india

img

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்... சிபிஎம், பத்திரிகையாளர்களின் வழக்கு அடுத்த மாதம் விசாரணை.... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு....

புதுதில்லி:
நாட்டையும் ஆளும் பாஜக அரசையும் உலுக்கியுள்ள பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிதெரிவித்துள்ளார்.இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதை பிரான்ஸைச் சேர்ந்த  ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து கண்டுபிடித்தன. இதுகுறித்த செய்தியை சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ்,கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நாட்டை உலுக்கியுள்ள பெகாசஸ் உளவு பார்த்த விவகாரம் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  ‘இந்து’ ஆங்கில நாளிதழ் முதன்மை ஆசிரியர் என்.ராம், வழக்கறிஞர் எம்.எல். சர்மா உட்பட சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மற்றும் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

பெகாசஸ் விவகாரத்தில் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த மனுக்களை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி மூத்தபத்திரிகையாளர் என்.ராம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு முறையீடு செய்தார்.இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் முதல் வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இதனிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளியன்றும்  பெகாசஸ் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. ஆனால் விவாதம் நடத்தமோடி அரசு முன்வராமல், மக்களவை, மாநிலங்களவையை ஆகஸ்ட் 2 வரை ஒத்திவைத்தது.  

;