india

img

தடுப்பூசி நிறுவனங்களின் கொள்ளைக்கு மோடி அரசு அனுமதி..... விலை உயர்வால் ரூ. 1 லட்சம் கோடி கூடுதலாக லாபம் கிடைக்கும்.....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை உயர்வைத் தடுக்காததன் மூலம் தனியார் முதலாளிகள் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளை லாபம் மோடி அரசு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளைத் தயாரித்து வழங்கும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களுமே தங்களின் தடுப்பூசிக்கான விலையை உயர்த்தி விட்டன.அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை, இந்தியாவிலுள்ள ஆதார் பூனாவாலாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தின் விலையை மாநில அரசுகளுக்கு .400என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 என்றும் உயர்த்தியது. 

இதனை தொடர்ந்து மற்றொரு தடுப்பூசியான ‘கோவாக்சின்’ மருந்தின்விலையும் மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 1200 என்று பாரத் பயோடெக் நிறுவனத்தால் உயர்த்தப்பட்டது.இந்தப் பின்னணியிலேயே ரன்தீப்சிங் சுர்ஜேவாலா மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவில் 45 வயதுக்கு குறைவானவர்களின் எண்ணிக்கை சுமார் 101 கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்களுக்கு 2 டோஸ் முழுமையான தடுப்பூசி போட 202 கோடி டோஸ் மருந்து தேவைப்படுகிறது.

இந்த 202 கோடி டோஸ் மருந்துகளுக்கான விலையை மாநில அரசோ அல்லது தனியார் மருத்துவமனை மூலம் தனிநபர்களோ செலுத்த வேண்டும். தற்போதைய உற்பத்தி திறனை வைத்து பார்க்கும் போது இரண்டு நிறுவனங்களுமே சரிசமமாக தலா 50 சதவிகித (தலா 101 கோடி) தடுப்பூசிகளை விநியோகிக்கும் என்று கணிக்கப்படுகிறது.இதில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம் மாநில அரசுக்கு நிர்ணயித்திருக்கும் 400 ரூபாய் விலையில் அதன் உற்பத்தி விலையான 150 போக ஒரு டோஸூக்குரூ. 250 லாபமீட்டுகிறது, தனியாருக்கு நிர்ணயித்திருக்கும் விலையில் உற்பத்தி விலை போக ரூ. 450 லாபமீட்டுகிறது.

‘கோவாக்சின்’ தடுப்பூசியைத் தயாரிக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் மாநில அரசுக்கு நிர்ணயித்திருக்கும் விலையில் ரூ. 450-ம், தனியாரிடம் ரூ. 1050-ம் ஒரு டோஸூக்கு லாபமாக ஈட்டுகிறது. இந்த மருந்துகளை 50 சதவிகிதம் மாநில அரசுக்கும் 50 சதவிகிதம் தனியாருக்கும் விநியோகிப்பதன் மூலம் இவர்களின் லாபம் பெருமளவு அதிகரிக்கப் போகிறது.இதில் ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம் விநியோகிக்க இருக்கும் 101 கோடி ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி டோஸில் 50 சதவிகிதம் (50.5கோடி டோஸ்கள்) மாநில அரசு மூலமும் மீதமுள்ள 50.5 கோடி டோஸ்கள் தனியார் மூலமும் விநியோகிப்பதன் மூலம், மாநில அரசிடமிருந்து 12 ஆயிரத்து 625 கோடி ரூபாயும் தனியாரிடமிருந்து ரூ. 22 ஆயிரத்து 725 கோடியும்ஆக மொத்தம் ரூ. 35 ஆயிரத்து 350 கோடி சீரம் நிறுவனத்திற்கு லாபமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதேபோல, பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மாநில அரசிடமிருந்து ரூ. 22 ஆயிரத்து 725 கோடியும் தனியாரிடமிருந்து ரூ. 53 ஆயிரத்து 025 கோடியுமாக மொத்தம் 75 ஆயிரத்து 750 கோடி ரூபாய்லாபமாக கிடைக்க உள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் சேர்ந்துதனியார் மற்றும் மாநில அரசுகள்மூலம் 45 வயதுக்கு குறைவானவர் களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரத்து 100 கோடி ரூபாயை லாபமாக சம்பாதிக்கும் என்பதுதான் இதில் கிடைக்கும் முடிவாகும்.ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கும் விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ளதால், அதற்குகிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து,சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் லாபத்தில் மாற்றம் ஏற்படலாம். ஆனால், எந்த வகையில் பார்த்தாலும், இந்தியாவைச் சேர்ந்த தனியார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதை யாரும் தடுக்க முடியாது என்ற நிலையே தற்போது உள்ளது.

;