india

img

சுமார் 2000 பேரை ஆய்வு செய்ததில் 65 சதவீதத்தினருக்கு வேலை இல்லை... சிபிஎம் ஆய்வுக்குழு அறிக்கை....

புதுதில்லி:
புதுதில்லியில் 1917 தொழிலாளர்களை ஆய்வு செய்ததில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இவர்களில் 65 சதவீதத்தினருக்கு வேலையில்லை என்பது தெரிய வந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆய்வறிக்கை கூறுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தில்லி மாநிலப் பிரிவின் சார்பாக ஆய்வுக்குழு ஒன்று, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வீசிய சமயத்தில் அதன் தாக்கம் குறித்த ஆய்வு செய்வதற்காக, புதுதில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பழைய தில்லி பகுதிகளில் 1917 பேரை ஆய்வு செய்து அவர்களிடம் பெற்ற விபரங்களின்பேரில் ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. அதன் சாராம்சம் வருமாறு:

“எங்களின் ஆய்விலிருந்து இந்தக் காலகட்டத்தில் கூடுதல் ரேசன் பொருட்கள் அளிக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், மே மாதத்தில் 27 சதவீதக் குடும்பத்தினருக்கு தலா நபருக்கு 5 கிலோ உணவுப்பொருள்கள் அளிப்பதற்குப் பதிலாக, குறைவாகவே கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. புதுதில்லி, பழைய தில்லி மற்றும் காசியாபாத் பகுதிகளில் ஆய்வு செய்த 1917 நபர்களில் 65 சதவீதத்தினருக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வேலை எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது.

மாதக்கணக்கில் வேலை இல்லை
மற்றவர்களும்கூட, தங்கள் வேலையில் கணிசமான அளவிற்கு இழப்பினை எதிர்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சுமார் 14 சதவீதத்தினர் இரண்டு மாதங்களில் ஒரு மாத கால அளவிற்கு எந்த வேலையையும் பெறவில்லை. மற்றவர்கள் அதைவிடக் குறைவான கால அளவிற்கே வேலை பெற்றிருக்கிறார்கள். அதேபோன்று இரண்டாவது அலை வீசுவதற்கு முன்பு வேலைபார்த்துவந்த கேசுவல் தொழிலாளர்களில் 72 சதவீதத்தினருக்கு ஏப்ரல், மே மாதங்களில் எவ்வித வேலையும் கிடைக்கவில்லை. இவ்வாறு கேசுவல் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போன அதே சமயத்தில், சுயவேலை பார்த்துவந்தவர்களும் பல நாட்களுக்கு எவ்வித வருமானமும் இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்கள் நாள்தோறும் ஈட்டிவந்த வருமானத்தில் கடும் சரிவினைச் சந்தித்திருக்கிறார்கள்.மக்களில் கணிசமான பகுதியினர் இரண்டாவது அலையின்போது பொது விநியோக முறையில் விநியோகிக்கப்பட்ட உணவு தானியங்களைப் பெறவில்லை.”இவ்வாறு அந்த அறிக்கையில் கண்டிருக்கிறது.

பிருந்தா காரத்
இவ்வாறு இவர்கள் மேற்கொண்ட ஆய்வினை விளக்குவதற்காகவும், ஆய்வு அறிக்கையை பத்திரிகையாளர்களுக்கு அளிப்பதற்காகவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமையன்று புதுதில்லி, இந்தியப் பெண்கள் பத்திரிகையாளர் அணி வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

“மோடி அரசாங்கம் எதார்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அஞ்சுகிறது. எனவேதான் வறுமையின் கோரமான நிலைமையினைக் கணக்கிடும் முடிவை அது நிறுத்திவிட்டது. அதேபோல் வேலையின்மை குறித்தும் சரியான புள்ளிவிவரங்களை அளிக்க மறுக்கிறது. இந்த அறிக்கையானது உழைக்கும் மக்கள் குடும்பங்களில் உள்ள நிலைமைகளை மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த அறிக்கையில் அடிக்கோடிட்டுச் சுட்டிக்காட்டியுள்ளபடி உழைக்கும் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் மாதத்திற்கு 7,500 ரூபாய் ரொக்கமாக அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.” இவ்வாறு பிருந்தா காரத் கூறினார். (ந.நி.)

;