india

img

பெகாசஸ் தொழில்நுட்பம் உலகிற்கே ஆபத்தானது... வழக்கமான உளவு வேலைதான் என்று கடந்து சென்று விட முடியாது...

புதுதில்லி:
இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓநிறுவனம் தயாரித்த ‘பெகாசஸ்ஸ்பைவேர்’ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் 300க்கும்மேற்பட்டோர் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர்ராகுல் காந்தி, மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக தேர்தல் வியூகங்களை வகுத்தளித்த பிரசாந்த் கிஷோர், 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் தேர்தல் விதிமீறல்களைப் பகிரங்கமாக கண்டித்த முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக்லவாசா, உச்ச நீதிமன்ற முன்னாள்தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண்,அவரின் உறவினர்கள், மருத்துவவல்லுநர் ககன்தீப் காங், ஹரி மேனன் மற்றும் ‘தி வயர்’ இணையதள பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த்வரதராஜன் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர்கள், வேவு பார்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

அரசாங்கங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு மட்டுமே ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ உளவு மென்பொருளை விற்பனை செய்ததாக என்எஸ்ஓ நிறுவனமும், இஸ்ரேல் நாடும் கூறியிப்பதால், இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசுதான் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ மூலம் தங்களுக்குஎதிரானவர்களை வேவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்; உச்சநீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் விசாரணைநடைபெற வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில்தான், ‘பெகாசஸ்ஸ்பைவேர்’ மென்பொருளை, வழக்கமான ஒரு உளவு மென்பொருளாகப்பார்க்க முடியாது; அது ஒரு தொழில்நுட்பப் பயங்கரவாதம்; உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ஹரிஹரசுதன் தங்கவேலு போன்ற ‘சைபர்’ தொழில்நுட்பப் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித் துள்ளனர். அதில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது:பெகாசஸ் ஸ்பைவேர் ஒரு ‘ஜீரோகிளிக் மென்பொருள்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, போனுக்கு உரியவரின் எந்த அனுமதியும் தேவைப்படாமலேயே அந்த போனில் ஊடுருவக்கூடியது. அது வாட்சப் செய்தியாக இருக்கலாம், மின்னஞ்சலாக இருக்கலாம், அழைப்பாக இருக்கலாம், அல்லது ஒரு சாதாரண மிஸ்ட்காலாக இருக்கலாம். அதன்மூலமேஊடுருவி விடும். அதேபோல ஊடுருவலை ஏவி விட்டவரின் உத்தரவுக்குக் காத்திருக்காமல், அவர் விரும்பும் தகவல்களை தானாகச் சேகரித்து அளிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. ஆரம்ப நிலைத் தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு, தேவையான தகவல் உருவல்என மூன்று கட்டமாக இந்த ஊடுருவலை நிகழ்த்தும் பெகாசஸ், எதிர்கால நடவடிக்கைகளை மட்டுமல்லாமல், கடந்த காலத் தகவல்களிலிருந்து விவரங்களைத் திரட்டக்கூடியது. ஜி.பி.எஸ். அமைப்பு, சுற்றுப்புறஒலி, புகைப்படம் எடுத்தல், தகவல் எனப் பலவித வழிகளில் இருந்து போனுக்கு உரியவர் தொடர்பான தகவல்களை சேகரிக்கக் கூடியது.

இவை அனைத்தும் போனுக்கு உரியவர் அறியாமலேயே நடைபெறுகிறது என்பது மட்டுமல்லாமல் வேலை முடிந்ததும் மென்பொருள் தானாக வெளியேறிவிடும். அல்லது பிரச்சனை என்றால் தன்னைத்தானே தற்கொலை செய்துகொண்டு வேவுபார்த்ததற்கான சுவடே இல்லாமல் செய்துவிடும் என்று கூறப்படுகிறது. அதாவது, 60 நாட்கள் தனது சர்வருடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனாலோ, இல்லை பயனருக்கு ஏதேனும் சந்தேகம் வரும் பட்சத்திலோ அல்லது பயனர் வலைத்தளங்களில் பெகாசஸ் குறித்துத் தேடத் துவங்கினாலோ எச்சரிக்கையாகி தானாக நீங்கிக் கொள்ளும் திறன் கொண்டது என்றுகூறப்படுகிறது.

இவையெல்லாவற்றையும் வைத்துத்தான், பெகாசஸ் மென் பொருள் மற்ற செயலிகள் போல அல்ல, அது ஒரு பேய் என்று, சைபர்பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன் தங்கவேலு தனது முகநூல் ப கத்தில் பதிவிட்டுள்ளார்.“இது ஓர் உளவு நிரல் (ஸ்பைவேர்). மொபைலில் ஊடுருவியதும் பிற வணிக செயலிகள் போலதகவல்களை மட்டும் திருடுவதில்லை. காமிரா, மைக்ரோபோன், கீ போர்டு என மொத்த மொபைல்இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.மொபைலில் அழைப்புகள், எண் தொடர்புகள், எடுக்கப்படும் புகைப் படங்கள், போனுக்கு உரியவர் அனுப்பும் செய்திகள். அவர்கள் வெறுமனே தட்டச்சு செய்துவிட்டு அனுப்பாமல் டெலிட் செய்யும் செய்திகள், வலைதளங்களில் பார்க்கப்படுபவை, தேடப்படுபவை, பயனர் எந்த இடத்தில் இருக்கிறார் என அனைத்தையும் பெகாசஸ் கண்டுபிடித்து விடும். அது மட்டுமல்ல, ஸ்க்ரீன் ஷாட் மற்றும் மொபைல் கேமிரா மூலம் படம் பிடித்து தனது எஜமானனுக்கு அனுப்பி விடும். எனவேதான், பெகாசஸ் வேவு மென்பொருள் மற்ற செயலிகள் போல அல்ல, அது கண்ணுக் குத் தெரியாத ஒரு பேய்” என்று சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன் தங்கவேலு கூறியுள்ளார்.

‘பெகாசஸ் ஸ்பைவேர்’ என்எஸ்ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டாலும் இதன் பயன் பாட்டு உரிமம் இஸ்ரேல் அரசு வசமே இருக்கிறது. தங்களின் இந்தசர்வ வல்லமையை உலக நன்மைக்காகவும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும் மட்டுமே உபயோகிக்கிறோம் என இஸ்ரேல் கூறினாலும்,ஆட்சியாளர்களுக்கு எதிரானவர் களை வேவு பார்த்து அவர்களைக் காவு வாங்குவதற்கே பெகாசஸ்துணைபோகிறது என்பதுதான் உண்மையாக இருக்கிறது. சவூதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்துத் துளி தடயமில்லாமல், வெட்டிக் கொல்லப்பட்டு, கரைத்துக் காணாமல் செய்யப்பட்டதற்கு உதவியாக இருந்தது பெகாசஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வகையில், உலக அளவில் 50 ஆயிரம் செல்போன் எண்களை பெகாசஸ் மூலம் இஸ்ரேல்ஊடுருவியிருக்கிறது. இந்தியாவிலும் 300 எண்களை அது குறிவைத்திருக்கிறது.

;