india

img

தொழிலாளர் வேலைநிறுத்த உரிமையைப் பறித்திடும் சட்டமுன்வடிவு மாநிலங்களவையில் நிறைவேற்றம்.... அரக்கத்தனமான சட்டம்: சிபிஎம் எம்.பி., எதிர்ப்பு....

புதுதில்லி
தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைப் பறித்திடும் அத்தியாவசியப் பாதுகாப்புப் பணிகள்சட்டமுன்வடிவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட் டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மோடிஅரசு அராஜகமாக இதனைச் செய்துள்ளது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு  விவகாரம், வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து  எழுப்பி வந்தன. இதனால் விவாதமின்றி ஒன்றிய பாஜக அரசு முக்கியமான சட்டமுன்வடிவுகளை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிக்கொண்டுள்ளது. மாநிலங்கள வையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைப் பறித்திடும் அத்தியாவசியப் பாதுகாப்புப் பணிகள் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.   

மக்களவை
ஆகஸ்ட் 5 அன்று மக்களவை வழக்கம்போல கேள்வி நேரத்துடன் துவங்கியது. ஒலிம்பிக்ஸ் போட்டியில்இந்தியா ஹாக்கி விளையாட்டில் வெண்கலப் பதக்கம்பெற்றதற்கு வீரர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தது.காங்கிரஸ் எம்.பி.,  அதிர் ரஞ்சன் சௌத்ரி , தில்லியில்தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு கொலை செய்யப்பட்டுள்ள விவகாரத்தை எழுப்பினார். எனினும் சபாநாயகர் அதனை எழுப்பிட அனுமதிக்கவில்லை.எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் தொடர்ந்ததால் அவை மாலை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாலை அவை கூடியதும் மத்தியப் பல்கலைக் கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. அவையில் இயல்பு நிலை இல்லாததால் அவையை நடத்துவது சரியல்ல என்று மணிஸ் திவாரி கூறினார். எனவே அவை மாலை4 மணி வரையிலும் பின்னர் வெள்ளி காலை வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை
மாநிலங்களவை தொடங்கியதும் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் ஒலிம்பிக்சில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.  பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகாசஸ் உளவு விவகாரம், வேளாண்சட்டங்கள் ரத்து தொடர்பாக முழக்கங்களை எழுப்பியதால் அவை முதலில் 11.30 மணி வரையிலும் பின்னர் 12 மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் 
12 மணிக்கு கேள்வி நேரத்தின்போது, அதிமுகஉறுப்பினர் எம்.தம்பிதுரை பேசுகையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்நாட்டில் தமிழும் கட்டாயம் ஒரு மொழியாக சேர்க்கப்பட வேண்டும் என்று கோரினார். இதற்குப் பதிலளித்த கல்வி இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, சமீபத்திய முறையின்படி அனைத்து இந்திய மொழிகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றார். பின்னர் அவை மாலை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.மாலை 2 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் நிலங்களில் வைக்கோல்களை எரித்திடும் விவசாயிகளுக்குக் கடும் தண்டனை விதித்திடும், தேசியத்தலைநகர்ப் பகுதியில் காற்றுத் தரக்கட்டுப்பாடு மேலாண்மை ஆணைய சட்டமுன்வடிவு அறிமுகப் படுத்தப்பட்டது. இதில் பேசிய எம்.பி.க்கள்,  விவசாயி
களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள அதீத தண்டனை குறித்து சுட்டிக்காட்டி இவை நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.  பின்னர் அத்தியாவசியப் பாதுகாப்புப் பணிகள் சட்டமுன்வடிவு மீது விவாதம் நடைபெற்றது.இதன்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., எளமரம் கரீம் பேசுகையில், இது மிகவும் அரக்கத்தனமான சட்டம்.  இது தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையைத் தடைசெய்கிறது. இது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன மாநாட்டின் முடிவுகளுக்கு எதிரானது.  இதனைத் தெரிவிக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.,  பினோய் விஸ்வம் பேசுகையில், தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைப் பறிப்பதற்கு அரசாங்கத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்த பின்னர்,  இதன்மீது உறுப்பினர்கள் கொண்டுவந்த அனைத்துத் திருத்தங்களும் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறி, பின்னர் குரல் வாக்கெடுப்பில் இந்தச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை வெள்ளிக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. (ந.நி.) 

;