india

img

மக்களைப் பாதுகாப்பதில் மோடி அரசு தோற்றுவிட்டது.... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் கடும் விமர்சனம்....

புதுதில்லி:
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில்,  மோடி அரசு தோற்றுப் போய் விட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் விமர்சித்துள்ளார்.  

இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. ஒட்டுமொத்த தேசமும் பெரும் மருத்துவ நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை தனக்கு இருக்கிறதுஎன்பதை மறந்து, மத்திய அரசு தனது பொறுப்பு களைத் துறந்து பொறுப்பற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது’ என்று சாடியுள்ளார்.

‘பிரபல லண்டன் ஸ்கூல் ஆப் பிசினஸி’ல் படித்த - பிரபல பொருளாதார வல்லுநரான பரகலா பிரபாகர், 2014-ஆம் ஆண்டு முதலே, நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். மோடி ஆட்சியில் தனது மனைவி  பாதுகாப்புத்துறை, நிதித்துறை ஆகியவற்றுக்கு அமைச்சராக இருந்தபோதும், உண்மையைப் பேசுவதற்கு பரகலா பிரபாகர் தயங்கியதில்லை.‘இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து போனதற்கு முழுக்க முழுக்க மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம்’ என்று 2019 அக்டோபரில் ‘தி இந்து’ ஆங்கிலநாளிதழில் விரிவான கட்டுரை ஒன்றை பரகலா பிரபாகர் எழுதினார். இது அப்போது பரபரப்பைஏற்படுத்திய நிலையில், கணவரின் விமர்சனத்திற்கு மனைவியும் மத்திய அமைச்சருமான நிர்மலா சீதாராமனே பதிலளித்த நிகழ்வும் அப்போது நடந்தது.

தற்போது, கொரோனா தொற்றின் 2-ஆவது அலையை கட்டுப்படுத்துவதற்கு, மருத்துவ வல்லுநர்கள், மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறும் எந்தக் கருத்தையும் ஏற்காமல்- தடுப்பூசி முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மோடி அரசு செயல்பட்டு வரும் நிலையில், மத்திய பாஜக அரசை நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ பதிவில் அவர் பேசியிருப்பதாவது:‘கடந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான உயிரிழப்புகள். நானும் என் நண்பர்கள் பலரை இழந்திருக்கிறேன். தகப்பனாக, தாயாக, மகனாக,மகளாக மருத்துவமனை சென்றவர்கள் ஒருபிடிசாம்பலாக வீடு திரும்பினர். நிறைய குடும்பங்கள் வருமானத்தை இழந்து நிற்கின்றன. வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டன. பலர் வாழ்வாதாரத்தை இழந்து வருமானமின்றி இன்றளவும் நிர்க்கதியாக நின்று கொண்டிருக்கின்றனர். அரசின் எந்த உதவிகளும் இன்று வரையிலும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.இவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்திய கொரோனா வைரசின் முதலாம் அலை இப்போதுதான் ஓய்ந்தது. ஆனால், அதற்குள் இரண்டாம் அலை ஆடத் தொடங்கி விட்டது. அரசுகளின் புள்ளி விவரங்கள் குறித்து, நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். பாதிப்பு
களும், உயிர்ச் சேதங்களும் உண்மையில் இன்னும் அதிகமாக இருக்கும். நிபுணர்களும்அப்படித்தான் கூறுகின்றனர். மருத்துவமனை களில் நிரம்பி வழியும் நோயாளிகளாலும், பரிசோதனைக்கு வந்து குவியும் மாதிரிகளாலும் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் திணறிக் கொண்டிருக்கிறது.

மருத்துவமனையின் வாயில்களில் நீளும் வரிசைகள், மக்களின் மரண ஓலங்கள், எரியும் பிரேதக் குவியல்கள் எனக் காட்சிகள் பதைப் பதைக்க வைக்கின்றன. ஆனால், அரசியல் தலைவர்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் இதைப்பற்றி கொஞ்சமும் அக்கறையில்லை. அரசியல்தலைவர்களுக்குத் தேர்தலும், மதத்தலைவர்களுக்கு தங்கள் மத கிரீடமும் இறங்கி விடக்கூடாதென்ற கவலையைத் தவிர வேறெதிலும் கவனமில்லை. பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என விழிப்புணர்வூட்ட வேண்டிய அனைவரும், லட்சங்களில் மக்களைக் கூட்டித் தேர்தல் மாநாடு நடத்த, மற்றொருபுறம் கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் கூடிக் களித்தனர்.

கொரோனாவின் கோரத்தாண்டவம் தேசம் முழுவதும் பரவியிருக்க, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றைக்கூட பின்பற்றாமல் மேற்கு வங்க தேர்தலுக்கு ஆள் சேர்த்தன பிரதான கட்சிகளான பாஜக-வும், திரிணாமுல் காங்கிரசும், இந்தியாவில் ஒரு நாளில் பதிவாகும் பாதிப்பு எண்ணிக்கையானது பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை5 நாடுகளில் ஏற்படும் ஒருநாள் பாதிப்பை விடவும் பல மடங்கு அதிகமாகி இருக்கிறது.ஆனால், இந்த இமாலய சிக்கலிலிருந்து மீண்டு வருவதற்கு மத்திய அரசின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. மக்களிடமிருக்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல அரசு தயாராக இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுப்பூர்வமான ஆலோசனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பொறுப்பற்ற பதில்களே, மத்திய அரசின் மெத்தனப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தலைப்புச்செய்திகளில் இடம் பிடிப்பதில் இருக்கும் ஆர்வம், கள நிலவரத்தைச் சமாளிப்பதிலோ, எதிர்கொள்வதிலோ மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. அரசின் கையாலாகாத்தனம் தெளிவாகத் தெரிகிறது. இப்போதும்கூட பிரதமரின் பேச்சுத்திறன், புகழ், பிம்பம் அனைத்தும் இந்த மயான சூழலையும் ஈடுகட்டி, நிர்வாகத் திறனற்ற அரசை மீட்டெடுத்துவிடும் என அவர்கள்கனவு காண்கிறார்கள். ஆனால், இந்த பிம்பமும், புகழும் ஒரு நாடகக் கவர்ச்சிபோல வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடும். வெளிப்படையான, நிர்வாகத் திறனுள்ள, மனிதாபிமான அடிப்படையிலான அரசும், ஆட்சியாளரும் மட்டுமே வரலாற்றின் ஏடுகளில் நிலைத்திருப்பார்கள். இந்தியாவின் இந்த நிலைக்குக் காரணம், பொறுப்பற்ற மத்திய அரசின் செயல்பாடே தவிர வேறொன்றும் இல்லை. இவ்வாறு பரகலா பிரபாகர் விமர்சித்துள்ளார்.

;