india

img

மே 26- இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினமாக அனுசரித்திடுக....

புதுதில்லி:
மே 26 அன்று இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினமாக அனுசரித்திட வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை அறைகூவல் விடுத்திருக்கிறது.

இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி,தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங் களின் கூட்டு மேடை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:அனைத்து விவசாய முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) சார்பில் வரும் 2021 மே 26 அன்று இந்திய ஜனநாயகத்திற்கான கருப்பு தினமாக அனுசரித்திட வேண்டும் என அறைகூவல் விடுத்திருக் கிறது. அன்றைய தினம் நரேந்திர மோடிஅரசாங்கம் 2014இல் பதவியேற்றதின மாகும். பின்னர் அது 2019 மே 30 அன்று பதவியேற்றது. மேலும் மே 26, தில்லிக்குச் செல்வோம் என்று கூறி விவசாயிகள் தில்லியை முற்றுகையிடுவது தொடங்கிய தேதியுமாகும். அது வரும் மே 26ஆம் தேதியுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்கிறது.  மேலும் மத்தியத் தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடையும் தேதியுமாகும்.

படுதோல்வி மோடி அரசு
கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியிலிருந்து வரும் மோடி அரசாங்கம் அது மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாது படுதோல்விஅடைந்திருப்பதோடு மட்டுமல்லாமல், உண்மையில் அவற்றை நிறைவேற்றவேண்டும் என்று கோரிப் போராடும் உழைக்கும் மக்களைத் தண்டிக்கும் விதத்தில் நடந்துகொண்டும் வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகவும் கொடூரமாக மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. இவை அனைத்தையும் அது தனக்கு மக்களவையில் முரட்டுத்தனமான பெரும்பான்மை இருக்கிறது என்ற அடிப்படையில் செய்துகொண்டிருக்கிறது.  

கொரோனா வைரஸ் பெருந் தொற்றைக் கையாளும் பொறுப்பிலிருந்து தன்னை மிகவும் எளிதாகக் கழட்டிக்கொண்டுவிட்டது. மாநில அரசுகளேஇதனால் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மருத்துவ உதவியை அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தடுப்பூசிகள், ஆக்சிஜன், மருத்துவப் படுக்கைகள், ஏன் இறந்தவர்களை எரியூட்டுவதற்கான வசதிகளும் கூடப் பற்றாக்குறையுடன் இருந்து வருகின்றன. 18-44வயதுக்கிடையேயானவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான அறிவிப்புகள் தொடர்பாகவும் பொறுப்பற்றுச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் அதனை விலக்கிக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் இவ்வளவு கடும் நெருக்கடியான காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் இருட்டில்இந்த அரசாங்கம் இருந்து கொண்டிருப் பதையே காட்டுகிறது.

கார்ப்பரேட்டுகள் நலனுக்காக மோடி நடவடிக்கை
மேலும் அரசாங்கம் இந்தக் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு எதிரான, கார்ப்பரேட்டுகளுக்கு பயன் அளித்திடும் நடவடிக்கைகளை, அது மூன்று
வேளாண் சட்டங்களை அல்லது தொழிலாளர் (விரோத) சட்டங்களை அல்லதுபொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாரிடம் தாரை வார்த்திடும் நடவடிக்கைகள் எனக் கார்ப்பரேட்டுகளுக்கு பயன் அளித்திடும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டது.புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கு இந்தச்சமயத்தில் அவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு உணவு தானியங்கள், ரொக்கப் பணம்மற்றும் வேலைவாய்ப்புகள் அவசியத்தேவைகளாகும். இத்தகு பிரம்மாண்டமான பணியைச் செய்வதற்கு அரசாங்கம் அவற்றுக்கான வாய்ப்பு, வளங்களை உருவாக்க வேண்டியது அவசியக் கடமையாகும். இதற்காக அது தன்னிடம் உள்ள இந்திய உணவுக் கார்ப்பரேசன் கிடங்குகளில் உள்ளஉணவு தானியங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பணக்காரர்களுக்கு வரி விதித்திட வேண்டும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னணியில் நின்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் முன்களப் பணியாளர்களுக்கு இன்சூரன்ஸ் செய்திட வேண்டும், மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலைகள் மற்றும் ஊதியம் அளித்திட வேண்டும், இதேபோன்று நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தையும் கொண்டுவரவேண்டும். ஆனால் இவை அனைத்தையும் செய்யாது இந்த அரசாங்கம் செயலற்று இருந்து வருகிறது.

ரூ.20ஆயிரம் கோடியில் பிரதமருக்கு இல்லம் தேவையா?
இந்த அரசாங்கம் எவருமே கேட்காதசட்டங்களை – வேளாண் சட்டங்களை, தொழிலாளர் (விரோத) சட்டங்களை, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, புதிய கல்விக்கொள்கையை, நிறைவேற்றி இருக்கிறது.இவற்றின்மூலம் தனியார்மயக் கொள்கையை வேகமாகப் பின்பற்றும் நடவடிக்கை களைச் செய்துகொண்டிருக்கிறது. அதேசமயத்தில் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்திடவோ, பெட்ரோல்/டீசல் விலை உயர்வுகளை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரவோ மறுக்கிறது.  

அதிகரித்துக்கொண்டிருக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றைச் சமாளித்திடப் போதிய நிதி இல்லாது அரசாங்கம் திண்டாடிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், மிகவும் வெட்கக்கேடான முறையில் தன்னுடைய புதிய நாடாளுமன்றம், பிரதமர் இல்லம் முதலானவற்றைக் கட்டிடம் சென்ட்ரல் விஷ்டா திட்டத்தை-20ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தேவையற்ற திட்டத்தை-வேகமான முறையில் செய்துகொண்டிருக்கிறது. இதற்காக வெளிப்படைத்தன்மையற்ற முறையில் வசூல் செய்து வைத்துள்ள பிஎம் கேர்ஸ், தேர்தல் பத்திரங்கள்போன்றவற்றின் மூலம் வசூலித்த தொகை களை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், நடைமுறையில் மிகவும் ஜனநாயகவிரோதமான பாதையில்  சென்று கொண்டிருக்கிறது. உதாரணமாக, அரசாங்கத்தை விமர்சிப்பவர் எவராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்கிறது, முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்திட மறுக்கிறது, தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தும் விதத்தில் அரசமைப்புச்சட்ட அமைப்புகளான மத்தியக்குற்றப்புலனாய்வுக் கழகம், அமலாக்கத் துறை, தேசியப் புலனாய்வு முகமை, உச்சநீதிமன்றம், இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல்ஆணையம், மாநில ஆளுநர்கள் ஆகியோரை அப்பட்டமான முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை அரித்து வீழ்த்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கட்சித் தாவல்செய்வதற்காக இந்த அமைப்புகளை யும், பண பலத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

கருப்பு சின்னங்களை அணிந்திடுவோம்!
இந்தப் பட்டியலில் மேலும் ஏராளமானவற்றைச் சேர்த்திட முடியும். ஒரு மண்வெட்டியை மண்வெட்டி என்று கூறும் தருணம் வந்துவிட்டது. இதனை வரும் மே 26 அன்று இந்திய ஜனநாயகத்திற்கான கருப்பு தினம் என அனுசரித்துத் தொடங்கிடுவோம். அன்றைய தினம் அனைவரும் கருப்பு சின்னங்களை அணிந்திடு வோம், கருப்புக் கொடிகளை ஏற்றிடுவோம்.அன்றைய தினம், நம் கோரிக்கைகள் வெற்றிபெறும் வரை ஓயப்போவதில்லை என சூளுரைத்திடுவோம், ஆட்சியாளர்கள் மேற்கொண்டிடும் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் உழைக்கும்மக்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் ஆட்சியாளர்களுக்குக் காட்டிடுவோம்.   அன்றையதினம்கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து உரக்க முழக்கமிடுவோம்.

#   அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்கிடு.

#   வேலையில்லா அனைவருக்கும் இலவசமாக உணவு தானியங்களும், மாதந்தோறும் 7500 ரூபாய் ரொக்கப்பணமும் உடனடியாக அளித்திடு.

#   மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய், மின்சார (திருத்தச்)சட்ட முன்வடிவை ரத்து செய், குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்தி மத்தியச் சட்டம் இயற்றிடு.

#   நான்கு தொழிலாளர் (விரோத) சட்டங்களையும் திரும்பப்பெறு. இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடி யாகக் கூட்டிடு. தனியார்மயம்/கார்ப்பரேட்மயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடு.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளன. (ந.நி.)

;