india

img

கடிதம் மட்டுமல்ல; கடித முகவரியிலும் இந்தித் திணிப்பு.... குழம்பிப் போன அஞ்சல் ஊழியர்... குத்துமதிப்பாக டெலிவரி செய்தார்....

புதுதில்லி:
இந்தியாவில் ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக இந்தி, ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகள் இருந்தாலும், நரேந்திர மோடி தலைமையிலானபாஜக அரசு பொறுப்பேற்றது முதல்அனைத்து நடவடிக்கையிலும் இந்தியை மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள், மாநில அரசுகளுக்கான சுற்றறிக்கை,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கடிதப் போக்குவரத்து அனைத்தையும் இந்தியில் மேற்கொண்டு வருகிறது. ஆங்கிலத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிப்பதுதான் முறை என்றாலும், தார்மீக நெறி எதுவும் இல்லாமல் இந்தியில்மட்டுமே பதிலளித்து வருகிறது. கடிதமுகவரியில் மட்டும் ஆங்கிலம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தான் கடிதங்களுக்கான முகவரியிலும் இந்தித் திணிப்பு நடந்துள்ளது.“2021 மார்ச் நிலவரப்படி, மாநிலவாரியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன” என்று கேட்டு ஒன்றிய சுகாதாரத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் ஒன்றுஅனுப்பப்பட்டு உள்ளது.

சென்னையை அடிப்படையாகக் கொண்ட தயானந்த் கிருஷ்ணன் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையும், அந்த கேள்வியை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து, சம்பந்தப்பட்டவருக்கு உரிய பதிலளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிவுறுத்தல் கடிதம் இந்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், தில்லியைச் சேர்ந்தகலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை, ஆர்டிஐ சட்டத்தில் கேள்வி எழுப்பிய நபருக்கு அனைத்து விவரங்களையும் இந்தியிலேயே தயாரித்து அனுப்பியதுடன், முகவரியையும் இந்தியிலேயே குறிப்பிட்டுள்ளது.பின்கோட் (Pin Code) எண் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அஞ்சல் நிலையத்திற்கு அந்தக் கடிதம் வந்து சேர்ந்தாலும், எந்த முகவரிக்கு அதனை டெலிவரி செய்வது என்று புரியாமல் அஞ்சல்ஊழியர் குழம்பிப் போயுள்ளார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அதில்‘ஆர்டிஐ’ (RTI) என்று குறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த அஞ்சலர், தனது பகுதியைச் சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் என்பவர்தான் அடிக்கடி இதுபோன்று ஆர்டிஐ-க்கு கடிதம் எழுதுவார் என்பதை ஞாபகம் வைத்து, அவரைத் தேடிப்பிடித்து கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

தயானந்த கிருஷ்ணனும் இது தனக்கான கடிதம்தான் என்று அதைப்பெற்றுக்கொண்டுள்ளார். பிரித்துப் பார்த்தால் அவருக்கும் அதிர்ச்சி. ஆங்கிலத்தில் அனுப்பிய கடிதத்திற்கு இந்தியில் பதில் இருந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.தென்காசியைச் சேர்ந்த தகவல்அறியும் உரிமச் சட்ட ஆர்வலருக்கும்இதேபோல் இந்தியில் பதில் அனுப்பப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள தயானந்த் கிருஷ்ணன், மாநில மொழியிலோ ஆங்கிலத்திலோ தகவலறிய உரிமையில்லாமல் இருக்கும் நிலைமையை மாற்றவும், ஆங்கிலத்தில் பதில்கள் கிடைக்கவும் ஒன்றிய அரசையும் ஒன்றிய அமைச்சகங்களையும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

;