india

img

மதுரை எய்ம்ஸ்.... முதன்மை திட்டத்தை செலவு கணக்குகளோடு பகிர்ந்து கொள்க.... சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்....

புதுதில்லி:
பிப்ரவரி 11 அன்று மக்களவையில் விதி: 377 (பொது முக்கியத்துவம் வாய்ந்தபிரச்சனை) கீழ் மதுரை எய்ம்ஸ் பற்றியபிரச்சனையை எழுப்பி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தில் கடந்த 2019 ஜனவரியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் அதன்பிறகு அங்கு எந்த முன்னேற்றமும் இல்லை. அதே காலகட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட ஜம்முவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த வருடம் சேர்க்கைகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உரிய நேரத்தில் தொடங்க வேண்டும் என்கிற அக்கறையை மத்திய அரசு காட்டவில்லை.எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முழுச் செலவான 2 ஆயிரம் கோடி ரூபாயில் 85 சதவிகிதத்தை ஜே.ஐ.சி.ஏ (jica)  உடனான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதன் மூலமாக பெற முடியும் என்று எங்களது கவனத்திற்கு வந்திருக்கிறது. மீதி 15 சதவிகிதம் யார் தருவார்கள் என்பதும் அமைப்பதற்கான மொத்த செலவு 1264 கோடியிலிருந்து 2 ஆயிரம் கோடிக்கு எப்பொழுது உயர்த்தப்பட்டது என்பதும் தெளிவாக தெரியவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முதன்மை திட்டத்தை அதன் செலவு கணக்குகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு பெருமளவு அதிகரிப்பு ஏற்பட்டதற்கான காரணங்களையும் அமைச்சர் தெளிவாக விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திட்டத்தின் தள அமைப்பையும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

                                     *******************

தீர்மானம் தாக்கல்- மாநிலங்களவை ஒப்புதல்

மதுரை மாவட்டம் தோப்பூரில்  அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விரிவான கேள்வியை எழுப்பியிருந்தார். இவரது முயற்சியைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கான ஆலோசனைக்குழுவில் 3 எம்.பி.க்களை சேர்க்கும் தீர்மானம் பிப்ரவரி 11 அன்று நாடாளுமன்ற த்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாநிலங்களவை  எம்.பி ஒருவரை உறுப்பினராக நியமிக்கும் தீர்மானத்துக்கு மாநிலங்களவை  ஒப்புதல் வழங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த அக்டோபர்மாதம் தலைவர், துணை வேந்தர் உள்ளிட்ட 14 உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருக்கும் வி.எம்.கடோச் என்பவர் நியமிக்கப்பட்டார். 14 உறுப்பினர்கள் தவிர மதுரைஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேலும் 3 எம்.பி-க்கள்உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். அதில்இருவர் மக்களவையில் இருந்து நியமிக்கப்படுவார்கள். ஒருவர் மாநிலங்களவையிலிருந்து நியமிக்கப்படுவர். அந்த அடிப்படையில் சு.வெங்கடேசன் எம்.பி.யின் முயற்சியால்  மாநிலங்களவை எம்.பி. ஒருவரை மருத்துவமனையின் உறுப்பினராக நியமிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் முன்மொழிந்த தீர்மானத்துக்கு மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியுள்ளது. எம்.பி-க்களில்யார் அந்த உறுப்பினர் என்பதை மத்திய அரசு தேர்வுசெய்து அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;