india

img

பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்... பிரதமருக்கு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கடிதம்....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பிரதமருக்கு விவசாயிகள் சங்க கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா  கடிதம் எழுதியுள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் 6 மாதங்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ளாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று விவசாயிகள் சாடுகின்றனர். விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் மோடி அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது.போராட்டம் தொடங்கி 6 மாதங்களாகவுள்ளதை குறிக்கும் வகையில் மே 26-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில்,  3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆறு மாத காலமாக இரவும் பகலும் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். கடுமையான சீதோஷ்ண நிலை, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் எங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 470 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர். விவசாயிகளின் நியாயமான கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்காக மே 26 ஆம் தேதி வரை அவகாசம் தருகிறோம். அதற்கு மேலும் அரசிடம் இருந்து நல்ல பதில் வரவில்லை என்றால், பெரிய அளவிலான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

;