india

img

கும்பமேளா : 5 நாட்களில் 2,171 பேருக்கு கொரோனா....

டேராடூன்:
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் கும்பமேளாவில் கடந்த 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை நடந்த புனித நீராடல் நிகழ்ச்சியின்போது அங்கு வந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2,171க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று உத்தரகண்ட் மாநில சுகாதாரத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

சித்திரை முதல் நாள் புதனன்று மேஷ் சங்கராந்தி மற்றும் பைஷாகி ஆகியவற்றைக் குறிக்கும் நாளாக வடமாநிலங்களில் கருதப்படுகிறது. இந்த நாளில் நடக்கும் கும்பமேளாவில் புனித நீராடுதல் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதையடுத்து, கும்பமேளாவில் 2-வது புனித சாஹி நீராடுதலுக்காக கடந்த ஒரு வாரமாக லட்சக்கணக்கான மக்கள் ஹரித்துவார், ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் திரண்டு புனித நீராடினர். 

உத்தரகண்ட் அரசின் கணக்கின்படி கடந்த2 நாட்களில் மட்டும் சாஹி புனித நீராடலில் மட்டும் 48 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்துபங்கேற்றதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா 2-வதுஅலை அச்சுறுத்தி வரும் நிலையில், அதுகுறித்து எந்தவிதமான கவலையும் இல்லாமல், தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல், முகக்கவசம், சமூக விலகலைப் பின்பற்றாமல் நீராடினார்கள்.

உத்தரகண்ட் அரசு பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் இலவசமாக முகக்கவசத்தை வழங்கிய போதிலும் பெரும்பாலானோர் அணியவில்லை. போலீஸாரும், சுகாதாரத் துறையினரும் இலவசமாக முகக்கவசங்களை வழங்கியும் அதை அணிவதற்குப் பெரும்பாலான மக்களும், சாதுக்களும் மறுத்தனர். சமூக விலகலைக் கடைப்பிடிக்க போலீஸாரும், சுகாதாரத் துறையினரும் ஒலிபெருக்கியில் அறிவுறுத்தியபோதிலும் அந்த விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டன.

சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் நீராடியது அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அடுத்துவரும் நாட்களில் உத்தரகண்டில் கொரோனா தொற்றுஅதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கவலை தெரிவித்தனர். அந்தக் கவலை தற்போது உண்மையாகி வருகிறது.கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரைகும்பமேளாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 751 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 2,171 பேருக்கு முதல் கட்டமாக கொரோனா தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹரித்துவார் தலைமை மருத்துவ அதிகாரி ஷாம்பு குமார் ஜா கூறுகையில், “கடந்த 5 நாட்களாக கும்பமேளாவுக்கு வந்த பக்தர்கள், மடாதிபதிகள், சாதுக்கள் ஆகியோரிடம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 1,700 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்னும் பரிசோதனை முடிவுகள் வர உள்ளன. அவை வரும்போது மேலும் பாதிப்புஅதிகரிக்கக்கூடும். 2 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிக்கலாம்” எனத் தெரிவித்தார்.கடந்த 2 நாட்களில் அதாவது சாஹி ஸ்நானத்தில் மட்டும் 48.51 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக உத்தரப் பிரதேச அரசுதகவல் தெரிவிக்கிறது. பக்தர்கள், சாதுக்கள்,அகாராக்கள், மடாதிபதிகள் எனப் பெரும்பாலானோர் கொரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை, முகக்கவசம் அணியவில்லை, சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த செய்தி தொகுப்பு 1 மற்றும் 3-ஆம் பக்கம் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது... தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே தொகுப்பில் ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது...   

;