india

img

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.... 19 நாளில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும்? எதிர்க்கட்சிகள் கேள்வி.....

புதுதில்லி:
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் 19 நாள்களில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் என்றுஎதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான மழைக்கால கூட்டதொடர் திங்களன்று (ஜூலை 19  ஆம் தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட்13 ஆம் தேதிவரை கூட்டத்தொடர்நடைபெறுகிறது. கூட்டத்தொடரைமுன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், நோய்த்தொற்று தடுப்புக்கான சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தொடர் வழக்கமான நேரமான காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக ஜூலை 18 அன்று  அனைத்துக்கட்சிகள் கூட்டம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 33 கட்சிகளைச் சேர்ந்த 40 தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன், திமுக எம்.பி. திருச்சி சிவா, சமாஜ்வாதிகட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ், லோக்ஜனசக்தி தலைவர் பசுபதி பராஸ்உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்ற னர்.இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடிபேசியது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள், பிரச்சனைகள் குறித்து விதிமுறைப்படி, நடைமுறையின்படி ஆரோக்கியமான, அர்த்துள்ள விவாதங்களை நடத்த அரசு தயாராக இருக்கிறது என்று அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். அனைத்து தரப்பின் ஆலோசனைகள், குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள், அறிவுரைகள் வரவேற்கப்படுகிறது. அது சரியாக இருந்தால் பரிசீலிக்கப்படும். நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஒரு விவகாரத்தை, விஷயத்தை எழுப்பினால் அதுகுறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார் ” எனக் கூறினார்.

இந்தக் கூட்டத்தொடரில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, தேசத்துரோக சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்ற  உச்சநீதிமன்றத்தின் குற்றச்சாட்டு , தில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள்  எழுப்ப வுள்ளன.   கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு 31 மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதில் 3 மசோதாக்கள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்படுகின்றன. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில்,நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.  பொருளாதார வீழ்ச்சி, விவசாய பிரச்சனை உள்ளிட்ட 13 பிரச்சனைகள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து விரிவாக பேச ஒன்றிய  அரசு தயாராக இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெட்ரோல் -டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நலன் குறித்து என்னென்ன பிரச்சனைகளை எழுப்ப இருக்கிறோம் என்பதை கூட்டத்தில் தெரிவித்தோம் என்று கூறினார்.

மேலும் மேகதாது அணை பிரச்சனை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டுவரும் என்றும்  19 நாள் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

;