india

img

ஊடக சுதந்திரத்தை வேட்டையாடும் இந்தியப் பிரதமர்.... சர்வதேச அளவிலான ஊடகக் கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு....

புதுதில்லி:
சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் அரசியல்  தலைவர்களின் (Press Freedom Predators) பட்டியலை ஆர்எஸ்எப் என்று அழைக்கப்படும் ‘எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு’ (Reporters Sans Frontieres - RSF) வெளியிட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் மொத்தம் 37 தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.“ஊடக செய்திகளுக்கு தணிக்கை முறையை ஏற்படுத்துவது, பத்திரிகையாளர்களைச் சிறையில் தள்ளுவது அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது; நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்தியாளர்களின் மரணத்திற்கு காரணமாக அமைவது போன்ற உலகத் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மேற்கண்ட பட்டியலை சர்வதேச ஊடகக் கண்காணிப்புக் குழுவான ‘ஆர்எஸ்எப்’ தயாரித்து உள்ளது.சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உள்ளிட்ட 20 பேர் ஏற்கெனவே பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்ற நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பாகிஸ்தான் பிரதமர்இம்ரான் கான், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் மற்றும் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஆர்பன், ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாமு ஆகிய 2 பெண் தலைவர்கள் உட்பட 17 பேர் புதிதாக பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பட்டியலை வெளியிட்டுள்ள ஆர்எஸ்எப், பிரதமர் மோடி மீது நீண்ட குற்றப்பத்திரிகையையும் வாசித்துள்ளது.“இந்திய பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற நாள் முதல் ஊடக சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து வருகிறார். கடந்த 2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்ற மோடி, அந்த மாநிலத்தை செய்தி மற்றும் தகவல்களை கட்டுப்படுத்தும் ஆய்வுக் கூடமாக மாற்றினார். பிரதமரான பின்பு முன்னணி ஊடகங்களில் சாமானிய மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல தேசியவாதப் பேச்சுகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அதிகப்படியாக பரப்புவதை வேலையாகக் கொண்டிருந்தார். 

ஊடக நிறுவனங்களை நடத்தும் பெரு முதலாளிகளுடன் மோடி நட்பு பாராட்டியதால் அவற்றில் பணிபுரிவோர் பிரதமர் மோடியை விமர்சிக்க அஞ்சுகின்றனர். மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தை விமர்சித்தால் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் வேலை இழக்க நேரிடும் நிலை உள்ளது. பார்வையாளர்களைப் பெறுவதற்காக பிரதமர் மோடியின் பிளவுபடுத்தும் மற்றும் கேவலமான பேச்சுகளுக்கு சில ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பதும் நடக்கிறது. அதையும் மீறி மோடிக்கு எதிராக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் இந்தியாவில் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். அவர்கள் ‘மோடி யோதா’ (மோடியின் அடியாட்களால்) இணையதள தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். அந்த இணையதள பூதங்கள் தங்களுக்குப் பிடிக்காத பத்திரிகையாளர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பயங்கரமான வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்” என்று ஆர்எஸ்எப் கூறியுள்ளது.

கர்நாடகத்தில் பெண் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது மற்றும் ராணா அய்யூப் மற்றும் பார்கா தத் ஆகியோர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என பாஜக-வினரால் இணைதளங்களில் மிரட்டப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.கடந்த 2021 ஏப்ரலில், உலக அளவிலான பத்திரிகை சுதந்திர குறியீட்டு அட்டவணையை (WorldPress Freedom index), இதே எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டிருந்தது. மொத்தம் 180 நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில், நேபாளம், இலங்கை ஆகிய அண்டை நாடுகள் கூட இந்தியாவைக் காட்டிலும் நல்ல நிலையில் இருந்தன.நேபாளம் 106-ஆவது இடத்திலும், இலங்கை 127-ஆவது இடத்திலும், ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் 140-ஆவது இடத்திலும் இருந்தன. ஆனால், இந்தியா மிகமோசமான வகையில் 142-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது.

அப்போதும், ‘தீவிர வலதுசாரி இந்து தேசியவாதத்திற்கு வழிவகுத்த சித்தாந்தமான இந்துத்துவத்தை ஆதரிக்கும் இந்தியர்கள், பொது விவாதத்திலிருந்து ‘தேச விரோத’ சிந்தனையின் அனைத்து வெளிப்பாடுகளையும் தூய்மைப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களைப் பற்றி பேசவோ எழுதவோ துணிந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக வெளிப்படையான தாக்குதலுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். இந்தியப் பிரதமர் மோடியும் ஊடகங்கள் மீதான தனது பிடியை இறுக்கி வருகிறார். 2020-ஆம் ஆண்டில் நான்கு பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகள் தொடர்பாக கொல்லப்பட்ட நிலையில், பத்திரிகையாளர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முயற்சிக்கும் உலகின்மிக ஆபத்தான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது’ என்று ஆர்எஸ்எப் கூறியிருந்தது. தற்போது இந்த விவரங்களை ஆர்எஸ்எப் அமைப்பு மீண்டும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

;