india

img

சுகாதாரத்திற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு... உண்மையா? கணக்கீடுகளை மாற்றி, படம் காட்டிய நிர்மலா சீதாராமன்.....

புதுதில்லி:
“நிறைவாக, சுகாதார நலனே இந்த பட்ஜெட்டின் மையமான இடத்தைப் பிடித்திருக்கிறது”.  -இதுதான் 2021-22 மத்திய பட்ஜெட்டைப் பற்றி கார்ப்பரேட் ஊடகங்கள் கூறியிருக்கும் முக்கிய கருத்தாகும்.பட்ஜெட்டை முன்மொழிந்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், சுகாதாரத்துறைக்காக பட்ஜெட்டில்137சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என்று புளகாங்கித த்துடன் கூறினார். ஆனால் உண்மையில் மத்திய பட்ஜெட்டின் நிதி ஒதுக்கீடு விபரங்களை நுட்பமாக ஆய்வு செய்தால், இது அப்பட்டமான பொய் என்பது தெரியவரும். 

இந்த பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.71,269 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆயுஷ் மற்றும் சுகாதார ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய ரூ.5,633 கோடியையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் ரூ.76,902 கோடி ஆகும். இது மொத்த பட்ஜெட்டில் வெறும் 2.21 சதவீதம் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. 2020-21 பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு மொத்தம் 2.27 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது; அதே ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடாக 2.47சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது சுகாதாரத்துறைக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது என்பதுதான் உண்மை. நாட்டையே உலுக்கிய கோவிட் பாதிப்பு மற்றும் அதை எதிர்கொள்ள மிக வலுவான சுகாதார கட்டமைப்பு தேவை என்பதை உணர்ந்துள்ள இந்த ஆண்டில்மிக அதிகபட்சமாக சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டதாக நிதியமைச்சரின் படாடோபப் பேச்சில் வெளிப்பட்டதே தவிர, உண்மையில் நிதி குறைக்கப் பட்டுள்ளது. 

‘சிறப்பு ஒதுக்கீடுகள்’ இந்தாண்டிற்கானவை அல்ல!
இந்தப் பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும்குடும்ப நலத்துறை என்பதன்கீழ் கோவிட் தொடர்பான சிறப்பு ஒதுக்கீடுகள் என்ற பெயரில் சில இனங்கள் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு ரூ.95கோடி, கோவிட் 19 பரவல் தடுப்புக் கருவிகளுக்காக ரூ.4,724 கோடி, தேசிய கிராமப்புற சுகாதாரத்திட்டத்தின்கீழ் கோவிட் 19 பரவல் தடுப்பு செலவினங்களுக்காக ரூ.6,935 கோடி, சுகாதாரபணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி போட்டவகையில் ரூ.360 கோடி, கோவிட் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்காக ரூ.2,100 கோடி என மொத்தம் ரூ.14,217 கோடி பட்ஜெட் மதிப்பீட்டில் காட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2020-21 ஆம் ஆண்டு கோவிட் 19 பரவல் தடுப்பு பணிகளுக்கான ஒதுக்கீடுகளே தவிர, 2021-22ஆம் நிதி ஆண்டிற்கான தொகை அல்ல. ஆனால் இதை வெவ்வேறு இனங்களில், ஒட்டுமொத்தமாக நாட்டின் சுகாதார நடவடிக்கைகளுக்கான ஒதுக்கீடு என்ற பெயரில் பட்ஜெட்டில் காட்டி ஏமாற்றியுள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தேசிய சுகாதாரக் கொள்கை என்ன சொல்கிறது?
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது எதிர்காலத்தில் கோவிட் தடுப்பு உள்பட தொற்று நோய் பரவல் தடுப்பு மற்றும் சுகாதார ஆராய்ச்சி, புதிய சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்குவது போன்றவற்றிற்கு இருப்பதை விட இரண்டு மடங்கு நிதி அவசியம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கையில், 2017 தேசிய சுகாதாரக் கொள்கையை மேற்கோள்காட்டி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1 சதவீதம் முதல் 2.5-3சதவீதம் வரைசுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவியபின்னணியில் அத்தகைய பெரும் உயர்வுசுகாதாரத்துறைக்கு கிடைக்கக்கூடும் என்பதை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால் அதற்கு நேர் மாறாக, கணக்கீடுகளை கூடுதலாக காட்டி, உண்மை ஒதுக்கீட்டை கடந்தாண்டை விட குறைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.

தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெறும் 0.34 சதவீதம் மட்டுமே ஆகும். தேசிய சுகாதாரக் கொள்கை 2017ல், ஜிடிபியில் 2.5சதவீதம் முதல் 3 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிற அந்த இலக்கை எட்டுவதை நோக்கி மோடி அரசு இன்னும் தனது பயணத்தை துவக்கவே இல்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, 15வது நிதி கமிஷன், 2021-22 நிதியாண்டில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில்,ஜிடிபியின் அளவில் 1.92 சதவீதமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு கூட நிதி ஒதுக்கீடு, கோவிட் தொற்றுபரவிய இந்தக் காலத்திலும் கூட செய்யப்படவில்லை. தடுப்பூசிக்கான தொகை
ஆனால் கோவிட் தடுப்பூசிகள் மற்றும் கோவிட் சிறப்பு மானியங்களாக அளிக்கப்பட்டுள்ள தொகைகளை நடப்பாண்டு பட்ஜெட்டில், சுகாதாரத்துறைக்கான பிரதான நிதி ஒதுக்கீட்டுடன் சேர்த்து, ஒட்டுமொத்த ஒதுக்கீட்டை அதிகரித்து காட்டும் முயற்சியில்தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டிருக்கிறார். அந்த உண்மையை மறைத்து கார்ப்பரேட் ஊடகங்கள் சுகாதாரத்திற்கு மிக அதிக ஒதுக்கீடு என்று தம்பட்டம் அடித்து வருகின்றன. 

தற்போதைய பட்ஜெட்டில் கோவிட் தடுப்பூசிகளுக்காக நிதி அமைச்சகத்தின் சிறப்பு மானிய ஒதுக்கீடாக ரூ.35,000 கோடியும், 15வது நிதிக்கமிஷன் பரிந்துரையின்படி சிறப்பு மானியமாக சுகாதாரத்துறைக்கு ரூ.13,192 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே, கோவிட் தொற்று நோயை தடுப்பதற்கு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது சுகாதாரத்துறையின் பிரதான பட்ஜெட்டின் ஒரு பகுதி என்று கூறுவதே தவறானது.

அதுமட்டுமல்ல, அடுத்த 6 ஆண்டு காலத்தில் பிரதமர் ஆத்ம நிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரூ. 64,180 கோடி பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆரம்ப, இடைநிலை சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், புதிய சுகாதார அமைப்புகளை உருவாக்கவும், புதிதாக உருவாகும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள, பல்வேறு திட்டங்களை முன்மொழிந்து, அடுத்த 6 ஆண்டுகளில் படிப்படியாக இத்தொகை செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 8 வகையான வெவ்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றுக்கு ஒட்டுமொத்தமாக 6 ஆண்டுகளுக்கு ரூ.64,180 கோடி என்று கூறியிருப்பது, 2021-22 பட்ஜெட்டின் பிரச்சனை அல்ல. ஆனால் இந்தத் தொகையையும் நடப்பு நிதியாண்டின் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடாக கணக்கு காட்டி ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.2,23,846 கோடி என்று பிரம்மாண்டமாக படம் காட்ட முயற்சித்
திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

சுகாதாரத்துறையின் பல செலவினங்களில் 2021-22 பட்ஜெட் மதிப்பீட்டை விட, 2020-21 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடு ஏற்கெனவே அதிகமாக உள்ளது. முந்தைய ஆண்டு அதிகமாக செலவழித்த தொகை கூட தற்போது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2021-22 சுகாதாரத்துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.73,931.77 கோடி. இது கடந்த பட்ஜெட்டை விட பத்து சதவீதம் அதிகம் என்று நிதி அமைச்சர் கூறுகிறார். ஆனால் கடந்த பட்ஜெட்டின் திருத்தப்பட்ட மதிப்பீடே 20 சதவீதம் அதிகமாகும். அதாவது ரூ.82,928 கோடி ஆகும். அத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய ஒதுக்கீடு மிகப்பெரிய சரிவாகும். 

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு 2020-21 பட்ஜெட் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.2,900 கோடி ஆகும். இப்போது ஒதுக்கீடும் அதே ரூ.2900 கோடி தான். 

பிரதமர் ஸ்வஸ்திய சுரக்சா யோஜனா திட்டத்திற்கு கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.7,517 கோடி ஆகும். தற்போதைய பட்ஜெட் மதிப்பீடு ரூ.7000 கோடி மட்டுமே.

2021-22 தடுப்பூசி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.35,000 கோடி என்பது மொத்த சுகாதார திட்ட ஒதுக்கீடுகளில் 46.9சதவீதமாகும். தடுப்பூசி திட்டம் என்பது தவிர்க்க முடியாதது. இது அன்றாட சுகாதார துறைக்கான ஒதுக்கீடு அல்ல. 

;