தோஷத்தைப் பெற்றிருக்கிறது. அல்லது சென்ற ஆண்டு செய்ததைப்போன்று ‘எத்தனால் உற்பத்தி’க்காகப் பயன்படுத்துதல் போன்ற இதர நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;