india

img

12 சதவிகிதமாக அதிகரித்த நகர்ப்புற வேலையின்மை.... கிராமப்புறத்தில் 7.29 சதவிகிதத்தை தொட்டது....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ்தாக்குதலின் இரண்டாவது அலை, கணிக்க முடியாத தொற்றுப் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.மத்திய பாஜக அரசின் மோசமான தடுப்பூசிக் கொள்கையால், நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்காத நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த வேறு வழியே இல்லாமல், நாட்டின்பெரிய மாநிலங்கள் அனைத்திலும்பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள் ளது.

அத்தியாவசியத் துறைகள் தவிர மற்றதுறைகள் இயங்கத் தடை விதிக்கப்பட் டுள்ளதால், தில்லி, மும்பை, சென்னை,கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் என நாட்டின் முக்கிய நகரங்களில் வர்த்தகம், உற்பத்தி சார்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டு, பல லட்சம் பேர்வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்நிலையிலேயே, ஏப்ரல் மாதத்தில்,இந்தியாவில் நகர்ப்புற வேலையின்மை விகிதமானது 12 சதவிகிதத்தை நெருங்கியுள்ளதாகவும், இது கடந்த 10 மாதங்களில்இல்லாத அதிகரிப்பு என்றும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.55 சதவிகிதமாக இருந்த வேலையின்மை, மே 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.72 சதவிகிதத்தைத் தொட்டுள்ளதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மைய (CMIE) ஆய்வு தெரிவிக்கிறது. தேசியஅளவிலான வேலையின்மை விகிதமும்,மே 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.67 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.கிராமப்புற வேலையின்மை விகிதத்தைப் பொறுத்தளவில், அதுவும் மே 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்6.37 சதவிகிதத்தில் இருந்து 7.29 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில்தேசிய வேலையின்மை விகிதம் 24 சதவிகிதமாகவும், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 27.83 சதவிகிதமாகவும் இருந்தது. அந்த வகையில், கடந்தாண்டைக் காட்டிலும் தற்போதைய நிலைமை பரவாயில்லை என்றாலும், கடந்தமுறை நாடு தழுவிய பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தற்போது அப்படிப்பட்ட நிலைமை இல்லை என்பதை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேநேரம், மாநில அரசுகள் பிறப்பித்துள்ள பொதுமுடக்க கால அளவுமேலும் நீட்டிக்கப்படுமானால், தற்போதைய வேலையின்மைப் பிரச்சனை மோசமடையச் செய்வதோடு, பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

;