india

img

ஜனவரி 23-25 மாநிலத் தலைநகர்களில் முற்றுகை.... ஜனவரி 26 – தொழிலாளர், விவசாயிகள் அணிவகுப்பு.... மத்தியத் தொழிற்சங்கங்கள் கூட்டுமேடை– அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல்.....

புதுதில்லி
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக உறுதியுடன் போராடிவரும் விவசாயிகளுக்கு, மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை தன் இதயங்கனிந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ள அதே சமயத்தில் அவர்களின் போராட்டத்திற்கு அளித்துவரும் ஒருமைப்பாடு தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக கூட்டுமேடையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மிகப்பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் தில்லியின் எல்லைகளில் கடும் குளிர் மற்றும் விடாது பெய்துவரும் மழை ஆகியவற்றையும், சில இடங்களில் காவல்துறையினரின் அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாது ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் இப்போராட்டத்தில் பலர் தங்கள் உயிர்களை இழந்து தியாகியாகியுள்ளார்கள்.மிகவும் கொடூரமான வேளாண் சட்டங்களை ரத்து செய்திடவும், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவு மற்றும் குறைந்த பட்ச ஆதார விலை அளிப்பது போன்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் மறுத்து மோடி அரசு மிகவும் எதிர்மறையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதை மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை  கண்டிக்கிறது. மேலும் போராடும் விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அவர்களைக் காலிஸ்தானிகள் என்றுகூறி அவர்களுக்குத் துதிபாடும் ஊடகங்கள் இழிவுபடுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதையும் கண்டிக்கிறது. இத்தகைய இழி பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. நாடு முழுவதும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருமைப்பாடு தெரிவித்து மக்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுவருவது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தகைய போராட்டங்களில் தொழிலாளர்கள் முன்னணிப் பாத்திரம் வகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு போராட்டத்தைத் தீவிரப்படுத்திடவும், இதனை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்திடவும் தீர்மானித்திருக்கிறது. வரும் ஜனவரி 23-25 தேதிகளில் மாநிலத் தலைநகர்களில் மூன்று நாட்கள் மகா முற்றுகைப் போராட்டம் (mahapadav) நடத்திடத் தீர்மானித்திருக்கிறார்கள். மேலும் அரசு சார்பில் குடியரசு தின அணிவகுப்பு நடந்துமுடிந்தபின்னர், அதற்கு இணையாக அணிவகுப்பு நடத்திடவும் தீர்மானித்திருக்கிறார்கள்.
தங்களின் இப்போராட்டத்திற்கு இதுவரை அளித்துவருவதுபோல் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை தொடர்ந்து ஆதரவு அளித்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் சங்கங்கள் போராடும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரிவிப்பதுடன், தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றியிருப்பதை ரத்து செய்ய வலியுறுத்தியும், தனியார்மயத்தைக் கண்டித்தும் தங்கள் கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு, விவசாயிகள் ஜனவரி 23-25 தேதிகளில் நடத்தும் மகாமுற்றுகை போராட்டத்திலும், அதனைத் தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்க வேண்டும் என்றும் அதன்மூலம் தொழிலாளி-விவசாயி ஒற்றுமையை உயர்த்திப்பிடித்து,  மோடி அரசாங்கத்தின் நாசகர, மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்றும் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அனைத்துத் தொழிலாளர்களையும் அறைகூவி அழைக்கிறது.  (ந.நி.)

;