india

img

கடுமையாகச் சரிந்தது, மோடியின் செல்வாக்கு.... அமெரிக்காவின் ‘மார்னிங் கன்சல்ட்ஸ்’ நிறுவன ஆய்வு மீண்டும் உறுதிப்படுத்தியது....

வாஷிங்டன்:
கொரோனா தொற்றின் 2-ஆவது அலைவிவகாரத்தில், இந்தியப் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையின்மை, அவரது செல்வாக்கில் கடும் சரிவை ஏற்படுத்தி இருப்பதாக அமெரிக்க புலனாய்வு தரவு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்ஸ் டிராக்கர்’ (Morning Consult’s tracker) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

2021 ஏப்ரலில் மட்டும், நரேந்திர மோடியின் செல்வாக்கு 22 புள்ளிகள் சரிந்து, 63 சதவிகிதம் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாக ‘மார்னிங் கன்சல்ட்ஸ்’ கூறியுள்ளது.இந்தியப் பிரதமர் மோடி ‘குளோபல் லீடர்ஸ்’ பட்டியலில் உள்ள நிலையில், அவரது செல்வாக்கு குறித்த கணிப்பை, அமெரிக்காவைச் சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்ஸ் டிராக்கர்’ நிறுவனம் அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், உலகிலேயே அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்ற தலைவர்மோடி என்றும், 2019 ஆகஸ்ட் முதல் 2021ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மோடியின் மக்கள் செல்வாக்கு 80 சதவிகிதம் என்றும் இதே நிறுவனம் முன்பு ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது. 13 நாடுகளில் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருந்தது.அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், இந்த ஆய்வு முடிவை வைத்துக் கொண்டு, ‘பிரதமர் மோடி உலகத் தலைவராகி விட்டார்’ என்று குதூகலித்தனர். ஆனால், அதே ‘மார்னிங் கன்சல்ட்ஸ்’ நிறுவனம்தான் தற்போது மோடியின் செல்வாக்கு கடுமையாக சரிந்து விட்டதுஎன்று கூறியுள்ளது.80 சதவிகிதமாக இருந்த மோடியின் செல்வாக்கு 2021 ஏப்ரலில் சுமார் 13 சதவிகிதம் குறைந்து, 67 சதவிகிதம் ஆகி விட்டதாக கூறியிருந்த ‘மார்னிங் கன்சல்ட்ஸ்’ தற்போது அதில், மேலும் 4 சதவிகிதம் சரிந்து, 63 சதவிகிதத்திற்கு வீழ்ச்சி அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

அதேபோல கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை தாக்கியபோது, அதனைப் பிரதமர் மோடி திறமையாகக் கையாண்டு சமாளித்து விட்டார் என்று சுமார் 79 சதவிகிதம் பேர் கூறியிருந்தனர். ஆனால், 2-ஆவது அலையைப் பொறுத்தவரை, மோடிஅதனை திறமையாக கையாண்டார் என்றுகூறியவர்களின் எண்ணிக்கை 59 சதவிகிதமாக குறைந்து விட்டதாகவும் ‘மார்னிங் கன்சல்ட்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.கடந்த முப்பது ஆண்டுகளில் எந்தவொரு இந்திய அரசியல்வாதியைக் காட்டிலும், மிகப்பெரிய அறுதிப் பெரும்பான்மையுடன் 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்து, 2019-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி,தானொரு சக்திவாய்ந்த தேசியத் தலைவர் என்ற பிம்பத்தை நீண்டகாலமாக தக்கவைத்து வருகிறார். ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.5 கோடியைத்தாண்டியது; இந்தியாவின் தலைநகரான தில்லி, வர்த்தகத் தலைநகரான மும்பை, தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூடகொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் போனது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் சப்ளைசெய்ய முடியாமல் திணறியது ஆகியவை, நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமை யின்மையை அம்பலப்படுத்தி, அவரது ஆதரவு தளத்திலும் அரிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ‘மார்னிங் கன்சல்ட்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

                           *******************

7 ஆண்டுகளில் முதல்முறையாக மக்கள் மத்தியில் அதிருப்தி

‘மார்னிங் கன்சல்ட்ஸ்’ நிறுவனத்தைப் போலவே, இந்தியாவில் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வரும் ‘சிவோட்டர்’ நிறுவனம் நடத்திய ஆய்விலும் மோடியின் செல்வாக்கு சரிந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.மோடியின் செயல்திறன் குறித்து ‘மிகவும் திருப்தி’அடைந்தவர்களின் எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்புசுமார் 65 சதவிகிதமாக இருந்த நிலையில், அது, தற்போது 37 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாக, இப்போதுதான் மோடி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்து திருப்தி தெரிவித்தவர்களின் எண்ணிக்கையை விடஅதிருப்தி தெரிவித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

‘பிரதமர் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய அரசியல் சவாலை எதிர்கொள்கிறார்’ என்று ‘சிவோட்டர்’ நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.ஒப்பீட்டளவில், மோடியின் செல்வாக்கில் சரிவுஏற்பட்டிருந்தாலும், இப்போதும்கூட நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக மோடிதான் இருக்கிறார்... கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடி அரசுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை எதிர்க்கட்சியால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றும் அது கூறியுள்ளது.

;