india

img

பெகாசஸ்... நாடாளுமன்றத்தில் தொடரும் கொந்தளிப்பு... அமளிக்கிடையே மக்களவையில் இரு மசோதாக்கள் நிறைவேற்றம்....

புதுதில்லி:
பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாகநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் (திங்களன்று) நடைபெறவில்லை.. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு முழக்கங்களுக்கிடையே மக்களவையில் இரு சட்டமுன்வடிவுகள் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது.

மழைக்காலக்கூட்டத்தொடர் தொடங்கி ஒரு வாரத்திற்குப் பின்னர் நாடாளுமன்றம் மீண்டும் இன்று திங்கள்கிழமை கூடியது. எனினும் இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடிய பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு முழக்கங்கள் காரணமாக அவை திரும்பத் திரும்பஒத்திவைக்கப்பட்டு, கடைசியாக செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.மக்களவையில் உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்கான சட்டமுன்வடிவு, அறிமுகம் செய்யப்பட்டு, விவாதம்இல்லாமலேயே நிறைவேற்றப் பட்டது.

அதேபோன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தகாரணி ஒழுங்குமுறை திருத்த சட்டமுன்வடிவும் (Factoring Regulation Amendment Bill) விவாதங்கள் இன்றி நிறைவேற்றப் பட்டது. இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதன்மூலம் நுண்ணிய சிறிய நடுத்தரத் தொழில்பிரிவினர் பயன் அடைவார்கள் என்று நிதியமைச்சர் அப்போது கூறினார். பின்னர் மக்களவை ஒத்திவைக்கப் பட்டது.இதேபோன்றே மாநிலங்களவை யிலும் முதலில் 12 மணி வரை யிலும், அடுத்து 2 மணி, 3 மணி 
மற்றும் 5 மணி என்றும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 5 மணிக்கு அவை கூடியபோது, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனோஜ் ஜா ஓர் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பினார். அவர் அவையை நடத்துவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அரசாங்கம் ஒரு சுமுகமான முடிவுக்கு வரவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். இதனைஅவைத் தலைவர் பியூஷ் கோயல்மறுத்தார். தான் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஒரு கருத்தொற்று மைக்கு வருவதற்காகப் பலமுறை முயற்சித்ததாகக் கூறினார். ஆயினும் எதிர்க்கட்சியினரிடையே கருத்தொற்றுமை இல்லை என்றார்.

திருச்சி சிவா, பொதுவாக அவையின் மரபு என்பது பிரதமரோ அல்லதுஎதிர்க்கட்சித் தலைவரோ அவையில் பேசுகிறார் என்றால் அவருடைய ஒலிபெருக்கி (மைக்) ஸ்விட்ச் ஆப் செய்யப்படாது. ஆனால் இப்போது மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது அவருடைய மைக் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது என்று கூறினார்.இவ்வாறு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் அவை செவ்வாய் வரை ஒத்திவைக்கப்பட்டது.முன்னதாக மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது பெகாசஸ் பிரச்சனை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதனை அவைத்தலைவர் ஏற்கவில்லை. இதுதொடர்பாக இவர் அளித்த ஒத்திவைப்புத் தீர்மானம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று நினைவுகூர்ந்து அவர் வேண்டுகோளைத் தள்ளுபடி செய்தார்.    (ந.நி.)

                               *************

பெகாசஸ் விவகாரம் வெறுமனே அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை வேவுபார்ப்பது என்பதோடு நிற்பதில்லை. அதையும் தாண்டி இந்திய ராணுவ உயர் அதிகாரிகள், எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், இந்திய உளவுத்துறையின் மூத்த அதிகாரிகள் என பலரையும் குறிவைத்துள்ளது. 

தனது கருத்துக்கு மாற்றாக செயல்பட்ட அல்லது சிந்தித்த யாராக இருந்தாலும் அவரை பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பது என்பதை மோடி அரசு அரங்கேற்றியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

ராணுவத்தில் பதவியிலிருந்த 2 உயர் அதிகாரிகள், இந்திய உளவு அமைப்பான ‘ரா’ அமைப்பின் விவகாரங்கள் குறித்து நீதிமன்றத்திற்குச் சென்ற உளவுத்துறை முன்னாள் அதிகாரி, பதவியிலிருந்த எல்லைப்பாதுகாப்புப் படை அதிகாரிகள் இரண்டு பேர் என பலரது செல்பேசிகளில் பெகாசஸ் மென்பொருள் அவர்களுக்குத் தெரியாமலேயே நிறுவப்பட்டு, அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்கள் என்பதை ‘தி வயர்’ இணைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரை அம்பலப்படுத்துகிறது.

ஏற்கெனவே இந்தியாவில் 142 பேரின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் வேவுபார்க்கப்பட்டதை விரிவான பட்டியலுடன்  ‘தி வயர்’ ஏடு வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே மிக நெருங்கிய ராணுவ ரீதியான உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புத்துறையில் பாஜக அரசின் கொள்கைக்கு மாறான சிந்தனைகொண்ட அதிகாரிகளை குறி வைத்து பெகாசஸ் மென்பொருள் வேவு பார்த்தது.

பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேலின் என்எஸ்ஓ டெக்னாலஜிஸ் குழுமத்திடமிருந்து பெறுவதிலும் அந்த நிறுவனமே மோடி அரசுக்கு தேவையான முறையில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், ராணுவ அதிகாரிகள் என அனைவரையும் வேவு பார்க்கும் வேலையை செய்தது.

;