india

img

பனிப்பாறை இப்படி நாற்றம் அடிக்காது.... உத்தரகண்ட் விபத்துக்கு அமெரிக்க அணுசக்திப் பொருள் காரணமா?

டேராடூன்:
“இந்த அணுசக்திப் பொருட்களின் வெப்பம்தான் பனிப்பாறையை உருகி உடையச் செய்தது” என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

தேசத்தையே உலுக்கிய கொடூர விபத்து அது. உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உருகிதவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுமானத்தில் இருந்த இரண்டு நீர்மின்நிலையங்கள் இதில் மூழ்கின. பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படு கிறது.‘பனிப்பாறைகள் திடீரென எப்படி உருகின’ என்பதற்கு இதுவரை காரணம் தெரியவில்லை. அதைக் கண்டறிவதற்கு ஆராய்ச்சிகள் நடக்கின்றன.ஆனால், ‘சீனாவை உளவு பார்ப்பதற்காக இமயமலைச் சிகரத்தில் அமெரிக்கா கொண்டுவந்து வைத்த அணுசக்திக் கருவியே இந்தப் பேரழிவுக்குக் காரணம்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.இந்தியாவுக்குள் வந்து அமெரிக்காஎப்படி அந்தக் கருவியை வைத்தது? அது எந்த அளவுக்கு ஆபத்தானது? பழைய வரலாற்றைத் தோண்டினால், ஜேம்ஸ்பாண்ட் படக்கதை போன்ற விறுவிறுப்பான சம்பவங்கள் நம் கண்முன்னே விரிகின்றன.1964ம் ஆண்டு சீனா திடீரென்று அணுகுண்டு சோதனையை நடத்தியது. அதனால் இந்தியாவைப் போலவே அமெரிக்காவும் கவலைப்பட்டது. சீனாவின் அணுகுண்டு சோதனைகளை அமெரிக்கா உளவு பார்க்க விரும்பியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., நம் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

இமயமலையில் இருக்கும் சிகரம், நந்தாதேவி. இது இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரம். இந்த சிகரத்தில் உளவுக்கருவியைப் பொருத்தினால் சீனாவைக் கண்காணிக்க முடியும். இதற்கு இந்தியாவும் ஒப்புதல் தந்தது. இதை ரகசியமாகச் செய்வதற்கு சி.ஐ.ஏ உளவு நிறுவனத்துடன், இந்திய உளவு நிறுவனமான இன்டலிஜென்ஸ் பீரோவும் இணைந்துகொண்டது.இதற்காக இன்டலிஜென்ஸ் பீரோ குழு ஒன்று அமெரிக்காவுக்குப் பயிற்சிக்குப் போனது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருக்கும் மெக்கின்லி பனிச்சிகரத்தில் பயிற்சி எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 1965ம் ஆண்டுஅக்டோபர் மாதம் இந்த உளவுக்கருவியை இமயமலையில் பொருத்தும் ரகசியப் பயணம் தொடங்கியது. யாருமில்லாத மலைச் சிகரத்தில் இவை தொடர்ந்து இயங்க மின்சக்தி தேவை. அங்கே வேறு எந்த வழியிலும் மின்சாரம்தயாரிக்க முடியாது என்பதால், அணுசக்திப் பொருட்களைப் பயன்படுத்த முடிவு செய்தனர்.உளவுக்கருவிகள், ஆன்டெனாக் கள், அவற்றை இயங்க வைப்பதற்காக அணுமின் சக்தி ஜெனரேட்டர்கள், புளுட்டோனியம் கேப்ஸ்யூல்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சி.ஐ.ஏ மற்றும் இன்டலிஜென்ஸ் பீரோ அதிகாரிகள் ரகசியப் பயணம் சென்றனர்.மனித நடமாட்டமே இல்லாத நந்தாதேவி சிகரத்தின் அடிவாரத்தை அவர்கள் அடைந்தபோது, திடீரென பனிப்புயல் தாக்கியது. உயிர் பிழைப்பதே கடினம் என்று இருந்த சூழலில், அந்தக் கருவிகளை அப்படியே போட்டுவிட்டு அவர்கள் ஓடிவந்தனர்.அடுத்த ஆண்டு மே மாதம் திரும்பவும் போய்ப் பார்த்தபோது அந்தக் கருவிகளையும் அணுசக்திப் பொருட்களையும் காணவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு தோல்வியுடன் திரும்பி வந்தனர் அதிகாரிகள். 1967ம் ஆண்டு மீண்டும் போய்த் தேடிப் பார்த்தனர். அவை கிடைக்கவில்லை. ரகசியத் திட்டம் என்பதால் வெளியிலும் சொல்ல முடியவில்லை. அத்துடன் தேடல் கைவிடப்பட்டது.

100 ஆண்டுகள் வரை வீரியத்துடன் இருக்கும் அணுசக்திப் பொருட்கள்அவை. கதிர்வீச்சையும் வெளிப் படுத்தும், சூடாகவும் இருக்கும். எனவே, பனிப்பாறைகளை உருக்கி உள்ளே சென்று தரையில் புதைந்து போயிருக்கும் என நம்பினார்கள். இன்றுவரை அவை கிடைக்கவில்லை.இந்த விஷயம் 2018ம் ஆண்டுதான் வெளியில் தெரிந்தது. உத்தரகண்ட் அமைச்சரான சத்பால் மகராஜ்என்பவர் பிரதமர் நரேந்திர மோடியைசந்தித்து இந்த விஷயம் குறித்துப் பேசினார். “இந்த அணுசக்திப் பொருட்களால் கங்கை நீர் மாசுபடுகிறது. கங்கை நதியே அபாயத்தில் இருக்கிறது. இவற்றைக் கண்டுபிடித்துஅகற்ற வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்தார். அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உளவுக் கருவிகளைப் பொருத்துவதற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ அதிகாரிகளை அழைத்துக்கொண்டு சென்ற இந்திய உளவுத்துறைக் குழுவுக்குத் தலைமை ஏற்றவர்மன்மோகன் சிங் கோலி. 88 வயதாகும் இவர் இப்போது தில்லியில் வசிக்கிறார். ‘இந்தக் கருவிகளை முறையாகப் பொருத்தவில்லை. அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்தோம். தனித்தனியாக இருக்கும் அவற்றால் எந்த ஆபத்தும் இல்லை’ என்கிறார் அவர்.ஆனால், “இந்த அணுசக்திப் பொருட்களின் வெப்பம்தான் பனிப்பாறையை உருகி உடையச் செய்தது” என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். “பனிப்பாறைகள் உடைந்துதிடீர் வெள்ளம் வந்தபோது, கடுமையான துர்நாற்றம் அடித்தது. எங்களால் மூச்சுவிடவே முடியவில்லை. வெறும் பனிப்பாறைகள் இப்படி நாற்றம் அடிக்காது. எல்லாமே மர்மமாக இருக்கிறது” என்கிறார்கள் மக்கள்.அணுக் கதிர்வீச்சின் ஆபத்து குறித்து உலகமே பேசுகிறது. இந்தியாவின் பெரும்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் கங்கை நதியின்மடியில் இப்படி ஒரு மோசமான அணுசக்திப் பொருளை  வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;