india

img

தொலைக்காட்சி உரையில் மோடி அள்ளி வீசியது பொய்களே.... இந்தியாவில் தடுப்பூசியையே தான்தான் அறிமுகப்படுத்தியது போல பேச்சு....

 புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த திங்கட்கிழமையன்று தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

‘மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக் காக செலவழிக்க தேவையில்லை. இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசியில் 75 சதவிகிதத்தை ஒன்றிய அரசே கொள்முதல்செய்து, ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். மீதமுள்ள 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவமனைகள்- அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்பதுதான் அந்த உரையில் பிரதான அம்சம்.ஆனால், பிரதமர் மோடி அத்துடன் தனது உரையை நிறுத்திக் கொள்ளவில்லை. மாநில அரசுகள் மீதும், தனக்கு முன்பாக ஆட்சி நடத்தியவர்கள் மீதும் போகிற போக்கில் பழிபோட்டார்.

மோடியின் இலவச தடுப்பூசி அறிவிப்புதானாக நடக்கவில்லை. ஓராண்டுக்கும் மேலாக எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநிலஅரசுகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் வலியுறுத்தல் இதன் பின்னணியில் இருக்கிறது. தடுப்பூசிக்கு மத்திய அரசேபொறுப்பேற்று அதனை இலவசமாக வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். கேரள முதல்வர் இதுதொடர்பாக 12 மாநில முதல்வர்களை அணி திரட்டினார். கேரள சட்டப்பேரவையில் தீர் மானமும் நிறைவேற்றினார். அவரைத் தொடர்ந்து, ஆந்திரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில முதல்வர்களும் இதேகோரிக்கையை எழுப்பினர். பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகிய 3 பேர் கொண்டஅமர்வு, கடந்த வாரம் மத்திய அரசை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தது.

தடுப்பூசிக்காக பட்ஜெட்டில் ரூ. 35 ஆயிரம் கோடியை ஒதுக்கியதாக கூறினீர்களே..அது என்ன ஆனது? அந்த நிதியைப் பயன்படுத்தி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாகவே தடுப்பூசியை வழங்குவதில் ஒன்றிய அரசுக்கு என்ன சிக்கல்உள்ளது? என்று கேள்விகளை எழுப்பியதுடன், ‘தடுப்பூசி கொள்முதலுக்காக, நாங்கள் உலகளவில் பேச்சுவார்த்தை நடத்துவோம், தேவையான தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தருவோம்’ என்று மாநில அரசுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.அரசின் கொள்ளை முடிவில், உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று மோடிஅரசு கூறியபோது, ‘கொள்கை வகுப்பதில் அரசைக் கேள்விக்கு உட்படுத்த முடியாதுதான். ஆனால், அந்தக் கொள்கை நியாயத்தின் அளவுகோல்களுக்கு உட்பட்டுஇருக்கிறதா, பாரபட்சமாக இருக்கிறதா? அரசியல் சட்டப் பிரிவு 21-இன் கீழ் அனைத்துமக்களின் உயிர் வாழ்வதற்கான உரிமை, பிரிவு 14-இன் கீழ் சமத்துவத்திற்கான உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதஉரிமைகளுக்கான சட்டகத்திற்கு உட்பட்டதாக இருக்கிறதா?’ என்று தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது என்று நீதிபதிகள் அதிரடி காட்டினர்.

இதையெல்லாம் மறைத்து விட்டு, ‘தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்கத் தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர் களுக்கும் உரிமை வழங்கப்பட்டது; ஆனால்,கொள்முதலில் உள்ள சிக்கல்களை மாநிலஅரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது ஒன்றிய அரசே இதனை செய்யட்டும் என்று அந்தமாநில அரசுகள் கூறுகின்றன’ அதனாலேயே மாநிலங்களின் பங்கையும் சேர்த்து75 சதவிகித தடுப்பூசிகளை ஒன்றிய அரசே கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது என்று பிரதமர் பேசியுள்ளார். 

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, உச்சநீதிமன்றம் சொன்னதால் நாங்கள் செய்யவில்லை.. கோரிக்கைகள் வந்ததாலும் நாங்கள் செய்யவில்லை.. மாநில அரசுகள் தங்களின் தவறை உணர்ந்ததால் செய்கிறோம் என்றகதையாக பேசியுள்ளார்.அதுமட்டுமல்ல, ‘இந்தியாவில் தடுப்பூசிவரலாற்றை எடுத்துப் பார்த்தால், சின்னம்மை, ஹெபடைடிஸ் பி அல்லது போலியோ போன்றவற்றுக்கு தடுப்பு மருந்துகளை செலுத்த பல தசாப்தங்களாக இந்தியா வெளிநாடுகளில் நோக்கி எதிர்பார்த்துக் கொண்ருந்த காலம் இருந்தது. பிற நாடுகளில் தடுப்பூசிகளை போட்டு முடித்த பிறகுதான் நமது நாட்டுக்கு அந்த மருந்துகள் கொண்டுவரப்பட்டு நமது நாட்டில் தடுப்பூசி போடப்படும் நிலைமை இருந்தது’ என்று குறிப்பிட்டு, ஆனால், தனது ஆட்சியில் தடுப்பூசி உடனடியாக கிடைக்கிறது என்ற பொருள்படும்படியும் மோடி பேசியிருந்தார்.ஆனால், இது முழுக்க முழுக்கப் பொய்என்பதை, டாக்டர் சந்திரகாந்த் லகாரியா 2012-இல் எழுதியிருந்த கட்டுரை மூலம்‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் அம்பலப் படுத்தியுள்ளது.உதாரணமாக சின்னம்மை தடுப்பூசியை எடுத்துக் கொண்டால், அது 1802 ஆம்ஆண்டிலேயே, 3 வயது குழந்தைக்கு இந்தியாவில் செலுத்தப்பட்டது. ஆங்கிலேய மருத்துவ வல்லுநர் எட்வர்ட் ஜென்னர் இந்தமருந்தை கண்டுபிடித்து வெறும் நான்கு வருடங்களில் அந்த தடுப்பூசி இந்தியாவிலுள்ள குழந்தைக்கு செலுத்தப்பட்டது.இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியை 1850-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவிலேயே சேமித்து வைக்கும் நடைமுறை அமலுக்கு வந்து விட்டது; 1890ஆம்ஆண்டில் ஷில்லாங் நகரத்தில் முதல் முறையாக விலங்குகளுக்கான தடுப்பூசி டெப்போஉருவாக்கப்பட்டது. 

நாட்டு விடுதலைக்கு சற்று முன்னதாக,1944 மற்றும் 1945 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் மிக அதிகமாக சின்னம்மை நோய் பரவல் ஏற்பட்டது. அப்போது, அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு, சின்னம்மை வேகமாக கட்டுப்படுத்தப்பட்டது. 1947-ஆம்ஆண்டே சின்னம்மை தடுப்பூசி வகைகளை உற்பத்தி செய்வதில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது.1897-ஆம் ஆண்டில் மும்பை கிராண்ட்மருத்துவக் கல்லூரியில் வால்டெமர் ஹாப்கின் என்பவரால் பிளேக் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. அவர் முதலில் தன் மீதும், பின்னர் பைக்குல்லா சிறைச்சாலையின் கைதிகள் மீதும் தடுப்பூசியை போட்டு பரிசோதித்தார். பிளேக் ஆய்வகம் 1899 இல் அமைக்கப்பட்டது. 1925-இல்ஹாப்கைன் நிறுவனம் என்று அது பெயர்மாற்றப்பட்டது. சென்னையின் கிண்டியில் உள்ள 1948 பி.சி.ஜி (காசநோய்க்கான) ஆய்வகம் உட்பட நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பல தடுப்பூசி நிறுவனங்கள் அப்போது செயல்பட்டன. இந்த நிறுவனங்கள் 1940-க்கு முன்னர் இந்தியாவில் டிப்டீரியா, பெர்டுசிஸ் மற்றும் டெட்டனஸுக்கான தடுப்பூசி தயாரிக்க உதவியது. 1949-இலேயே பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றிருந்தது. 1975இல் அதனை ஒழித்து வெற்றியும் கண்டது. போலியோவுக்கு எதிராக 1960-இல் உருவாக்கப்பட்ட ஓரல் போலியோ தடுப்பூசி(Oral Polio Vaccine - OPV) வழங்குவதில் உலகத்திலேயே முன்னோடி நாடாகஇந்தியா விளங்கியது.

‘பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’1970 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஓரல் போலியோ தடுப்பூசியை உருவாக்கி உற்பத்தி செய்தது. ஊசி மூலமான தடுப்பூசிக்கும் (Injectible PolioVaccine -IPV) இந்தியாவில் ஊக்கமளிக்கப்பட்டது எனவே மோடி கூறியதை போல இந்தியா முன்பு தடுப்பூசிக்காகபல காலம் காத்திருந்தது இல்லை. ஒரு காலத்திலும் இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடும் இருந்தது இல்லை’ என்று டாக்டர் சந்திரகாந்த் லகாரியாவின் கூற்றைமுன்வைத்து ‘தி இந்து’ உண்மைகளை படம்பிடித்துள்ளது.அதேபோல, 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது பாஜக - மோடி தலைமையிலான ஆட்சி அமைத்த பிறகு ‘இந்திரதனுஷ்’ என்ற தடுப்பூசித் திட்டம் அமல் படுத்தப்பட்டதாகவும், அதுவரை 60 சதவிகிதம் அளவுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் அளவு, தனது ஆட்சியில் 90 சதவிகிதம் என்ற அளவுக்கு அதிகரித்தது என்பதும்மோடி கூறிய தகவல்களில் ஒன்றாகும். ஆனால், அதுவும் உண்மையல்ல என்பதுஅம்பலமாகி இருக்கிறது.தேசிய குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல் அடிப்படையில் (17 மாநிலங்கள் பற்றிய புள்ளிவிவரம் மட்டுமே கொண்டது) ஒரு மாநிலம் கூட90 சதவிகிதம் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தவில்லை. மோடி குறிப்பிட்ட இந்ததடுப்பூசி திட்டம் என்பது பிசிஜி வேக்சின்தொடர்பானது. காசநோய் என்று அழைக் கப்படும் டிபி தாக்காமல் தடுப்பதற்காக செலுத்தப்படும் இந்த தடுப்பூசிகளை இமாச்சலப்பிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்கம், கோவா மற்றும் சிக்கிம் ஆகிய5 மாநிலங்கள் மட்டும்தான் 80 சதவிகிதம் அளவுக்கு செலுத்தியுள்ளன. சுகாதாரத்துறை அமைச்சகமே அளித்துள்ள புள்ளிவிவரம்தான் இது. ஆனால் பிரதமர் நரேந்திரமோடி, நாடு முழுக்க 90 சதவிகிதத்துக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார் என்று, அவரது உரையில் இருந்த பொய்களை ஊடகங்கள் வெளிச்சம்போட்டுள்ளன.

;