india

img

ஹரியானா பாஜக அரசின் போலீஸ் காட்டுமிராண்டித் தாக்குதல்.... விவசாயி சுசில் கஜால் உயிரிழந்தார்.... அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்...

புதுதில்லி:
ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின் மீது காவல்துறையினர் கட்டவிழ்த்துவிட்ட கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த 55 வயது விவசாயி சுசில் கஜால் சிகிச்சைபலனின்றி மரணமடைந்தார். இச்சம்பவம் ஹரியானா உள்ளிட்ட வடமாநில விவசாயிகளிடையே, மோடி அரசுக்கு எதிராகவும் மாநில பாஜக அரசுக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி சுசில் கஜால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானா பாஜக அரசின் காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனம் முழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹரியானா மாநிலம் கர்னால் நகரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறை கொடூரத் தாக்குதல் நடத்தியதன் விளைவாக விவசாயி சுசில் கஜால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆழ்ந்த அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது. 55வயதான சுசில்கஜால் விவசாயிகள் எழுச்சியில் தமதுஉயிரை தியாகம் செய்துள்ளார். ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம்ராய்ப்பூர் ஜதன் எனும் கிராமத்தை சேர்ந்த விவசாயியான இவர், ஆகஸ்ட் 28 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையின் தடியடிதாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர் இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஆகஸ்ட் 29 ஞாயிறன்று காலை அவரது இறுதி நிகழ்ச்சி நடந்தது.விவசாயி சுசில் கஜால், கடந்த 9 மாத காலமாக நடைபெற்று வரும் மாபெரும் விவசாயிகள் எழுச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிற விவசாயிகளில் ஒருவர் ஆவார். 

கடந்த 9 மாத காலமாக வரலாற்று சிறப்புமிக்க பேரெழுச்சியை நடத்தி வரும் விவசாயிகள் மீது ஹரியானா மாநில பாஜக-ஜேஜேபி அரசு மிகப்பெரிய யுத்தத்தையே கட்டவிழ்த்து விட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளது. தேச துரோக வழக்குகள் உள்பட கொடிய சட்டங்களின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த அரசின் இரத்தவெறி பிடித்த ஒடுக்குமுறைக்கு விவசாயி சுசில் கஜால் தனது இன்னுயிரை ஈந்துள் ளார். இந்த தாக்குதலை நடத்திய கர்னால்சார் ஆட்சியர் ஆயுஷ் சின்கா மீது கொலைவழக்கு பதிவு செய்து, அவர் உடனடியாக பணிநீக்கம்செய்யப்பட வேண்டும் என்று அகிலஇந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. அவர்தான் கர்னாலில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் “மண்டையை உடையுங்கள்” என்று கொக்கரித்து காவல்துறையை தாக்குதல் நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தவர். அவர் அப்படி உத்தரவு போடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக மாறி கடும் கண்டனக் கணைகளைப் பெற்றுள்ளது.

ஒரு சார் ஆட்சியராக இருப்பவர் அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து ஒப்புதல் ஏதும் இல்லாமல் இத்தகைய கொடூரமான உத்தரவினை பிறப்பிக்க மாட்டார் என்பது நாம் அறிந்ததே.  சனிக்கிழமையன்று விவசாயிகள் ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் கர்னால் நகரில் பங்கேற்ற ஓர் நிகழ்ச்சிக்கு எதிராக அமைதிப் பேரணி நடத்திய போதுதான், காவல்துறையினர் இத்தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர். இத்தகைய தாக்குதல், சுதந்திரப் போராட்டக் காலத்தின் போதுஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு உத்தரவு பிறப்பித்த பிரிட்டிஷ் ஜெனரல் டயரை நினைவூட்டுகிறது. அதுபோல, தங்களது அரசியல் எஜமானர்களின் ஈவிரக்கமற்ற உத்தரவுகளுக்கு இணங்க விவசாயிகளின் அமையான போராட்டத்தின்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இத்தாக்குதல் குறித்து விரிவான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்என விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. 

மேலும், கர்னால் சார் ஆட்சியர் ஆயுஷ் சின்கா உத்தர விடுவதை அம்பலப்படுத்தியுள்ள அதிர்ச்சிகரமான வீடியோவை ஆதாரமாகக் கொண்டு இத்தாக்குதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்; விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு காரணமாக இருந்த அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் உடனடியாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுக்
கிறது.இத்தாக்குதலைக் கண்டித்து, சம்யுக்த கிஷான் மோர்ச்சாவின் அழைப்பின் பேரில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் திங்களன்று பெரும் போராட்டங்கள் நடந்துள்ளன. விவசாயி சுசில் கஜாலின் தியாகத்தை மக்களிடையே எடுத்துச் செல்லும் விதமாகவும் ஹரியானா மாநில அரசின்காட்டுமிராண்டித்தனமான ஒடுக்கு முறையைக் கண்டித்தும் நாடு முழுவதும் போராட்ட இயக்கங்களை நடத்துமாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

 தொடர்புடைய செய்தி...

மண்டை உடையாத விவசாயி ஒருவர் கூட இருக்கக்கூடாது: கர்னால் சார் ஆட்சியர் வெறிப் பேச்சு...  (6-பக்கம் பார்க்க)

;