india

img

ஒன்றிய அரசில் ‘கூட்டுறவு அமைச்சகம்’ புதிதாக உருவாக்கம்... மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க ஏற்பாடா?

புதுதில்லி:
கூட்டுறவு அமைச்சகம் என்ற பெயரில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய  அரசு புதிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அமைச்சரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:கூட்டுறவு மூலம்தான் வளர்ச்சி என்ற தத்துவத்தை, தொலைநோக்கை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக கூட்டுறவு அமைச்சகத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. நாட்டின் கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்த கூட்டுறவு அமைச்சகத்துக்காக தனி நிர்வாகஅமைப்பு, சட்டவடிவம், கொள்கை வடிவமைப்பு போன்றவை உருவாக்கப்படும். இந்த புதிய கூட்டுறவு அமைச்சகத்துக்காக தனியாக அமைச்சர் நியமிக்கப்படுவார்.

நாட்டில் அடிமட்ட அளவில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தவும், தேவையான உதவிகளை செய்யவும் இந்த துறை செயல்படும். நம்முடைய தேசத்தில், கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார மேம்பாட்டு மாதிரி மிகவும் பொருத்தமானது, அங்கு ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள்.கூட்டுறவுத்துறையில் எளிதாக தொழில் செய்யும் விதம், பன்முக மாநில கூட்டுறவு வளர்ச்சி ஆகியவற்றை ஒழுங்குபடுத்த கூட்டுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.கூட்டுறவு துறைக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கைகளை உருவாக்க புதியஅமைச்சகம் உதவும் .சமுதாய அடிப்படை யிலான வளர்ச்சியை உருவாக்குவதில் ஒன்றியஅரசு ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில அரசுகளின் நிர்வாகத்தில் கூட்டுறவு அமைச்சகம் முக்கியப் பங்காற்றுகிறது. தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைச்சகம் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தனியாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடும் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  ஜிஎஸ்டி வரி நிலுவைத்தொகைகளை வழங்காமல் மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயை குறைத்தும் மாநில மொழிகளை புறக்கணித்து, இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு  முக்கியத்துவம் அளிக்கும் ஒன்றிய பாஜக  அரசு, அதிகாரம் அனைத்தும் தன்னிடமே குவிக்கும் வகையில் செயல்படுகிறது என்று அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் மக்கள்  குற்றம்சாட்டு கின்றனர். இந்நிலையில் புதிதாக  உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைச்சகம் மாநிலங் களுக்கு உதவுமா?அல்லது  தலையீடுகளை செய்து, அதிகாரத்தை பறிக்குமா? என்பதை ஒன்றிய அரசின் செயல்பாட்டின் மூலம்தான் தெரியவரும் என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

;