india

img

தொழிலாளி-விவசாயி ஒற்றுமை தினம் அனுசரித்திடுக.. மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்...

புதுதில்லி:
தொழிலாளி-விவசாயி ஒற்றுமை தினம் அனுசரித்திட வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மிகவும் கொடூரமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களின் ஆதரவும் ஒருமைப்பாடும் தொடர வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. வரும் பிப்ரவரி 27 அன்று தொழிலாளி-விவசாயி ஒற்றுமை தினம் அனுசரித்திட வேண்டும் என்று ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’வால் அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. அன்றையதினம் குரு ரவிதாஸ் ஜெயந்தி தினம் மற்றும் தியாகி சந்திரசேகர் ஆசாத் நினைவுதினமுமாகும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்துவரும் கார்ப்பரேட் ஆதரவு மத்திய அரசின் எதிர்மறை அணுகுமுறையை மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை கடுமையாகக் கண்டனம் செய்கிறது. மேலும் சம்யுக்த கிசான் மோர்ச்சா இப்போராட்டங்களின் பிரிக்கமுடியாத பகுதிகளாக  அறிவித்திருக்கும் பிப்ரவரி 24 ஒடுக்குமுறைக்கு எதிரான தினம், பிப்ரவரி 26 இளம் விவசாயிகள் தினத்தையும் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை முழுமையாக ஆதரிக்கிறது.பிப்ரவரி 27 அன்று விவசாயி-தொழிலாளி ஒற்றுமை தினத்தை அனைத்துத் தொழில்மையங்களிலும், ஒன்றியம், மாவட்ட அளவிலும் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக அனுசரித்திட வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அனைத்துத் தொழிலாளர்களையும் அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(ந.நி.)

;