india

img

விவசாயிகள் போராட்டம் நூறு நாள் அனுபவம் பரந்த ஒற்றுமை, ஆதரவும் பங்கேற்பும்....

மத்திய அரசின் விவசாய விரோத- கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நூறாவது நாளை கடந்திருக்கும் நிலையில்  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா தேசாபிமானி நாளிதழுக்கு அளித்த பேட்டி.

தேச விடுதலைக்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவில், நீண்ட காலமாக நடந்து வரும் போராட்டமாக விவசாயிகள் கிளர்ச்சி மாறியுள்ளது. இது மிகவும் ஒற்றுமையுடன் நடக்கும் போராட்டம். பொதுவாக எந்தவொரு போராட்டமும் முன்னேறிச் செல்லும்போது வேறுபாடுகள் எழலாம். ஆனால், இந்த இயக்கத்திற்கு 500க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்களிப்பு செய்கின்றன. இது மிகவும் அமைதியாக முன்னேறும் இயக்கமாகும். அரசாங்கம் சதி செய்ய முயற்சிக்கிறது. போராட்டத்திற்கு எதிராக அரசாங்கம் சதி செய்கிறது என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இது நாட்டின் மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது. போராட்ட அலைகள் அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களைச் சென்றடைந்துள்ளன.

மதம், சாதிய கட்டுகள் தகர்ந்தன
100 நாட்களாக நீடிக்கும் போராட்டம் ஒரு வரலாற்று ரீதியான ஜனநாயக இயக்கமாக மாறியது. மதம், சாதிய கட்டுகள் தகர்ந்தன. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவை பிரிவினையை உருவாக்க முயற்சிக்கையில், இந்தகிளர்ச்சி விவசாயியின் புதிய அடையாள உணர்வை உருவாக்கியுள்ளது. போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகளின் மதச்சார்பற்ற உணர்வில் ஒன்றுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் ஜாட் மற்றும் முஸ்லிம்களுடன் பாஜக மோதியது. போராட்டம் இரு பிரிவுகளையும் ஒன்றிணைத்தது. ஹரியானாவும் பஞ்சாப்பும் பல காலங்களாக முரண்படுகின்றன. இந்த போராட்டத்தில் ஹரியானா மக்கள் பஞ்சாபிகளை ஏற்றுக்கொண்ட விதம் மனதைக் கவர்கிறது. பஞ்சாபிகளுக்கும் ஹரியானா மக்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமை உருவாகியுள்ளது.

நாட்டின் தொழிலாளி வர்க்கம், போராட்டத்தின் தொடக்கத்திலிருந்து போராட்டத்தை ஆதரித்து வருகிறது. விவசாயிகளின் கிளர்ச்சியின் அடிப்படையான பிரச்சனை களில் மத்திய தொழிற்சங்கங்கள்  வலுவான ஆதரவை அளித்துள்ளன. இதற்கு முன்னர் ஒருபோதும் விவசாயிகளும் தொழிலாளர்களும் இதேபோன்ற பிரச்சனையில் ஒன்றிணைந் திருக்கவில்லை. மூன்று விவசாய சட்டங்களை பின்பற்றி கார்ப்பரேட்டுகளால் விவசாயிகளின் உயிருக்கும் நிலத்திற்கும் அச்சுறுத்தல் உள்ளது. நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளின் கீழ், தொழிலாளர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நிறுவனங்களுக்கு அடிமைகளாக மாறுவார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணியும் அரசு
கார்ப்பரேட்டுகளின் சுரண்டலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரு போராட்டம் இது. இந்த சீர்திருத்தங்கள் தன்னம்பிக்கையின் ஒரு பகுதி என்று பிரதமர் கூறுகிறார். இது தன்னம்பிக்கையல்ல, கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணிவதாகும். பெண்களும், விவசாயிகள் எழுச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெண் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். விவசாயத் தொழிலாளர்களில் சுமார் 60 சதவிகிதம் பெண்கள். இருப்பினும், நிலப்பிரபுத்துவ அமைப்பில், அரசாங்க ஆவணங்கள் பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் அவர்களின்பெயரில் நிலம் இல்லை. கணவர் இறந்தாலும் பெண்களுக்கு உதவி கிடைக்காது. போராட்டத்தில் இளைஞர்களும் மாணவர்களும் பங்கேற் கின்றனர். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களும் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த பல அரசியல் கட்சிகள் இப்போது போராட்டத்தை ஆதரிக்கின்றன.

மறுபுறம், மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் மனிதாபிமானமற்ற, சர்வாதிகார, இயற்கைக்கு விரோதமான பாசிசத் தன்மை கொண்டதாக உள்ளது.  அரசாங்கம் போராட்டத்தை நசுக்க முயன்றது. விவசாயிகளைத் தடுக்க அரசாங்கம் எடுத்த முயற்சிகள்
தோல்வியடைந்தன. விவசாயிகள் நிதானத்தைகடைப்பிடித்தனர். அமைதியாக இருந்தால் விவசாயிகள் வெல்வார்கள், வன்முறை நடந்தால் மோடி வெல்வார் - இது போராட்டத்தின் முழக்கம்.விவசாயிகள் அமைதியை நேசிக்கும் - கடினஉழைப்பாளிகள் மட்டுமல்ல, உறுதியானவர் களும் கூட.

பேச்சுவார்த்தை இல்லாத40 நாட்கள்
போராட்டத்தை இழிவுபடுத்த அரசு பல வழிகளில் முயன்றது. பிரதமர் முதல் சாதாரண ஆர்எஸ்எஸ் குண்டர்கள் வரை போராட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். எல்லாம் தோல்வியடைந்தன. மக்களிடம் பேசுவது ஜனநாயக அரசாங்கத்தின் கடமையாகும். அரசாங்கம் நடத்திய ஆரம்ப விவாதம் ஒரு கேலிக்கூத்து. விவசாயிகள் நிபந்தனைகளை ஏற்க மாட்டார்கள் என்று ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தினர். அரசாங்கம் ஒரு சில திருத்தங்களை முன்மொழிய முயன்றது. திருத்தங்களால் சட்டங்களின் தன்மையை மாற்ற முடியாது. இப்போது 40 நாட்களாக பேச்சுவார்த்தை இல்லை. விவசாயிகளின் தலைவர்களை தொலைபேசியில் அழைக்க பிரதமருக்கு நேரமில்லை.இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு போராட்டம் நடந்ததில்லை. முந்தைய போராட்டங்கள் எதனுடனும் இதை ஒப்பிட முடியாது. எதிர்காலத்தில் ஏதேனும் பெரிய போராட்டம் நடந்தால் இந்த கிளர்ச்சியை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

தமிழில்: சி.முருகேசன்

;